ராமர் சீதை லட்சுமணன் மூவரும் அடர்ந்த தண்டகாரண்ய காட்டிற்குள் சென்றனர். சீதை அங்கே இருந்த அழகிய மலர்களை பார்த்து மகிழ்ந்து கொண்டே நடந்தாள். சிறிது தூரத்தில் வேத மந்திரங்கள் கேட்டது. சத்தம் வரும் திசை நோக்கி சென்றார்கள். அங்கே மிருகங்களும் பறவைகளும் ஒற்றுமையுடன் பயமின்றி சுற்றிக்கொண்டிருந்தன. அங்குள்ள ரிஷிகள் ராமரைக் கண்டதும் மகிழ்ந்து வரவேற்று உபசரித்தனர். ராமர் அன்று இரவு தங்குமாறு கேட்டுக்கொண்டனர். உபசாரங்கள் அனைத்தும் முடிந்ததும் ராமரிடம் விண்ணப்பம் ஒன்று செய்தார்கள். தாங்கள் தர்மத்தை காப்பற்றுகின்றவர். கீர்த்தி மிக வாய்க்கப்பெற்றவர். நாட்டில் இருந்தாலும் காட்டில் இருந்தாலும் தாங்களே அரசர். இக்காட்டில் எங்களை துன்புறுத்தும் கொடிய அரக்கர்களிடம் இருந்து எங்களை காப்பாற்றுங்கள் என்று கேட்டுக் கொண்டனர். ராமர் ரிஷிகளிடம் நீங்கள் மிகப்பெரும் தபஸ்விகள். உங்கள் தவத்தின் சக்தி அளவிட முடியாதது. சாபத்தை இட்டு அரக்கர்களை அழித்துவிடலாமே என்றார். இதனைக்கேட்ட ரிஷிகள் நாங்கள் கோபத்தை வென்று விட்டவர்கள். புலன்களை வென்றவர்கள். எங்களுக்கு கோபம் வராது. நாங்கள் சாபமிட்டால் எங்களின் தவவலிமை குன்றிவிடும். தவம் செய்வதை தவிர எங்களுக்கு வேறு ஒன்றும் தெரியாது. எங்களை காப்பாற்றுங்கள் என்று முறையிட்டார்கள். அவர்களின் வேண்டுகோளை ஏற்ற ராமர் அன்று இரவு அங்கே தங்கினார்.
அதிகாலை ரிஷிகளிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டு அடர்ந்த காட்டிற்குள் சென்றார்கள். காட்டிற்குள் பெரிய மலை போன்ற ரட்சசன் ஒருவன் மூவரின் முன்னே வந்து நின்றான். அவன் வடிவம் கோரமாக இருந்தது. கையில் ஒரு சூலாயுதம் இருந்தது. அதில் அப்போது தான் கொல்லப்பட்ட சிங்கத்தின் தலையும் யானையின் தலையும் தொங்கிக்கொண்டு இருந்தது. இடி இடித்தாற் போல் கர்ஜனை செய்தான். நான் விராதன் அரக்கன். யாரும் உள்ளே வர முடியாத காட்டிற்குள் இருக்கும் ரிஷிகளை கொன்று தின்று சுற்றிதிரிவேன். இன்று உங்களையும் இப்போதே கொன்று சாப்பிடப்போகின்றேன். நீங்கள் பார்க்க பாலகர்கள் போலிருக்கின்றீர்கள். முனிவரைப் போல் உடை உடுத்தி இருக்கின்றீர்கள். கையில் ஆயுதம் வைத்திருக்கின்றீர்கள். உடன் ஒர் பெண்ணும் இருக்கிறாள். முனிவர்களைப் போல் வேடம் போட்டு ஏமாற்றி தப்பி விடலாம் என்று நினைத்தீர்களா? ரிஷிகளை தின்று உயிர் வாழும் எனக்கு இப்பெண் இனி மனைவியாக இருப்பாள். உங்களை இப்போதே கொன்று தின்று விடுகிறேன் என்று சொல்லிக்கொண்டே சீதையை கையில் தூக்கி பிடித்துக் கொண்டான்.
சீதை ரட்சசனின் கையில் நடுநடுங்கிக் கொண்டிருந்தாள். சீதை நடுங்குவதை பார்த்த ராமர் எந்த விதத்தில் ராட்சசனை எதிர்ப்பது என்று தோன்றாமல் சில வினாடிகள் தன் அமைதியை இழந்தார். பார் லட்சுமணா சீதையை எதையும் பொறுக்கும் என்னால் இதனைக் கண்டு பொறுக்க முடியவில்லை. இதைக்காணத் தான் கைகேயி நம்மை இங்கே அனுப்பினாளா என்று மனம் கலங்கி பேசினார். ராமர் தைரியமும் அமைதியும் இழந்து பேசியதை கண்ட லட்சுமணன் குழப்பமடையாமல் பேசினான். நீங்கள் இந்திரனுடைய பலம் பெற்றவர். உங்களுடன் நானும் இருக்கிறேன். ஏன் இப்படி பேசுகின்றீர்கள். அயோத்தியில் என் கோபத்தை அடக்கினீர்கள். இப்போது பாருங்கள் அந்த கோபம் அனைத்தையும் இந்த ராட்சசன் மீது காட்டி இவனை கொன்று என் கோபத்தை தணித்துக்கொள்கிறேன் என்றான். உடனே ராமர் தெளிந்தார். முகத்தில் அமைதியுடன் வீரம் ஜொலித்தது. ராமரும் லட்சுமணனும் அம்பில் வில்லை பூட்டி ராட்சசனுக்கு குறி வைத்தார்கள்.

