ராமர் நிலை தடுமாறி நின்ற அனுமனின் உடல் நலத்தை விசாரித்தார். சிறிது நேரம் ஓய்வெடுத்தால் மீண்டும் யுத்தம் செய்ய தயாராகி விடுவேன் என்று அனுமன் ராமரிடம் தெரிவித்தார். பிரஹஸ்தனை கொன்ற நீலனிடம் சென்ற ராவணன் தன்னுடைய அம்புகளால் நீலனை தாக்கத் தொடங்கினான். இதனால் கோபமடைந்த நீலன் மிகப்பெரிய மரங்களையும் பாறைகளையும் ராவணன் மீது தூக்கி எறிந்தான். அனைத்தையும் தனது அம்புகளால் தூளாக்கிய ராவணன் நீலனின் மீது அம்புகள் விட்ட வண்ணம் இருந்தான். இதனை சமாளிக்க முடியாத நீலன் தன் விளையாட்டை ஆரம்பித்தான். மிகவும் சிறிய உருவத்தை எடுத்த நீலன் ராவணனின் கீரிடத்தின் மீதும் அவனுடைய தேர் கொடியின் மீதும் வில்லின் நுனி மீதும் தாவித் தாவி அமர்ந்து விளையாட்டு காட்டினான். ராவணனின் அம்புகளால் மிகவும் சிறிய உருவமாயிருக்கும் நீலனை ஒன்றும் செய்ய இயலவில்லை. இதனால் மனத்தடுமாற்றம் அடைந்த ராவணனையும் விளையாட்டு காட்டும் நீலனையும் கண்ட மற்ற வானர வீரர்கள் சிரித்து மகிழ்ந்தார்கள். இதனை கண்டு கோபமடைந்த ராவணன் மந்திர அஸ்திரங்களை எடுத்து உபயோகப் படுத்தினான். மந்திர அஸ்திரத்தினால் தாக்கப்பட்ட நீலன் மயக்கமுற்று கீழே விழுந்தான். நீலனை அடக்கிய ராவணன் தன்னை நோக்கி வந்த லட்சுமணனை எதிர்த்து யுத்தம் செய்ய தயாரானான்.
ராமர் எங்கே லட்சுமணா நீ மட்டும் தனியாக வந்து என்னிடம் சிக்கி இருக்கிறாய்? ராட்சசர்களுக்கு அரசனான என் முன்பாக வந்தால் அழிந்து விடுவோம் என்று வராமல் இருக்கிறாரா ராமர்? என் முன் வந்த உன்னை சிறிது நேரத்தில் அழித்து விடுவேன் என்றான் ராவணன். அதற்கு லட்சுமணன் ராட்சச அரசனே வலிமை வாய்ந்தவர்கள் உன் போல் தன்னைத் தானே பெருமை பேசிக் கொண்டிருக்க மாட்டார்கள். யுத்தத்தில் தன்னுடைய வீரத்தை காட்டுவார்கள். ராமரும் நானும் இல்லாத போது சீதையை வஞ்சகம் செய்து தூக்கி வந்த போதே உன்னுடைய வீரத்தை தெரிந்து கொண்டேன். இப்போது வில் அம்புடன் வந்திருக்கிறேன். முடிந்தால் என்னுடன் யுத்தம் செய்து உன்னை காப்பாற்றிக் கொள் என்ற லட்சுமணன் தன்னுடைய வில்லில் இருந்து அம்புகளை ராவணன் மீது அனுப்பத் தொடங்கினான். அனைத்து அம்புகளையும் தன்னுடைய அம்புகளால் தடுத்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள சிரமப்பட்ட ராவணன் பிரம்மாஸ்திரத்தினால் லட்சுமணனை தாக்கினான். பிரம்மாஸ்திரத்திற்கு கட்டுப்பட்டு நின்ற லட்சுமணன் அஸ்திரத்தினால் தாக்கப்பட்டு மயங்கி விழுந்தான். மயக்கத்தில் இருக்கும் லட்சுமணனை சிறை பிடிக்க தூக்கிச் செல்ல முயற்சித்தான் ராவணன். இமயமலையையே தூக்கிய ராவணனால் மயக்கமாய் இருந்த லட்சுமணனை அசைக்கக் கூட முடியவில்லை. இதனைக் கண்ட அனுமன் ராவணனின் மீது தன் கைகளால் குத்தினார். அனுமனின் குத்தில் ரத்தக் காயமடைந்த ராவணன் சிறிது நேரம் உணர்வில்லாமல் இருந்தான். இந்நேரத்தில் அனுமன் லட்சுமணனை பாதுகாப்பான இடத்திற்கு தூக்கிச் சென்றார். இதனை அறிந்த ராமர் ராவணனுடன் யுத்தம் செய்ய முன்னேறிச் சென்றார்.
ராமர் ராவணன் மீது அம்பு மழை பொழிந்தார். ராவணன் தனது ரதத்தில் நின்று ராமரின் அம்புகளை தடுத்துக் கொண்டிருந்தான். இதனைக் கண்ட அனுமன் ராமரிடம் வந்து தாங்கள் ஏன் தரையில் நின்று யுத்தம் செய்ய வேண்டும்? நீங்கள் என் தோளின் மீது அமர்ந்து யுத்தம் செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டார். ராமர் இதற்கு சம்மதம் கொடுக்கவே தன் உருவத்தைப் பெரியதாக்கிக் கொண்ட அனுமன் ராமரை தன் தோளின் மீது அமர வைத்துக் கொண்டு ராவணன் முன்பாக நின்றார். ராமர் முதலில் ராவணனின் தேரோட்டியையும் குதிரைகளையும் கொன்று தன் அம்புகளால் தேரையும் உடைத்தார். பின் ராவணனின் வில்லை உடைத்து அவனின் அனைத்து ஆயுதங்களையும் தாக்கி தூளாக்கினார். ராமரின் அம்புகளால் ராவணன் நிலை குலைந்தான். ராமரின் தாக்குதலில் காயங்களுடன் ஆயுதங்கள் ஏதும் இல்லாமல் நிராயுதபாணியாக நின்றான் ராவணன்.