ராமர் சீதையிடம் முனிவர்கள் ரிஷிகள் நேரில் வந்து உதவி கேட்காவிட்டாலும் அவர்களை காப்பாற்றுவது சத்ரிய குலத்தில் பிறந்தவர்களுடைய கடமை. இக்காட்டிற்கு நாம் வந்தவுடன் இங்கிருக்கும் ரிஷிகள் நம்மிடம் முதலில் சொன்னது உங்களை சரண்டைகின்றோம் அபயம் எங்களை ராட்சசர்களிடம் இருந்து காப்பாற்றுங்கள் என்று முறையிட்டார்கள். நாம் இப்போது தபஸ்விகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். தபஸ்வியாக இருப்பவர்களிடம் யார் எதை கேட்டாலும் கொடுக்க வேண்டும் என்பது தருமம். எனவே காப்பாற்றுகின்றேன் என்று சொல்லிவிட்டேன். கொடுத்த வாக்கை காப்பாற்றுவதற்காக நம்மை எதிர்க்காத ராட்சசர்களை அழிப்பதில் தவறு ஒன்றுமில்லை. தபஸ்விகளுக்கான தருமத்திற்கு உட்பட்டு இதனை செய்யலாம். இரண்டாவதாக நாம் தபஸ்வியாக வாழ்ந்தாலும் வில் அம்புடன் ஆயுதம் ஏந்தி நிற்கின்றோம். துன்பப்படும் மக்களை காப்பாற்றுவது அரசனுடைய கடமையாக இருந்தாலும் சத்ரிய குலத்தில் பிறந்தவர்களுடைய பொது கடமை தஞ்சமடைந்தவர்களை காப்பாற்றுவதாகும். அதன்படி ராட்சசர்களை அழிப்பதில் தவறு ஒன்றுமில்லை. சத்ரிய தருமத்திற்கு உட்பட்டு இதனை செய்யலாம். என்னுடைய உயிர் இருக்கும் வரை கொடுத்த வாக்கை காப்பாற்றுவேன். இதற்காக உன்னையும் லட்சுமணனையும் கூட தியாகம் செய்ய தயங்க மாட்டேன் என்றார் ராமர். சீதை தனது சந்தேகம் தீர்ந்தது என்றாள்.
தண்டகாரண்ய காட்டில் நிறைய ரிஷிகள் குடில்கள் அமைத்து தவ வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தார்கள். மான் கூட்டங்கள், யானை கூட்டங்கள், பறவைகள், அழகிய பூக்களை உடைய செடிகள் தடாகங்கள் என அழகுடன் இருந்தது அந்த இடம். அங்கு ராமரும் லட்சுமணனும் தாங்கள் தங்குவதற்கு குடில் ஒன்று அமைத்துக்கொண்டார்கள். அங்கிருக்கும் ரிஷிகளின் குடிலில் மாதம் ஒரு குடிலுக்கு விருந்தினர்களாக சென்றும் தவ வாழ்க்கையை பத்து ஆண்டுகள் மகிழ்ச்சியுடன் கழித்தார்கள்.
அகத்திய முனிவரை சந்தித்து அவரிடம் ஆசி பெற வேண்டும் என்ற எண்ணம் ராமருக்கு வந்தது. சுதீட்சண முனிவரை சந்தித்த ராமர் அகத்திய முனிவரை காண ஆவலாக இருக்கிறது அவரின் இருப்பிடத்தை பற்றி சொல்லுங்கள் என்று கேட்டுக்கொண்டார். சுதீட்சண முனிவர் நானே உன்னிடம் அகத்திரை சந்தித்து ஆசி பெற்று வா என்று சொல்ல எண்ணியிருந்தேன். நீயே கேட்டுவிட்டாய் மிக்க மகிழ்ச்சி. நாம் இருக்குமிடத்தில் இருந்து தென் திசையில் நான்கு யோசனை தூரத்தில் திப்பிலி மரங்களும் பழங்கள் வகை மரங்களும் நிறைந்த காட்டில் அகத்திய முனிவரின் தம்பி இத்மவாஹர் குடில் இருக்கிறது. அங்கு சென்று ஒர் இரவு தங்கிவிட்டு அடுத்த நாள் மீண்டும் தென் திசையில் ஒர் யோசனை தூரம் பயணித்தால் வரும் காட்டில் அகத்திய முனிவரின் குடில் இருக்கின்றது அங்கு சென்று அவரை சந்திக்கலாம். இன்றே புறப்படுவாய் என்று ராமருக்கு ஆசி கூறி அனுப்பி வைத்தார் சுதீட்சண முனிவர்.