ராமர் லட்சுமணனிடம் சீதைக்கு காவலாக இருந்து அவளை பார்த்துக்கொள். வருபவர்களை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று தன் வில்லையும் அம்பையும் எடுத்து ராட்சச சேனாதிபதிகளிடம் பேச ஆரம்பித்தார். நாங்கள் ராம லட்சுமணர்கள் அயோத்தியின் ராஜகுமாரர்கள் இக்காட்டில் தபஸ்விகளை போல வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். பிறருக்கு தீங்கு செய்வதையே தொழிலாகக் கொண்டு முனிவர்களுக்கும் ரிஷிகளுக்கும் தொந்தரவு கொடுக்கும் உங்களை முனிவர்களின் ஆணைப்படி அழிக்க வில் அம்புடன் வந்திருக்கின்றேன். உயிர் மேல் ஆசையில்லை என்றால் திரும்பி ஓடாமல் என்னை எதிர்த்து போர் செய்யுங்கள். உயிர் மேல் ஆசையிருந்தால் உடனே திரும்பி ஒடி விடுங்கள் என்றார்.
ராமரின் பேச்சைக் கேட்ட பதினான்கு அரக்கர்களும் கோபத்துடன் கடுமையான குரலில் பேச ஆரம்பித்தார்கள். மிகப்பெரிய உருவம் படைத்த எங்களுடைய தலைவரும் இக்காட்டின் அரசருமான கரனின் கோபத்திற்கு ஆளாகியிருக்கிறாய். எப்போது எங்களது தாக்குதலில் நீ அழிந்து போகப்போகிறாய். நீயோ ஒருவன் நாங்கள் பதினான்கு சேனாதிபதிகளுடன் பல பேர் இருக்கின்றோம். போர்க்களத்தில் எங்களுக்கு எதிராக உன்னால் நிற்கக்கூட முடியாது. சில கணங்களில் உன்னை வீழ்த்தி விடுவோம். போர் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கோபத்துடன் கூறிவிட்டு பலவகையான ஆயுதங்களுடன் ராமரை நோக்கி ஒடி வந்தார்கள்.
ராமர் தனது வில்லில் அம்பை பூட்டி யுத்தத்துக்கு தயாரானார். ராட்சசர்கள் தங்களிடம் உள்ள ஆயுதங்களை போரில் யாராலும் வெல்ல முடியாத ராமரின் மேல் வீசினார்கள். ராமர் தனது அம்பை ராட்சசர்களின் மீது வரிசையாக எய்தார். ராட்சசர்கள் அனைவரும் மார்பு பிளக்கப்பட்டு உடல் சிதைந்து வேர் அறுக்கப்பட்ட மரம் போல் வீழ்ந்தார்கள். தரையில் வீழ்ந்த ராட்சச சேனாதிபதிகளின் உடலை பார்த்து பயந்த சூர்ப்பனகை பயங்கரமான கூச்சலுடன் அந்த இடத்தை விட்டு ஓடி மீண்டும் கரனிடம் வந்து சேர்ந்து அழுது புலம்பினாள். கரனுக்கு ஒன்றும் புரியவில்லை. யமனைப் போன்ற வீரர்களை அனுப்பினேன். அவர்கள் ராஜகுமாரர்களை அழித்திருப்பார்கள். நீ ஏன் அழுது புலம்புகிறாய் நீ இப்படி புலம்புவதை நிறுத்தி நடந்தவற்றை சொல் என்றான் கரன்.
சேனாதிபதிகள் பதினான்கு பேரை நீ அனுப்பினாய். அவர்கள் அனைவரையும் அந்த அழகிய ராஜ குமாரன் தனது அற்புதமான யுத்தத்தினால் சில கணங்களில் கொன்று விட்டான். அனைவரும் உடல் சிதைந்து இறந்துவிட்டார்கள். உனது காட்டிற்குள் புகுந்த அந்த ராஜ குமாரர்களை உடனே அழித்துவிடு. நீ அவர்களை அழிக்காவிட்டால் அவர்கள் நம்மை அழித்து விடுவார்கள். உன்னை நீ சூரன் என்று சொல்லிக்கொள்கிறாய் இதில் பலன் ஒன்றும் இல்லை. நீ உண்மையான சூரனாக இருந்தால் உடனே யுத்தத்திற்கு கிளம்பி அவர்களை அழித்து நம் ராட்சச குலத்தை காப்பாற்று இல்லையென்றால் அவர்களால் நாம் முற்றிலும் அழிந்து போவோம் என்று கரனின் கோபத்தை சூர்ப்பனகை தூண்டிவிட்டாள்.

