பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #41
கிருஷ்ணா அதர்மம் அதிகமாக பெருகுவதால் குலப்பெண்களின் நடத்தை கெடுகிறது வர்ணங்களில் கலப்பு உண்டாகிறது.
இந்த சுலோகத்தில் முதல் கேள்வி: குலப் பெண்கள் என்று இந்த சுலோகத்தில் சொல்லப்படுவது யார்?
ஒருவர் ஒரு தொழிலை செய்து கொண்டிருக்கிறார். அவரை பின்பற்றி அவரின் வாரிசுகள் அந்த தொழிலை சிறுவயதில் இருந்தே அவருடன் இருந்து கற்றுக் கொண்டு அதனை தொடர்ந்து செய்து வருகிறார்கள். அவர்களை தொடர்ந்து அவர்களது வாரிசுகள் என்று தலை முறை தலைமுறையாக ஒரே தொழிலை செய்து வருவார்கள். ஒரு குறிப்பிட்ட தொழிலை தொன்று தொட்டு பாரம்பரியமாக செய்பவர்கள் ஒரு குழுவாக செயல்பட்டு ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டு செயல்படுவார்கள். அவர்கள் தங்களின் தொழிலுக்கு எற்றபடி ஒரு தர்மத்தை அமைத்துக் கொண்டு அதன்படி ஒரு குறிப்பிட்ட இறைவழிபாட்டு முறைகளையும் ஒழுக்க முறைகளையும் கடைபிடித்து வருவார்கள். இவர்களின் மூதாதையர்களின் பெயரை இந்த குழுவுக்கு பெயராக சூட்டி இந்த குலத்தின் வழியாக வந்த தர்மங்களையும் தொழில்களையும் கடைபிடித்துக் கொண்டு குழுவாக செயல்படுவார்கள். ஒவ்வொரு குழுவைச் சேர்ந்தவர்களும் ஒரு குலத்தை சேர்ந்தவர்களாக கருதப்பட்டார்கள். தங்களின் குழுக்களில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கு திருமண வயது வந்ததும் தங்கள் குலத்தைப் போன்றே தொழில் செய்து வரும் வேறு குழுக்களில் உள்ளவர்களுடன் பெண் கொடுத்து பெண் எடுத்து திருமணம் செய்து வைப்பார்கள். இவர்களது தலைமுறை வளர்வதற்கு காரணமான திருமணமான பெண்கள் குலப் பெண்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.
இந்த சுலோகத்தில் 2 வது கேள்வி: வர்ணங்கள் என்றால் என்ன?
பிறப்பால் வர்ணங்கள் இல்லை அவர்களின் செயலினால் மட்டுமே என்பதை மனு தர்மம் சொல்கிறது. பிறப்பால் அனைவரும் சமமே தர்ம செயல்களை செய்வதாலும் நற்குணங்களை வளர்த்துக் கொள்வதாலும் மட்டுமே ஒருவன் மேன்மையான நிலைக்கு உயர்கிறான் என்று பகவத்கீதை சொல்கிறது. நம்முடைய வேதத்தில் இருக்கும் சில சமஸ்கிருத மந்திரங்களுக்கு பொருள் தவறாக அனைவருக்கும் கற்பிக்கப்பட்டிருக்கின்றது. அதன் சரியான விளக்கம்
வேதம் நல்லொழுக்கம் நீதி இவற்றை கடைபிடிப்பவனும் இதனை அடுத்தவருக்கு எடுத்துரைப்பவனுக்கும் மனம் வலிமையுடன் இருக்க வேண்டும். மனம் வலிமையடைந்தால் அவனது முகமானது ஞானம் பெருகி தேஜசாக இருக்கும். மனமானது நெற்றியின் நடுவே உள்ளது. மனதை வலிமையானதாக வைத்திருப்பவர்கள் அனைவரும் பிராமணன் ஆவார்கள்.
ராஜாங்கத்தைக் கட்டிக்காக்கும் ஒரு சத்ரியனுடைய தோளானது பிரம்மதேவரின் தோள் போல வலிமையானதாக இருத்தல் வேண்டும். அப்போது தான் அவனால் போர்க் கலையில் சிறந்து விளங்கி எதிரிகளிடமிருந்து தனது குடி மக்களை திறம்பட காத்திட முடியும். தோள் வலிமையுடன் இருப்பவர்கள் அனைவரும் சத்ரியன் ஆவார்கள்.
வைசியனானவன் வாணிபம் செய்பவன். பல ஊர்களுக்கு நடந்து செல்ல வேண்டும். பல நாட்கள் நடப்பதற்கு வலிமையான தொடை இருக்க வேண்டும். வலிமையான தொடைகளுடன் இருப்பவர்கள் அனைவரும் வைசியன் ஆவார்கள்.
சூத்திரர்கள் உடல் உழைப்பால் வேலை செய்பவர்கள் மற்றும் வயல்களில் வேலை செய்து இந்த லோக உயிர்களுக்கு பசியாற்ற வேண்டிய உணவு உற்பத்திக்கு பாடுபடுபவர்கள். விவசாயம் செய்ய அவனுக்கு சோர்வில்லாத வலிமையான பாதங்கள் வேண்டும். வலிமையான பாதங்களுடன் இருப்பவர்கள் அனைவரும் சூத்திரன் ஆவார்கள்.
தற்போது சொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் பொய்யான விளக்கம்
பிரம்மாவின் நெற்றியில் இருந்து பிராமணன் பிறந்தான்
பிரம்மாவின் தோளில் இருந்து சத்திரியன் பிறந்தான்
பிரம்மாவின் தொடையில் இருந்து வைசியன் பிறந்தான்
பிரம்மாவின் பாதத்தில் இருந்து சூத்திரன் பிறந்தான்
இந்த சுலோகத்தில் 3 வது கேள்வி: குலப்பெண்களின் நடத்தை என்று சொல்லப்படுவது என்ன?
ஒரு குறிப்பட்ட தொழிலை செய்யும் குலத்தில் வளரும் பெண்கள் அந்த தொழிலை செய்யும் குலத்திற்கு என்று இருக்கும் தொழில் மற்றும் வழிபாட்டு முறைகள் மற்றும் அவர்களது குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் சொல்லிக் கொடுத்த ஒழுக்க முறைகள் மட்டுமே தெரிந்து வைத்திருப்பார்கள். வேறு தொழிலை செய்யும் குலத்தில் உள்ளவர்களின் வழிபாட்டு முறைகளும் ஒழுக்க முறைகளும் அவர்களுக்குத் தெரியாது.
உதாரணத்திற்கு ஒருவர் உடல் உழைப்பால் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு என்று இருக்கும் குலத்தில் வழி வழியாக வந்த தொழில் முறைகளையும் தர்மங்களையும் வழிபாட்டு முறைகளையும் மட்டுமே தங்கள் வீட்டில் உள்ள பெண்களுக்கு சொல்லிக் கொடுத்திருப்பார்கள். விவசாயம் செய்பவர்கள் வீட்டில் இருக்கும் பெண்கள் நிலத்தில் விவசாயத்திற்கு உதவி செய்வார்கள். விவசாயத்தை பற்றி நன்றாக அறிந்து வைத்திருப்பார்கள். விவசாயத்திற்கு ஏற்ற சூரிய வழிபாட்டு முறைகளும் தங்களின் தொழிலுக்கு உதவி செய்யும் காளைமாடு போன்ற உயிரினங்களை எப்படி பாதுகாப்பது என்பதும் அவற்றை தெய்வங்களாக வழிபடுவது பற்றியும் மட்டுமே தெரியும்.
வேறு ஒருவர் வாணிபம் செய்து வருகிறார். அவர் ஊர் ஊராக சென்று வியாபாரம் செய்வார். அவர் வியாபாரம் செய்ய பல ஊர்களுக்கு செல்வதால் பல நாட்கள் வீட்டில் இருக்க மாட்டார். வாணிபத்திற்கு ஏற்ற பொருளை வீட்டில் வைத்திருப்பார். அதனை பாதுகாப்பது பற்றி அவர்களது வீட்டில் உள்ள பெண்கள் அறிந்து வைத்திருப்பார்கள். அவரின் தொழிலுக்கு பொதி சுமக்க உதவி செய்யும் குதிரைகள் கழுதைகள் போன்ற உயிரினங்களை எப்படி பாதுகாப்பது என்பது மட்டுமே தெரியும்.
இப்போது இந்த இரண்டு வர்ணங்களில் உள்ள பெண்கள் வர்ணம் மாறி வேறு ஒரு தொழில் செய்யும் குலத்தில் உள்ளவரை திருமணம் செய்து கொண்டால் புதிதாக அவர்களது வீட்டிற்கு செல்லும் பெண் அந்த வீட்டில் உள்ள தொழில் முறைகள் ஒழுக்க முறைகள் பற்றி ஒன்றும் தெரியாது. வீட்டிற்கு வந்த பெண் தொழிலுக்கு ஏற்ற வேலைகளை செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஆணுக்கு இருக்கும். இதனை செய்ய அந்தப் பெண் முயற்சி செய்தாலும் கற்றுக் கொள்ள நாட்கள் ஆகும். வேலை செய்யும் போது பல தவறுகள் ஏற்படும். இதனால் குடும்பத்தில் உள்ளவர்களுடன் சண்டையிட நேரிடும். கணவனுடன் சண்டையிட நேரிடும். இதற்கு ஆணும் தானை காரணம் என்று பலர் கேட்கலாம். ஆனால் இங்கு ஆண் இருக்கும் வீட்டிற்கே பெண் வருகிறாள். இந்த ஆண் தனக்கு உண்டான வேலையை சரியாக இங்கு செய்து விடுகிறான். ஆனால் வந்திருக்கும் பெண்ணால் சரியாகச் செய்ய முடியவில்லை எனவே சண்டை ஏற்படுகிறது. புகுந்த வீட்டில் சண்டை ஏற்பட காரணமான பெண்ணிற்கு அங்கே நடத்தை சரியில்லை என்ற பேச்சு அங்கே உருவாகிறது. அனைத்திற்கும் மூல காரணம் வர்ணம் மாறி திருமணம் செய்ததே ஆகும். இவற்றையே இந்த சுலோகம் சொல்கிறது.
குறிப்பு: இந்த சுலோகத்தில் சொல்லப்பட்ட பல கருத்துக்களுக்கான விளக்கங்கள் பின் வரும் தலைப்புகளில் உள்ள சுலோகங்களில் மேலும் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.