ராமர் தனது வில்லில் இருந்து அம்புகளை அனுப்ப ஆரம்பித்தார். ராமரை சுற்றி இருக்கும் பல ஆயிரம் ராட்சசர்களை பார்த்த தேவர்கள் ஒற்றை ஆளாக இருந்து ராமர் எப்படி அனைவரையும் அழிக்க போகிறார் என்று இந்த யுத்தத்தை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ராமர் வில்லில் அம்பு பூட்டுவதோ அம்பு வில்லில் இருந்து செல்வதோ மின்னல் வேகத்தில் இருந்தது. சூரியனில் இருந்து அனைத்து பக்கமும் வெளிச்சம் பரவுவதைப் போல ராமர் தன்னை சுற்றி அம்பை அனுப்பிக்கொண்டே இருந்தார். எட்டு திசைகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான வீரர்கள் அழிந்தனர். யானைகளும் குதிரைகளும் பூமியில் வீழ்ந்து மடிந்தது. பெரிய உருவத்திற்கு மாறிய பல ராட்சசர்கள் ஆகாயத்தில் பறந்து வந்து ராமரை தாக்க முற்பட்டனர். ராமரின் வில்லில் இருந்து வந்த அம்புகள் அந்த ராட்சசர்களை ஆகாயத்திலேயே அழித்தது. தனது தேர் குதிரைகளை இழந்த தூஷணன் தனது கதையால் ராமரை தாக்க ஓடி வந்தான். ராமர் அனுப்பிய அம்பு அவனது இரு கைகளையும் வெட்டி தள்ளி அவனை அழித்தது. தூஷணன் இறந்ததை பார்த்த ராட்சச படைகள் பயந்து ஓட ஆரம்பித்தனர். அனைவரையும் உற்சாக மூட்டி மீண்டும் அழைத்து வந்தான் கரன்.
ராமரின் அம்பினால் அனைத்து ராட்சசர்களும் அழிந்தனர். ராமர் ருத்திர மூர்த்தியை போல் காணப்பட்டார். இவ்வளவு நாட்கள் சிரித்த முகத்துடன் அன்புடன் இருக்கும் ராமரை பார்த்திருந்த காட்டில் வசிப்பவர்கள் இப்போது ராமரை ருத்ரமூர்த்தியாக பார்க்கும் போது பயந்து நடுங்கினார்கள். அந்த காட்டுப் பகுதி முழுவதும் இறந்த ராட்சசர்களின் உடல்கள் மலை போல் குவிந்து கிடந்தது.
ராமர் கரனின் தேர் குதிரைகளை அழித்து அவனை நிர்மூலமாக்கினார். ஒற்றை ஆளாக நின்று கொண்டிருந்த கரனிடம் ராமர் பேச ஆரம்பித்தார். இக்காட்டில் யாருக்கும் எந்த தொந்தரவும் செய்யாமல் தவம் செய்து கொண்டிருக்கும் முனிவர்களையும் ரிஷிகளையும் ஏன் துன்புறுத்தியும் கொன்றும் வந்திருக்கிறாய். உன்னை போன்ற அரக்கர்களை அழிப்பதற்காகவே இக்காட்டிற்கு வந்திருக்கின்றேன். என்னுடைய அம்புகள் உன்னுடன் வந்த உன் ராட்சச குலத்தவர்கள் அனைவரையும் அழித்துவிட்டது. உலகத்தருக்கு துன்பம் விளைவித்து மக்களை கொல்பவன் எவ்வளவு பலசாலியாக இருந்தலும் ஒரு நாள் இறந்து போவான். இவ்வளவு நாள் இந்த பாவ காரியங்களை செய்து கொண்டிருந்த நீயும் இப்போது எனது அம்பினால் அழியப்போகிறாய் என்று தனது அம்பை வில்லில் பூட்டினார். கரன் தனது கதை ஆயுதத்தை ராமரின் மேல் எறிந்தான். ராமரின் அம்பு கரனின் கதையை இரண்டாக பிளந்தது. பெரிய மரத்தை வேரோடு பிய்த்து எறிந்தான் கரன். மரமும் ராமரின் அம்பினால் துண்டாகி தூரத்தில் போய் விழுந்தது. அம்புகள் பலவற்றை கரனின் மேல் எய்தார் ராமர். உடல் முழுவதும் காயமடைந்த கரன் ராமரை தனது கைகளினால் தாக்க ஓடி வந்தான். இனியும் தாமதிக்க வேண்டாம் என்று நினைத்த ராமர் இந்திர பாணத்தை கரனின் மேல் பிரயோகித்தார். அடுத்த நொடி கரனும் வீழ்ந்தான். காட்டில் முனிவர்களையும் ரிஷிகளையும் துன்புறுத்திய ராட்சசர்களை அனைவரையும் அழித்து விட்டார் ராமர். இனி இக்காட்டில் அனைவரும் மகிழ்ச்சியுடன் இருக்கலாம் என்று முனிவர்களும் ரிஷிகளும் மகிழ்ச்சியுடன் ராமரை வணங்கினார்கள்.


