ராமாயணம் 6. யுத்த காண்டம் பகுதி – 20

ராமர் உயிரோடு தான் இருக்கிறார். ராவணன் நம்மை ஏமாற்றுவதற்காக தான் இது போல் மாய வேலைகளை செய்திருக்கிறான் என்று உணர்ந்த சீதை மிகவும் புத்துணர்ச்சி அடைந்தாள். ராமர் தனக்கருகில் வந்து விட்டார் விரைவில் அவரை நாம் பார்க்க போகிறோம் என்று மகிழ்ச்சி அடைந்தாள் சீதை. சரமை சீதையிடம் மேலும் சில தகவல்களை கூறினாள். ராவணனிடம் அரசவையில் மந்திரிகள் பலரும் உறவினர்களும் சீதையை ராமரிடம் ஒப்படைத்து விடுங்கள் என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்கள். ஆனால் ராவணன் யாருடைய பேச்சையும் கேட்பதற்கு தயாராக இல்லை. ராமரை எதிர்த்து யுத்தம் செய்து யுத்தத்தில் உயிரை வேண்டுமானாலும் விடுவேன் ஆனால் ராமரை நான் வணங்கி நிற்க மாட்டேன் என்று ராவணன் தீர்மானமாகச் சொல்லி விட்டான். விரைவில் யுத்தம் ஆரம்பித்து விடும். உனக்கு இனி எந்த அபாயமும் இல்லை. இனிமேல் உன்னிடம் ராவணன் எதை சொன்னாலும் நம்பாதே. ராவணன் சொல்லும் அனைத்தும் உன்னை ஏமாற்றும் செயலாகவே இருக்கும். ராவணன் செய்யும் எந்த செயலையும் கண்ணால் கண்டாலும் நம்பாதே. அனைத்தும் மாயமாகவே இருக்கும். ராவணன் இங்கு வருகிறான் என்று தெரிந்தால் உடனே எச்சரிக்கையுடன் இருந்து கொள் என்று சொல்லி முடித்தாள். சரமை சொல்லி முடித்ததும் வானர படைகளின் பேரிகைகளும் சங்குகளின் ஒலிக்கும் சத்தங்கள் கேட்டது. இந்த சத்தத்தை கேட்டதும் ராவணன் விரைவில் ராமரால் அழியப் போகிறான் என்று சீதை மகிழ்ந்தாள். யுத்தம் செய்ய நாங்கள் வந்திருக்கிறோம் என்ற வானரங்களின் சங்கு பேரிகையின் பெரும் சத்தத்தை கேட்ட ராட்சசர்கள் பலர் பயந்து நடுங்கினார்கள்.

ராமர் தனது கடல் போன்ற வானரப் படைகளுடன் இலங்கையின் நான்கு புறமும் சூழ்ந்து கொண்டார் என்ற செய்தியை ராவணனுக்கு அவனது படை வீரர்கள் கூறினார்கள். அப்போது ஏற்கனவே பயந்து போயிருந்த ராட்சச மந்திரிகள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். இதனை கண்ட ராவணன் இதற்கு முன்பு நடந்த யுத்தங்களில் எல்லாம் உங்ளது பராக்கிரமத்தை காட்டி பல வெற்றிகளை கொடுத்துள்ளீர்கள். ஆனால் இப்போது ராமரை பார்த்து இப்படி பயப்படுகிறீர்கள். இந்த பயம் தான் உங்கள் முதல் எதிரி. ராமர் சாதாரண மானிடன் அவர் மேல் இருக்கும் இந்த பயத்தை விட்டு உங்கள் வலிமையை காட்டி யுத்தம் செய்து நமது ராட்சச குலத்திற்கு பெருமை தேடிக் கொடுங்கள் என்று சொல்லி முடித்து தனது கோட்டையின் உச்சிக்கு சென்று இலங்கையை சுற்றி நிற்கும் வானர படைகளை பார்வையிட்டான் ராவணன் எப்போதும் பச்சை பசேல் என்று இருக்கும் இலங்கை இப்போது மரம் செடி கொடிகள் எதுவும் தெரியாமல் வானர படைகள் நிறைந்து செம்மையாக காட்சி கொடுத்தது. இத்தனை பெரிய வலிமை மிக்க வானர படையை எப்படி அழிப்பது என்று ராவணன் கவலையில் ஆழ்ந்தான்.

ராமர் சீதையை நினைத்து ஒரு முறை சிந்தித்தார். தினந்தோறும் எதிரியின் சித்தரவதையில் பதைபதைக்கும் எண்ணங்களோடு பயத்துடன் இருக்கும் சீதையை விரைவில் விடுவிக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டு இலங்கை நகரத்தின் உள்ளே செல்ல யுத்தம் செய்ய ஆரம்பிக்கலாம் என்று ராமர் வானர வீர்ரகளுக்கு கட்டளையிட்டார். ராமரின் ஆணையை எதிர்பார்த்துக் காத்திருந்த வானர படைகள் உற்சாகமடைந்தனர். சங்கு பேரிகை முழங்க அலைமோதிக் கொண்டு முன்னேறினார்கள். அவர்களின் சத்தம் விண்ணை முட்டி எதிரோலித்தது. முதலில் இலங்கை நகரத்தை மதில் சுவர் போல் பாதுகாத்த மலைகளையும் மதில் சுவர்களையும் தங்கள் கைகளினாலேயே உடைத்து நொறுக்கினார்கள். உடைத்த மலைகளின் மண் குவியல்களை நகரத்தை சுற்றி நீர் நிறைந்திருந்த அகழியின் மேல் போட்டு அகழியை மூடினார்கள். தங்கத்தாலும் வைர வைடூரியங்களினாலும் செய்யப்பட்ட நுழைவாயில் கதவுகளை உடைத்து எறிந்தார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.