ராமாயணம் 6. யுத்த காண்டம் பகுதி – 12

ராமருக்கு தூதுவனாக வந்த ராட்சசனின் அலறல் சத்தம் கேட்டது. அருகில் இருந்தவர்களிடம் என்ன சத்தம் என்று கேட்டார். அதற்கு தூதுவன் என்று சொல்லிக் கொண்டு ராவணனிடம் இருந்து வந்த ஒரு ராட்சசன் சுக்ரீவனின் மனதை கலைக்க பார்த்தான். அவனை நமது வானர வீரர்கள் கட்டி வைத்து துன்புறுத்துகிறார்கள். அந்த ராட்சசனின் சத்தம் தான் கேட்கிறது என்றார்கள். அதற்கு ராமர் தூதுவர்களாக வந்தவர்களை துன்புறுத்துவதும் கொல்வதும் தர்மம் இல்லை. எனவே அவனை விட்டு விடுங்கள் என்று உத்தரவிட்டு தனது உபவாசத்தை தொடர்ந்தார். ராமரின் உத்தரவை கேட்ட வானர வீரர்கள் ராட்சசனை விடுவித்தார்கள். விடுதலையான ராட்சசன் வானத்தில் பறந்து சென்று அங்கிருந்து சுக்ரீவனிடம் ராவணன் தங்களுக்கு அனுப்பிய செய்திக்கு தங்களின் பதிலை சொல்லுங்கள். அதனை நான் எனது அரசனான ராவணனிடம் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டான். அதற்கு சுக்ரீவன் துஷ்டனான ராவணனுக்கு நான் தம்பியுமில்லை. அவன் எனக்கு அண்ணனுமில்லை. ராமர் எனக்கு நண்பன். அவருக்கு ராவணன் எதிரியானதால் எனக்கும் ராவணன் எதிரி ஆகிறான். தேவர்கள் கந்தர்வர்கள் என்று யாராலும் இலங்கையை நெருங்க முடியாது என்ற ராவணனின் கர்வத்தை அழித்து அவனையும் அழிக்க விரைவில் நாங்கள் கடலை கடந்து வந்து விடுவோம். நாங்கள் வந்ததும் ராவணன் பிழைக்க மாட்டான். ராவணன் இந்த உலகத்தில் எங்கு ஓடி ஒளிந்தாலும் ராமரின் அம்பில் இருந்து தப்ப மாட்டான் என்று உனது அரசனிடம் போய் சொல். ராமரின் கருணையால் நீ பிழைத்தாய் விரைவாக இங்கிருந்து ஓடி விடு என்று சுக்ரீவன் ராட்சசனை விரட்டி அடித்தான். ராட்சசன் விரைவாக அங்கிருந்து சென்று விட்டான்.

ராமர் உபவாசமிருக்க ஆரம்பித்து 3 நாட்கள் ஆனது. கடலரசன் உதவி செய்வதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. ராமர் உபவாசத்திலிருந்து எழுந்து லட்சுமணனை அழைத்தார். தர்மப்படி கடலரசனின் உதவியை கேட்கலாம் என்று தீர்மானித்திருந்தோம். ஆனால் இப்போது அதற்கான காலம் கடந்து விட்டது. இதற்கு மேல் பொறுமையுடன் இருக்க முடியாது. நமது சக்தினால் நமக்கு வேண்டியதை செய்து கொள்ளலாம் எனது வில்லையும் அம்பையும் எடுத்து வா என்றார். லட்சுமணன் ராமரின் வில்லையும் அம்பையும் அவரிடம் கொடுக்க ராமர் தனது வில்லில் அம்பை புட்டி இந்த கடலை சிறிது நேரத்தில் வற்றச் செய்கிறேன் என்று சொல்லி அம்பை கடலில் எய்தார். கடலை புரட்டி எடுத்த அம்பு ஆழ்கடலுக்கு சென்று கடலின் இயற்கை தன்மையை மாற்றியது. அலைகளில் கலக்கம் ஏற்பட்டு நிலை தடுமாறியது. பேரொளியுடன் கூடிய பெரும் புயல் காற்று கடலை சுழற்றி தனக்குள்ளேயே பொங்கியது. கடல் நீர் ஆகாயம் வரை எழும்பி சுழலத் தொடங்கியது. கடலுக்கு அடியில் இருந்த மலைகளும் பெரும் பாறைகளும் இடம் மாறி தங்களின் தன்மையை மாற்றிக் கொண்டது. கடலின் ஜீவ ராசிகள் அனைத்தும் நடுங்கியது. பூமி அதிர்ந்தது. கடலரசனால் இதற்கு மேல் தாங்க முடியவில்லை. அலறிக் கொண்டு தனது தேவதைகளுடன் வெளிப்பட்டு அபயம் அபயம் என்று ராமரை சரணடைந்தான். ராமர் தனது அஸ்திரத்தை மீண்டும் திரும்ப அழைத்துக் கொண்டார். புயல் காற்று நின்று கடல் பழையபடி தனது இயற்கை தன்மைக்கு மாறியது.

ராமரை வணங்கிய கடலரசன் இயற்கை விதிப்படியே நான் நடந்து கொள்ள வேண்டும். இயற்கையாகவே அளவிட முடியாத ஆழமும் அனைவராலும் தாண்ட முடியாதவனாகவும் இருக்கிறேன். நீரின் வேகத்தையும் வசிக்கும் ஜீவராசிகளுக்குமான இடத்தை அளித்து அவர்கள் வாழ்வதற்கு தேவையான அனைத்தையும் செய்து இயற்கைக்கு உட்பட்டு நான் நடந்து கொள்ள வேண்டும். நீங்கள் உங்கள் சக்தியினால் என்னை வற்ற வைத்தால் இயற்கைக்கு எதிராக அனைத்தும் செயல் பட ஆரம்பித்து விடும். இத்தனை படைவீரர்களும் கடலைக் கடக்கும் வரை என்னால் அலைகளை நிறுத்தி வைத்தோ செல்லும் வழிகளில் எல்லாம் நீரின் ஆழத்தை குறைத்தோ இயற்கைக்கு எதிராக நான் செயல்பட முடியாது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.