சீதை ஆகாயத்தில் சென்று கொண்டிருக்கும் போது தைரியமாக ராவணனிடம் பேச ஆரம்பித்தாள். உன் குலத்தின் பெருமைகளையும் உன்னுடைய வீரப்பரதாபங்களையும் கம்பீரமாக என்னிடம் சொல்லி பெரிய சூரனைப் போல் நடந்து கொண்டாய். ஆனால் ராமருடன் யுத்தம் செய்ய தைரியம் இல்லாமல் ஒரு கோழையைப் போல் தன் துணைவன் இல்லாத நேரத்தில் ஒரு பெண்ணை மாறுவேடம் தரித்து ஏமாற்றி தூக்கிச் செல்கிறாய். இது தான் உனது வீரமா? உனக்கு வெட்கமாக இல்லையா? என்னை காப்பாற்ற வந்த வயதான ஒரு பறவையை கொன்ற கோழை நீ. உன்னுடைய இந்த கீழ்தரமான செயலினால் உன் குலத்திற்கே நீ அவமானத்தை தேடிக் கொடுத்திருக்கிறாய். என்னை தூக்கிச் சென்று உன்னால் நிம்மதியாக இருக்க முடியும் என்று எண்ணுகிறாயா? உன்னுடைய பதினான்காயிரம் ராட்சசர் படைகளையும் என் ராமர் ஒருவராக நின்று அனைவரையும் அழித்திருக்கிறார் ஞாபகம் வைத்துக்கொள். என் ராமரின் கண்ணில் பட்ட அடுத்த கனம் அவருடைய வில்லில் இருந்து வரும் அம்புகள் உன்னை கொன்று விடும். தந்திரங்கள் மூலமாகவும் மாயா ஜாலங்கள் மூலமாகவும் தப்பிப் பிழைப்போம் என்று கனவு காணாதே. நிச்சயமாக நீ அழிந்து போவாய் என்று ராவணனை திட்டிக்கொண்டே இருந்தாள்.
சீதை பேசிய எதையும் ராவணன் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. சீதையை அடைந்து விட்டோம் என்று தன் நினைத்து வந்த செயலை நிறைவெற்றி விட்ட மகிழ்ச்சியில் இருந்தான் ராவணன். ரதம் வில்லில் இருந்து சென்ற அம்பு போல் இலங்கையை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. செல்லும் வழியில் கீழே மலை மீது வேடர்கள் சிலரையும் வானரங்கள் சிலரைக் கண்டாள் சீதை. ராமர் தன்னை தேடி வந்தால் அவருக்கு வழி தெரிய வேண்டும் என்று தன்னுடைய ஆபரம் ஒன்றை எடுத்து வானரங்கள் இருக்கும் மலையை நோக்கி வீசினாள் சீதை. வானத்தில் ராட்சசன் பிடியில் இருக்கும் பெண் தங்களை நோக்கி எதோ ஒன்றை தூக்கி எறிவதை வானரங்கள் பார்த்து அதனை எடுக்க ஓடினார்கள்.
ரதம் பல காடுகளையும் மலைகளையும் கடலையும் தாண்டி இலங்கையை சென்றடைந்தது. துயரத்தில் இருந்த சீதையுடன் தன் அந்தப்புரத்தை அடைந்தான் ராவணன். அங்கிருக்கும் ராட்சச பணிப்பெண்களை அழைத்தான். இவளிடம் மிகவும் மரியாதையாகவும் பணிவுடனும் நீங்கள் நடந்து கொள்ள வேண்டும். இவளை மிகவும் ஜாக்கிரதையாகவும் ஆண்கள் யாரும் இவளிடம் பேசாமலும் இவள் அருகில் நெருங்காமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். இவள் கேட்கும் வைர வைடூரியங்கள் முத்து என்று எது கேட்டாலும் கொடுத்து அவளை சந்தோசமாக வைத்திருக்க வேண்டும். இவள் வருத்தப்படும்படி யாரேனும் நீங்கள் நடந்து கொண்டால் உங்கள் அனைவரையும் கொன்று விடுவேன். நீங்கள் எனக்கு கொடுக்கும் அனைத்து மரியாதைகளும் இவளுக்கும் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு சீதை கிடைத்து விட்ட பெருமிதத்தில் அங்கிருந்து கிளம்பினான். அரண்மனைக்கு வந்த ராவணன் சாமர்த்தியமான இரண்டு ஒற்றர்களை அழைத்தான். நீங்கள் இருவரும் ராமர் வாழும் காட்டிற்கு செல்லுங்கள். ராமர் எனக்கு எதிரி எப்படியாவது அவன் அழிய வேண்டும். ராமன் இருக்கும் வரையில் எனக்கு நிம்மதியான தூக்கம் இல்லை. ராமன் என்ன செய்கிறான் என்று மறைந்திருந்து பார்த்து தினந்தோறும் தகவல் தெரிவிக்கவேண்டும். உங்களுக்கு எந்த பாதிப்பும் வராது தைரியமாக செல்லுங்கள் என்று உத்திரவிட்டான்.