ராமரிடம் ஜாம்பாவான் பேச ஆரம்பித்தார். இமய மலையில் உள்ள ஒரு சிகரத்தில் மூலிகைகள் நிறைந்திருக்கும். அந்த மூலிகைகள் இறந்தவரையும் உயிர்ப்பிக்கும் ஆற்றல் உடையது. அந்த மூலிகைகளை சூரியன் மறைவதற்குள் பறித்து அன்றே சூரியன் மறைவதற்குள் அதன் வாசத்தை லட்சுமணனுக்கு உபயோகப்படுத்தி விட வேண்டும் இல்லை என்றால் மூலிகைகள் பயன் தராது. இந்த குறுகிய நேரத்திற்குள் எடுத்து வருவதற்கு அனுமனால் மட்டுமே முடியும். அனுமன் இந்த மூலிகைகளை கொண்டு வந்ததும் லட்சுமணன் எழுந்து விடுவார் கவலைப்படாதீர்கள் என்று கேட்டுக் கொண்டார். அனுமனிடம் திரும்பிய ஜாம்பவான் நான் சொல்வதை கவனமாக கேட்டுக் கொள் என்று மூலிகைகளின் பெயரையும் அதன் விதத்தையும் சொல்ல ஆரம்பித்தார். இமயமலையில் ரிஷபம் போன்ற வடிவத்தில் மூலிகை நிறைந்த மலை ஒன்று இருக்கும். அந்த மலை பிரகாசமாக ஒளிவீசிக் கொண்டிருக்கும் அதுவே அதன் அடையாளம். அங்கு ம்ருதசஞ்சீவினி என்ற மூலிகை இருக்கும். அது இறந்தவரையிம் உயிர்ப்பிக்கும் ஆற்றல் உடையது. அடுத்து விசல்யகரணி என்ற மூலிகை அது உடலில் உள்ள காயங்களை உடனடியாக போக்கும் ஆற்றல் உடையது. அடுத்து சாவர்ண்யகரணி என்ற மூலிகை அது காயத்தால் உண்டான வடுக்கலை நீங்கும் ஆற்றல் உடையது. அடுத்து சந்தானகரணி அது உடலில் அம்புகளால் பிளந்த இடத்தை ஒட்ட வைக்கும் ஆற்றல் உடையது. இந்த நான்கு மூலிகைகளையும் எடுத்து இன்று மாலை சூரியன் மறைவதற்குள் இங்கு வர வேண்டும் உன்னால் இயலுமா என்று கேட்டார். ராமரை வணங்கி நின்ற அனுமன் பேச ஆரம்பித்தார்.
ராமரின் அருளால் நிச்சயமாக நான் இதனை செய்து விடுவேன். விரைவில் திரும்பி வருகிறேன் என்ற அனுமன் தன் உடலை பெரிதாக்கிக் கொண்டு அங்கிருந்து தாவி இமயமலையில் இருக்கும் மூலிகை சிகரத்திற்கு சென்றார். அங்கிருக்கும் பல மூலிகைகள் சூரியனைப் போன்று பிரகாசித்துக் கொண்டும் பல நிறங்களிலும் பல வடிவங்களிலும் இருப்பதைப் பார்த்த அனுமன் ஆச்சரியமடைந்தார். ஜாம்பவான் சொன்ன விதத்தில் இருக்கும் மூலிகைகளை தேட ஆரம்பித்தார் அனுமன். தங்களை யாரோ ஒருவன் எடுத்துச் செல்ல வந்திருக்கிறான் என்று உணர்ந்த மூலிகைகள் தங்களை மறைத்துக் கொண்டன. மலை முழுவதும் சுற்றிய அனுமனுக்கு மூலிகைகள் தெரியவில்லை. மூலிகைகள் தங்களை மறைத்துக் கொண்டதை உணர்ந்த அனுமன் மிகவும் கோபம் கொண்டார். இமயமலையில் இருக்கும் பலவிதமான விலங்கள் பெரிய மரங்கள் கொண்ட அந்த மூலிகை சிகரத்தை அப்படியே பெயர்த்து எடுத்த அனுமன் கருடனுக்கு நிகரான வேகத்தில் அங்கிருந்து ராமர் இருக்குமிடத்திற்கு தாவினார். யுத்தகளத்தின் தூரத்தில் அனுமன் வந்து கொண்டிருக்கும் போதே அதனை கண்ட வானரங்கள் அனுமன் வந்து விட்டார். சூரியன் மறைவதற்குள்ளாகவே அனுமன் வந்து விட்டார் என்று கூக்குரலிட்டார்கள். வானர வீரர்களின் கூக்குரலுக்கு அனுமன் எதிர் சப்தமிட்டார். இலங்கை நகரத்திற்குள் இச்சத்தத்தை கேட்டு வெற்றிக் கூக்குரலிட்டுக் கொண்டிருந்த ராட்சசர்கள் பயத்தில் உறைந்தார்கள். அனுமன் யுத்தகளத்திற்கு அருகில் மூலிகை மலையை இறக்கி வைத்து விட்டு அனைவரையும் வணங்கி நின்றார்.
ராமர் விரைவாக வந்த அனுமனைப் போற்றி வாழ்த்தினார். விபீஷணன் அனுமனை கட்டி அனைத்து தனது வாழ்த்துக்களை கூறினார். லட்சுமணன் மூலிகை வாசத்தில் தூங்கி எழுவது போல் எழுந்தார். அவரது உடலில் இருந்த காயங்கள் அனைத்தும் மறைந்தது. யுத்தம் ஆரம்பித்தது முதல் யுத்தகளத்தில் இறந்து கிடந்த வானர வீரர்கள் தூக்கத்தில் இருந்து எழுவது போல் எழுந்தார்கள். அம்புகளால் மயக்கமடைந்தும் காயமடைந்தும் இருந்த வானர வீரர்கள் மூலிகையின் வாசம் பட்டதும் காயத்திற்கான அறிகுறிகள் ஏதும் இல்லாமல் புதுப் பொலிவுடன் எழுந்தார்கள். யுத்தம் ஆரம்பித்த நாள் முதல் வானர வீரர்களால் குவியல் குவியல்களாக கொல்லப்பட்ட ராட்சச வீரர்களை தேவர்கள் பார்த்தால் அவமானமாக இருக்கும் என்று கருதிய ராவணன் இறந்து கிடக்கும் ராட்சச வீரர்களை உடனே கடலில் தூக்கி வீசச்சொல்லி உத்தரவிட்டிருந்தான். அதன் விளைவாக இறந்த ராட்சச வீரர்கள் பிழைக்க வழி இல்லாமல் போனது.