ராமருடன் வாழ்ந்த காட்டில் இருந்து வெகு தூரத்தில் கடலால் சூழப்பட்ட நாட்டில் பெரிய அரண்மணையில் தாம் இருப்பது சீதைக்கு தெரியவில்லை. ராமருடைய வீரத்தையும் சாமர்த்தியத்தையும் அறிந்த சீதை ராமர் விரைவில் வந்து ராவணனை கொன்று விட்டு தன்னை காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையுடன் இருந்தாள். ராட்சசனான ராவணன் தன்னிடம் மிருகத்தனமாக ஏதும் நடந்து கொள்ளவில்லை என்று ஆறுதலுடன் இருந்தாள்.
சீதை தனது அரண்மனையை சுற்றிப் பார்த்தால் அங்கிருக்கும் ராஜபோகங்களை கண்டு தனக்கு அடிபணிவாள் என்று எண்ணிய ராவணன் சீதையை பார்த்துக் கொள்ளும் ராட்சஷிகளை அழைத்து அரண்மனையை சுற்றிக் காட்டுமாறு உத்தரவிட்டான். உலகத்தில் எந்த அரசனிடமும் இல்லாத செல்வங்களுடன் ராஜபோகத்துக்கு உரிய பொருட்களுடன் ராவணனின் செல்வம் நிறம்பிய அரண்மனையை சுற்றிக் காண்பித்தார்கள். எங்கு பார்த்தாலும் நவரத்தினங்களும் பொன்னும் மணியும் பட்டும் குவிந்திருந்தன. கண்ணைக் கவரும் படியான விசித்திர வேலைப்பாடுகள் நிறைந்த மண்டபங்கள் மேடைகள் என ராஜ்ய அதிகாரத்தினால் பெற்ற அத்தனை செல்வங்களையும் அந்த அரண்மனையில் சீதை கண்டாள். அவளுடைய மனதில் ராமர் எப்பொது வருவார்? எப்படி வருவார்? எப்போது காண்போம்? என்ற எண்ணத்தை தவிர சீதையின் மனதில் வேறு ஒன்றும் ஓடவில்லை.
சீதையை மீண்டும் காண அவள் இருக்கும் அந்தப்புரத்திற்கு வந்தான் ராவணன். ராட்சஷிகள் சரியாக காவல் இருக்கின்றார்களா என்பதை சரி பார்த்துக் கொண்டான். சீதை சோகத்தில் கண்ணீர் நிறைந்த கண்களோடு இருப்பதைக் கண்டான். எப்படியாவது சீதையை அடைந்து விட வேண்டும் என்று எண்ணி ஏற்கனவே பேசியதை போலவே சீதையிடம் தன் வீரப்பிராதபங்களை பற்றி சொல்ல ஆரம்பித்தான் ராவணன். நீங்கள் வாழ்ந்த காட்டில் இருந்து 100 யோசனை தூரத்தில் இருக்கும் கடல் சூழ்ந்த எனது லங்காபுரி நாட்டில் நீ இப்போது இருக்கிறாய். இந்த நாட்டை சுற்றி இரவு பகலாக பல மகா ராட்சசர்கள் காவல் காத்துக் கொண்டிருக்கின்றார்கள். என் அனுமதி இல்லாமல் யாரும் உள்ளே நுழைந்து விட முடியாது. நாட்டில் இருந்த விரட்டப்பட்ட ஒரு மனிதனை எண்ணி கவலையோடு இருக்கிறாய்.
ராமனால் இங்கு வர முடியாது. உன் ஆயுட்காலம் முழுக்க நிச்சயம் நீ ராமனை பார்க்க முடியாது. என் பதவியையும் மறந்து உன்னிடம் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். அனைவரது தலையும் என் காலடியில் இருக்க என் தலையை உன் பதங்களில் வைத்து கேட்டுக் கொள்கிறேன். நான் உன் அடிமையாக இருப்பேன். எனக்கு அடிமையாக இருக்கும் அனைத்து தேவர்களும் உனக்கும் அடிமைகள் ஆவார்கள். என் வாழ்நாளில் இவ்வாறு நான் யாரையும் கெஞ்சியது இல்லை. நான் சொல்வதை கேள். வேறு யோசனை செய்யாதே. குபேரனை வெற்றி பெற்ற லங்கேசன் மனைவியாகி விடு. நீ இதற்கு ஒப்புக்கொள்வதில் பாவம் ஒன்றும் இல்லை. இந்த ராஜ்யம் முழுவதும் உன்னுடையதாக எண்ணிக்கொள். இந்த ஆயுட்காலம் முழுவதும் நாம் சந்தோசமாக வாழலாம். உன்னுடைய அழகிய முகத்தில் துக்கம் இருக்கக்கூடாது மகிழ்ச்சியுடன் இரு என்று சீதையிடம் சொல்லி முடித்தான் ராவணன்.