ராமர் நாராயணனின் சொரூபமாக இருந்தால் நாம் எப்படி வெற்றி பெருவது என்று ராவணன் சிந்திக்க தொடங்கினான். ஏற்கனவே நமது வலிமை மிக்க பல வீரர்கள் இறந்து விட்டார்கள். யாராலும் வெற்றி பெற முடியாத தம்பி கும்பகர்ணனும் இறந்து விட்டான். இனி இந்த யுத்தத்தை எப்படி செய்வது என்று கவலையுடன் இருந்தான். ஆனாலும் ராவணனுடைய மனம் அகங்காரத்தினால் ராமரை சரணடைய ஒத்துக் கொள்ள மறுத்தது. தேவலோகத்தையே வெற்றி பெற்றிருக்கிறோம் அது போலவே இந்த மானிடனையும் வானரங்களையும் எப்படியும் வெற்றி பெறுவோம் என்ற ஆணவம் ராவணனிடம் மேலோங்கி இருந்தது. ஆணவமும் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற பயமும் ராவணனின் மனதை நிலை குலைய வைத்தது. கவலையின் உச்சத்தில் இருந்தான் ராவணன். அப்போது இந்திரஜித் அங்கு வந்தான். நான் இருக்கும் வரையில் நீங்கள் கவலையில் இருக்கிறீர்கள். ஏற்கனவே ராமரையும் லட்சுமணனையும் வெற்றி பெற்றது போல் இப்போதும் சென்று வெற்றி பெற்று வருகிறேன் என்று ராவணனுக்கு தைரியத்தை கொடுத்த இந்திரஜித் தனது படைகளுடன் யுத்தகளத்திற்கு புறப்பட்டான். அசோக வனத்திற்குள் எதிரிகள் யாரும் உள்ளே புக முடியாத படி பாதுகாப்பை பலப்படுத்திய ராவணன் இந்திரஜித்தின் வெற்றி செய்தியை கேட்க தனது மாளிகையில் காத்திருந்தான்.
ராமர் பெரிய ராட்சச படை தம்மை நோக்கி வருவதை பார்த்தார். இந்திரஜித் மீண்டும் யுத்தம் செய்ய வருகிறான் என்று உணர்ந்த ராமர் லட்சுமணனை எச்சரிக்கை செய்தார். லட்சுமணா இந்திரஜித் மீண்டும் யுத்தம் செய்ய வருகிறான். அவன் தன் உடலை மறைத்துக் கொண்டு தாக்குவான். ஆகவே எச்சரிக்கையுடன் இருந்து அவனது தாக்குதலை முறியடிக்க வேண்டும் என்றார். யுத்தம் ஆரம்பித்தது. இந்திரஜித் மந்திர அஸ்திரங்களை கொண்டு வானர வீரர்களை தாக்க ஆரம்பித்தான். வானர வீரர்கள் குவியல் குவியலாக இறக்க ஆரம்பித்தார்கள். இதனை கண்ட ராமர் இந்திரஜித்தை எதிர்க்க ஆரம்பித்தார். ராமர் அம்புகள் விடும் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாத இந்திரஜித் தன் உடலை மறைத்துக் கொண்டு யுத்தம் செய்ய ஆரம்பித்தான். பிரம்மாஸ்திரத்தை எடுத்த இந்திரஜித் ராமரின் மீது எய்தான். தன்னை நோக்கி வந்த பிரம்மாஸ்திரத்தை எதிர்த்து வேறு அஸ்திரங்கள் எய்தால் இது பிரம்மாவை அவமதிப்பதாகும் என்று எண்ணிய ராமர் அமைதியுடன் இருந்தார். அதனை கண்ட லட்சுமணன் ராமரின் முன்பு வந்து நின்று பிரம்மாஸ்திரத்தை தான் ஏற்றுக் கொண்டு மயங்கி விழுந்தான். அண்ணனை காக்க தன் உயிரையும் கொடுக்க வந்த லட்சுமணனின் இச்செயலால் நிலைகுலைந்த ராமர் நிற்க முடியாமல் அவனோடு சேர்ந்து தானும் விழுந்தார். இதனை கண்ட இந்திரஜித் ஒரே அஸ்திரத்தில் இருவரையும் அழித்து விட்டோம் என்று வெற்றி முழக்கமிட்டு ஆனந்த கூச்சலிட்டான். ராட்சச வீரர்கள் இந்திரஜித்தை பெருமைப்படுத்தி கோசமிட்டார்கள். ராம லட்சுமணர்கள் தனது பிரம்மாஸ்திரத்தால் அழிந்தார்கள் என்று ராவணனிடம் சொல்லி அவனை சந்தோசப் படுத்துவதற்கு அரண்மனைக்கு திரும்பினான் இந்திரஜித்.
ராமர் தன்னை தாக்க வந்த பிரம்மாஸ்திரத்தை லட்சுமணன் ஏற்றுக் கொண்டதை நினைத்து கண்ணீர் விட்டார். இவனைப் போல் ஒரு தம்பி உலகத்தில் வேறு யாருக்கும் கிடைப்பார்களா என்று லட்சுமணன் மீதிருந்த அம்பை எடுத்தார். பிரம்மாஸ்திரத்தினால் தாக்கப்பட்ட லட்சுமணன் உயிருக்கு ஒன்றும் ஆகாது என்று தைரியத்துடன் இருந்த ராமர் லட்சுமணனை எப்படி விழிக்க வைப்பது என்று ஜாம்பவானிடம் ஆலோசனை கேட்டார். இந்திரஜித்தின் தாக்குதலில் பெரும் காயமடைந்த ஜாம்பவான் லட்சுமணனின் முகத்தை பார்த்து அஸ்திரத்தின் சக்தி இருக்கும் வரை விழிக்க வாய்ப்பில்லை. விரைவில் விழிக்க வைக்க மூலிகைகள் இருக்கின்றன. அவற்றை உபயோகித்து விரைவில் லட்சுமணனை எழுப்பி விடலாம் என்ற ஜாம்பவான் அனுமன் இருக்கிறாரா என்று கேட்டார். ஜாம்பவானின் வார்த்தையை கேட்ட அனுமன் இதோ இருக்கிறேன் நான் என்ன செய்ய வேண்டும் உத்தரவிடுங்கள் என்று அனைவரின் முன்பும் வந்து வணங்கி நின்றார்.