ராமாயணம் 3. ஆரண்ய காண்டம் பகுதி -2

ராமர் ராட்சசனிடம் பேச ஆரம்பித்தார். நாங்கள் இஷ்வாகு வம்சத்தை சேர்ந்த ராஜ குமாரர்கள். இப்பெண் சீதை என் மனைவி. நாங்கள் வனவாசம் செய்ய இக்காட்டிற்குள் வந்திருக்கின்றோம். அப்பெண்ணை விட்டுவிடு இல்லையென்றால் இப்போதே என் அம்பு உன் உடலை துளைக்கும் என்றார். ராட்சசன் சிரித்தான். எனது தந்தை பெயர் ஜயன். தாயார் பெயர் சதஹ்ரதை என்னை அனைவரும் விராதன் என்று அழைப்பார்கள். ஆயுதத்துடன் இருக்கும் சத்ரியர்களே உங்கள் ஆயுதங்களால் என்னை ஒன்றும் செய்ய முடியாது. ஆயுதங்களால் என் உயிர் போகாது என்று பிரம்மாவிடம் வரம் பெற்றிருக்கின்றேன். இப்பெண்ணை விட்டு ஒடிவிடுங்கள். இல்லை என்றால் உங்களை கொன்று இப்பெண்ணை கொண்டு செல்வேன் என்றான் ராட்சசன்.

ராமர் நீ எமனிடம் செல்லும் நேரம் வந்துவிட்டது என்று கூறி தன்னுடைய அம்பை ராட்சசன் மீது விட்டார். அம்பு ராட்சசனின் உடலை துளைத்துக் கொண்டு ரத்தத்துடன் வெளியே வந்து விழுந்தது. ராட்சசன் அப்படியே நின்று கொண்டிருந்தான். கோபத்துடன் சீதையை இறக்கிவிட்டு தன்னுடைய சூலத்தை லட்சுமணன் மீது வீச முயன்றான். ராமர் லட்சுமணன் இருவரும் ராட்சசன் மீது அம்பு மழை பொழிந்தார்கள். அம்புகள் அனைத்தும் ராட்சசனின் உடலில் பாய்ந்தது. பெரிய முள்ளம் பன்றி போல் நின்ற ராட்சசன் சிரித்தான். உடலை ஒரு சிலுப்புச் சிலுப்பினான். உடலில் இருந்த அம்புகள் அனைத்தும் கீழே விழுந்தது. ராம லட்சுமணர்களை சூலத்தை வைத்து தாக்க முயற்சித்தான் ராட்சசன். ராமரின் ஒரு அம்பு சூலத்தை இரண்டாக உடைத்தது. ராமரும் லட்சுமணனும் கத்தியை எடுத்துக்கொண்டு அவனை தாக்க ஆரம்பித்தார்கள். ராட்சசன் தன் உருவத்தை மாற்றிக்கொண்டு இருவரையும் இரு கைகளால் தூக்கிக்கொண்டு காட்டிற்குள் ஓட ஆரம்பித்தான்.

அடர்ந்த காட்டிற்குள் ராமரும் லட்சுமணனும் கண்ணில் இருந்து மறைந்ததை பார்த்த சீதை அழ ஆரம்பித்தாள். ராட்சசனின் கைகளில் இருந்த இருவரும் அவனது இரு கைகளையும் உடைத்து பிய்த்து எரிந்தார்கள். ராட்சசன் கீழே விழ்ந்தான். ஆயுதங்களால் இவனுக்கு மரணமில்லை என்பதை அறிந்து தன் கரங்களாலும் காலால் மிதித்தும் ராட்சசனை கசக்கினார்கள். ராமரும் லட்சுமணனும் ராட்சசனின் உடலை எவ்வளவு கசக்கினாலும் பிரம்மாவின் வரத்தால் ராட்சசன் உயிர் போகவில்லை. ஆனால் வலியினால் ராட்சசன் கதற ஆரம்பித்தான். ராமர் தனது காலை ராட்சசன் மார்பின் மீது மிதித்தார். அப்போது ராட்சசன் ராமரிடம் பேச ஆரம்பித்தான். பகவானே உங்கள் பாதம் என் மீது பட்டதும் எனக்கு பூர்வ ஜென்ம நினைவுகள் வந்து விட்டது. நான் ஒரு கந்தர்வன் மேலுலகம் செல்ல நான் பெற்ற வரமும் சாபமும் எனக்கு தடையாய் இருக்கிறது. என் உயிரை எப்படியாவது தாங்கள் எடுத்துவிட்டால் நான் மேலுலகம் சென்றுவிடுவேன் என்றான். ராமரும் லட்சுமணனும் ஆயுதங்கள் ஏதும் இன்றி ராட்சசன் உடலை தனி தனியாக பிய்த்து ஒரு பெரிய பள்ளம் ஒன்று தோண்டி அதில் போட்டு முடிவிட்டனர். ராட்சசனும் கந்தர்வ உருவம் பெற்று ராமரை வணங்கி மேலுலகம் சென்றான். ராமரும் லட்சுமணனும் சீதை இருக்கும் இடம் சென்று நடந்த அனைத்தையும் அவளிடம் சொல்லி அவளுக்கு தைரியம் சொன்னார்கள். அங்கிருந்து கிளம்பி மூவரும் சரபங்க முனிவரின் ஆசிரமம் சென்றார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.