சீதை எந்த பயமும் இல்லாமல் ராவணனிடம் தைரியமாக பேச ஆரம்பித்தாள். ராட்சசர்கள் இருக்கும் தண்டகாருண்ய காட்டில் ராமருடன் தனியாக வசித்தேன். எங்களை எதிர்த்து வந்த உன்னுடைய ராட்சச படைகளை ஒற்றை ஆளாய் கன நேரத்தில் அழித்தவர் என் கணவர். தேவ அசுரர்களால் கொல்லப்பட கூடாது என்று நீ வரம் வாங்கியதினால் யாராலும் உன்னை ஒன்றும் செய்ய முடியாது என்ற கர்வத்தில் என்னை தந்திரமாக தூக்கி வந்து விட்டாய். இதனால் ராமரின் பகையை பெற்றுவிட்டாய். நீ எத்ததை பெரிய சக்தி வாய்ந்த அஸ்திரங்கள் ஆயுதங்கள் வைத்திருந்தாலும் நீ பெற்ற உன்னுடைய வரம் இனி உன்னை காப்பாற்றாது. எத்தனை யோசனை தூரத்தில் நீ என்னை கடல் தாண்டி தூக்கி வந்தாலும் கடலை வற்றச் செய்து என்னை தேடி வருவார் என் ராமர். நீ செய்த தீ வினையால் நீயும் அழிந்து உன் குலமும் அழிந்து உன் லங்காபுரி நகரமே அழிந்து போகப்போகிறது. என் உயிரையும் உடலையும் காப்பாற்றிக்கொள்ள உன் வசமாவேன் என்று எண்ணாதே. உலகத்தாரால் இகழப்பட்டு உயிரை வைத்துக் கொண்டிருக்க நான் விரும்பவில்லை என்று ராவணனிடம் கர்ஜனையுடன் சீதை பேசி முடித்தாள்.
சீதை பேசிய அனைத்தையும் கேட்ட ராவணன் உனக்கு பன்னிரண்டு மாதம் அவகாசம் தருகிறேன். அதற்குள் என் சொல்படி நடந்துகொள். இல்லையென்றால் அவகாச காலம் முடிந்ததும் உன்னை என் சமையல்காரர்கள் எனது காலை உணவிற்கு உன்னை சமைத்து விடுவார்கள் எச்சரிக்கிறேன் என்று சொல்லி விட்டு காவல் காக்கும் ராட்சசிகளை தனியாக அழைத்தான். இவளை அசோக வனத்திற்கு அழைத்துச் சென்று விடுங்கள். அங்கு இவளுடைய பிடிவாதத்தையும் கர்வத்தையும் எப்படியாவது நீங்கள் அழிக்க வேண்டும். பயத்தாலும் நயத்தாலும் தந்திரமாகவும் பேசி இவளை என் சொல்படி நடந்து கொள்ள வையுங்கள் என்று கோபத்துடன் உத்தரவிட்டு தன் அரண்மனைக்கு சென்றான். ராட்சசிகள் சீதையை அசோகவனம் கொண்டு சென்றார்கள். ரம்யமாக வடிவமைக்கப்பட்ட பூந்தோட்டத்தில் அகோரமான ராட்சசிகளுக்கு மத்தியில் சீதை துயரத்துடன் இருந்தாள். ராவணன் நம்மை தூக்கி வந்த செய்தியை ராமரும் லட்சுமணனும் எப்படியாவது தெரிந்து நாம் இருக்கும் இடத்தை வந்தடைந்து ராட்சசர்களை கொன்று நம்மை காப்பாற்றுவார். அதுவரை இந்த ராட்சசிகளுக்கு பயப்படாமல் இருக்க வேண்டும் என்று முடிவெடுத்தாள்.
ராமர் தான் வாழ்ந்து வந்த குடிலில் இருந்து மிகவும் தூரத்தில் இருந்தார். குடிலில் சீதை என்ன மனநிலையில் இருப்பாள் என்று கற்பனை செய்த வண்ணம் குடிலுக்கு விரைந்து வந்து கொண்டிருந்தார். இந்நேரம் லட்சுமணனை காட்டிற்குள் செல்ல வற்புறுத்தி இருப்பாள். லட்சுமணன் என் உத்தரவை மீறி நடக்க மாட்டான். அதனால் சீதை கோபமடைந்து சொல்லக்கூடாத வார்த்தைகளை சொல்லியிருப்பாள். வட்சுமணன் என்ன முடிவெடுப்பான் என்று தெரியவில்லை. லட்சுமணன் குடிலில் சீதையை தனியாக விட்டு கிளம்புவதற்குள் எப்படியாவது குடிலுக்கு விரைந்து சென்றுவிட வேண்டும் என்று எண்ணிய ராமர் விரைவாக நடக்க ஆரம்பித்தார். எதிரே லட்சுமணன் வருவதை கண்டு அதிர்ந்தார். தாம் நினைத்த படியே நடந்து விட்டதே என்று லட்சுமணா என்று கத்தினார். காட்டின் நடுவே சீதையை தனியாக விட்டுவிட்டு வந்துவிட்டாய். அவளை ராட்சசர்கள் கொன்று தின்று விடுவார்களே ராட்சசர்களிடம் அவள் தப்ப முடியாதே தவறான காரியத்தை செய்துவிட்டாயே என்று லட்சுமணனிடம் பேசியவாறு குடிலுக்கு மிகவும் விரைவாக நடக்க ஆரம்பித்தார் ராமர்.