அர்ஜூனன் இறைவனுக்கு பூஜைகளை தவறாமல் செய்பவன். தினமும் பூஜை செய்து முடியும் வரையில் சிறிது உணவையும் உண்ண மாட்டான். இதனால் உலகத்தில் தன்னை விடச் சிறந்த பக்தர் யாரும் இல்லை என்று அகந்தை கொண்டிருந்தான். பீமனைப் பார்க்கும் போதேல்லாம் இவன் பூஜைகள் எதுவும் செய்வதில்லை. எந்நேரமும் தூங்குவதிலும் உணவு உண்பதிலும் ஆர்வம் காட்டுகிறான் என்று எண்ணி நகைப்பான் அர்ஜூனன். இதனை அறிந்த கிருஷ்ணர் அர்ஜுனனிடம் இந்த அகந்தை போக்க எண்ணி சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தார். பாரதப் போரில் தாங்கள் வெற்றி பெற வேண்டும் என நினைத்த அர்ஜுனன் அதற்கு வழி காட்டுமாறு கிருஷ்ணனை கேட்டுக் கொண்டான். சிவபெருமானை சந்தித்து அவரின் ஆசி பெற்று வரலாம் வா என்று அர்ஜூனனை கயிலை மலைக்கு அழைத்துச் சென்றார் கிருஷ்ணர். பனியால் மூடப்பட்டிருந்த கயிலை மலைப் பகுதியில் புல் பூண்டு கூட முளைப்பது இல்லை. ஆனால் அந்த வழியெங்கும் மலர்கள் குவிந்த வண்ணமே இருந்தன.
சிவ கணங்கள் குவியும் மலர்களை அப்புறப்படுத்திக் கொண்டே இருந்தார்கள். ஒருமுறை அப்புறப்படுத்தப்பட்ட இடத்தில் மறுகணமே மலர்கள் குவிந்து கொண்டிருந்தது. மலர்களை அள்ளி அள்ளி அப்புறப்படுத்திக் கொண்டு இருந்தார்கள் சிவகணங்கள். இக்காட்சியைக் கண்ட அர்ஜுனன் கிருஷ்ணரிடம் பனி மூடிய பகுதியில் மலர்கள் மலர இயலாது. ஆனால் மலர்கள் மலை போல் இங்கு குவிந்து கொண்டே இருக்கின்றன. மலர்கள் தானாக எப்படி இங்கு வர இயலும்?இக்காட்சி வியப்பாக உள்ளது. இது எப்படி என்று கேள்வி கேட்டான். அதற்கு கிருஷ்ணர் இம்மலர்கள் இங்கு பூப்பவை அல்ல. பக்தன் ஒருவன் பூக்களை வைத்து இறைவனுக்கு பூஜிக்கிறான். அங்கு சமர்ப்பிக்கும் பூக்கள் அனைத்தும் இங்கு மலை போல் குவிக்கின்றன என்றார். அதற்கு அர்ஜூனன் ஒரு மனிதன் சில நிமிடங்களில் மலை போல் குவியும் இவ்வளவு பூக்களை எப்படி இறைவனுக்கு சமர்ப்பித்து வழிபட இயலும். நானும் தினமும் பூஜை செய்கிறேன். யாராலும் இவ்வளவு பூக்களை வைத்து பூஜை செய்வது என்பது இயலாத காரியம் எப்படி இது சாத்தியம். யார் அந்த பக்தன் என்று மீண்டும் கேள்வி கேட்டான்.
பீமன் இறைவனுக்கு அர்ச்சனை செய்த மலர்கள் தான் இவை அனைத்தும். பீமன் இறைவனுக்கு அர்ச்சனை செய்ய செய்ய இங்கு மலர்கள் குவிக்கின்றன என்றார் கிருஷ்ணர். பீமன் இறைவனுக்கு அர்ச்சனை செய்கிறானா? அவனுக்கு அர்ச்சனை செய்ய நேரம் ஏது? உணவு உண்ணவே நேரம் போதவில்லை. அப்படியிருக்கும் போது அவன் எப்போது அர்ச்சனை செய்தான்? அப்படியே அர்ச்சனை செய்தாலும் அதை ஒரு நாளும் நான் பார்த்ததில்லை. நான் மட்டும் இல்லை யாருமே பார்த்தது இல்லை. இப்படியிருக்க நீ கூறுவதை எப்படி நம்புவது? என்றான் அர்ஜூனன்.
அர்ஜுனா பீமன் அர்ச்சனை செய்வதை யாரும் பார்க்கவில்லை. பார்க்கவும் முடியாது. ஏனெனில் அவன் உன்னைப் போல் மற்றவர்களைப் போல இறைவனின் உருவத்தை வைத்துக் கொண்டு மந்திரங்கள் ஓதி மலர்கள் தூவி அர்ச்சனை செய்வதில்லை. அவன் செய்யும் பூஜைகள் அர்ச்சனைகள் அனைத்தும் மானசீகமானது. அவன் மனதிற்குள்ளேயே செய்கிறான். அவன் எங்காவது சென்று கொண்டு இருக்கும் போது கண்ணில் பட்ட மலர்களைப் பார்த்து இவை தெய்வ அருச்சனைக்கு உரியவை ஆகட்டும் என்று மனத்தால் நினைப்பான். உடனே அந்த மலர்கள் அனைத்தும் இங்கே வந்து மலை மலையாகக் குவிந்து விடும். மற்றவர்கள் நினைப்பது போல் பீமன் சாப்பிட்டுக் கொண்டிருப்பவன் அல்ல. சிறந்த தெய்வ பக்தன். ஆஞ்சனேயர் அம்சம். ஆஞ்சனேயரின் ராம பக்தி உலகறிந்தது. பக்தியில் பீமனோடு உன்னை ஒப்பிடும் போது நீ பக்தனே அல்ல. சிறந்த பக்தனான பீமனை நீ அடிக்கடி ஏளனம் செய்வதை நான் அறிவேன். இனியாவது ஏளனம் செய்வதை விட்டு விடு. நீ தான் சிறந்த பக்தன் என்ற அகந்தை உன்னிடம் உள்ளது. இறை பக்திக்குப் பெரும் தடையாக இருப்பது உன்னுடைய அகந்தை. உன்னுடைய அகந்தையை விட்டுவிடு என்றார். கிருஷ்ணரின் உபதேசத்தால் அர்ஜுனனிடம் இருந்த அகந்தை என்ற அரக்கன் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போனது. அர்ஜூனன் அன்று முதல் பீமனிடம் மிக்க பணிவுடன் நடந்து கொண்டான்.