ராமரையும் அவரது ஆயுதங்களின் வலிமையையும் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் இந்த இலங்கை நகரத்தை அழிக்க ராமருக்கு யாருடைய துணையும் தேவை இல்லை. எந்த படைகளும் தேவை இல்லை. தான் ஒருவரே தனியாக நின்று தனது அம்பின் மூலம் எதிர்க்கும் அனைவரையும் அழிக்கும் வல்லமை பெற்றவர் ராமர். சுக்ரீவனுடைய வானரப்படைகளின் வலிமையை தெரிந்து கொள்ள வேண்டுமானால் எல்லா தேவர்களும் அசுரர்களும் ஒன்று சேர்ந்து வந்து தாக்கினாலும் இந்த வானரங்களை அழிக்க முடியாது. இந்த வானரங்களின் எண்ணிக்கையை சொல்ல முடியாது. பல யோசனை தூரத்திற்கு கூட்டம் கூட்டமாக இருக்கிறார்கள். இந்த கூட்டத்தின் எல்லையை பார்க்க முடியவில்லை. கண்ணுக்கெட்டிய தூரம் வரை அவர்களின் கூட்டம் நீண்டு கொண்டே இருக்கிறது. இப்போதே யுத்தம் செய்ய வேண்டும் என்று வானர படைகள் உற்சாகத்துடன் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். இது வரையில் தாங்கள் ராமரிடம் விரோதமாக இருந்து விட்டீர்கள். இனி மேலும் இந்த விரோதம் தொடர்ந்தால் இலங்கை அழிவது நிச்சயம். நாங்கள் அவர்களின் வலிமையை கண்ணால் பார்த்து விட்டோம் ஆகையால் சொல்கிறோம். உளவு பார்த்துக் கொண்டிருக்கும் போது விபீஷணனிடம் நாங்கள் சிக்கிக் கொண்டோம். அவர் எங்களை ராமரிடம் அழைத்துச் சென்றார். இனி பிழைக்க மாட்டோம் அழிந்தோம் என்று நினைத்த நாங்கள் ராமரின் கருணையினால் தப்பிப் பிழைத்து இங்கு வந்து சேர்ந்தோம் என்று ராமர் சொன்ன செய்தியையும் ராவணனிடம் சொல்லி இனி என்ன செய்ய வேண்டும் என்று யோசித்து செயல்படுங்கள் என்று தலை குனிந்தபடியே நின்றார்கள்.
ராமர் சொன்ன செய்தியை கேட்ட ராவணன் கோபமடைந்து கடுமையான வார்த்தைகளால் தூது சென்ற ராட்சசர்களை திட்ட ஆரம்பித்தான். தேவர்கள் கந்தர்வர்கள் தானவர்கள் என்று அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர்த்தாலும் உலகமே எனக்கு எதிராக நின்றாலும் சீதையை ராமருடன் அனுப்ப மாட்டேன். ஒற்றர்களாக சென்ற நீங்கள் எதிரிகளிடம் சிக்கிக் கொண்டு பயத்தினால் இப்படி பேசுகிறீர்கள். கோழைகளே எந்தப் பகைவனாலும் என்னை வெற்றி பெற முடியாது என்றான். ராமரின் வலிமையை பற்றி அனைவரும் ஒரே மாதிரி சொல்வதில் கவலைப்பட்ட ராவணன் தன் ஆரம்ப காலத்தில் செய்ய யுத்தங்கள் அனைத்திலும் வெற்றி பெற்ற கர்வத்தினால் தன்னை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என்ற எண்ணத்தில் இருந்தான். அரண்மனை மாளிகையின் உச்சிக்கு சென்ற ராவணன் தன் மந்திரிகளுடன் கோட்டையை சுற்றி இருக்கும் வனார படைகளின் அணிவகுப்பை பார்த்தான். ஒற்றர்களிடம் சுற்றி நிற்பவர்கள் யார் யார் என்று கேட்டான். ஒற்றர்கள் ராமர் லட்சுமணன் சுக்ரீவன் என்று அனைவரையும் தனித்தனியாக காட்டி படைகளின் தலைவர்களையும் அவர்களின் வலிமையையும் கூறினார்கள்.
எதிரியின் பராக்கிரமத்தை சொல்லும் ஒற்றர்களை பார்த்து கோபம் கொண்ட ராவணன் ராமரின் பராக்கிரமத்தையும் சுக்ரீவன் தனி ஒருவனாக வந்து தன்னை தாக்கி விட்டு சென்றதையும் அனுமன் தனியாக வந்து இலங்கை நகரத்தையே அழித்துவிட்டுச் சென்றதையும் சிறுவனான வாலியின் புத்திரன் அங்கதனின் திறமையையும் நினைவு படுத்திக்கொண்டான். சீதையை திருப்பி அனுப்ப அவனது கர்வம் இடம் கொடுக்க இயலவில்லை. யுத்தம் செய்யாமல் இருக்க வேறு ஏதேனும் வழிகள் இருக்கிறதா என்று யோசனை செய்ய ஆரம்பித்தான்.