ராமர் அனுமனிடம் பேச ஆரம்பித்தார். அனுமனே இந்த மலையில் இருக்கும் மூலிகைகள் அனைத்தும் அங்கிருக்கும் குளிர்ந்த சூழ்நிலையில் உயிர் வாழும் தன்மையுடையது. இங்கிருக்கும் வெப்ப சூழ்நிலையில் சில நாட்களில் வாடி விடும். அப்படி இந்த மூலிகைகள் வாடி இறந்தால் அதற்கு நாம் காரணமாகி விடுவோம். அப்படி நடந்தால் நாம் இயற்கைக்கு எதிராக செயல்பட்டது போலாகிவிடும். ஆகையால் இந்த மூலிகை மலையை எங்கிருந்து எடுத்து வந்தாயோ அங்கேயே வைத்து விட்டு வந்துவிடு என்று உத்தரவிட்டார். அனுமன் ராமரின் கட்டளையே ஏற்று மூலிகை மலையை மீண்டும் எடுத்த இடத்திலேயே வைத்து விட்டு திரும்பினார்.
ராமருடன் சுக்ரீவனும் விபீஷணனும் யுத்தத்தில் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பவற்றை பற்றி ஆலோசனை நடத்தினார்கள். அப்போது விபீஷணன் பேச ஆரம்பித்தான். ராவணன் தங்களுடன் யுத்தம் செய்து தோற்று ஓடி விட்டான். கும்பகர்ணன் இறந்து விட்டான். ராவணனுடைய படை தளபதிகளும் பல வலிமையான வீரர்களும் இறந்து விட்டார்கள். இனி ராவணன் உங்களுடன் யுத்தம் செய்ய வர மாட்டான். இந்திரஜித் மட்டும் மாயங்கள் செய்து மறைந்திருந்து வலிமையான அஸ்திரங்களை தங்களின் மேல் உபயோகித்து விட்டு வெற்றி வீரன் போல் திரும்பி சென்றான். ஏற்கனவே உங்கள் மீதும் வானர வீரர்கள் மீதும் இந்திரஜித் பல வலிமையான அஸ்திரங்களை உபயோகித்து வீணடித்து விட்டான். இப்போது அவன் தவ வலிமையும் அஸ்திர வலிமையும் இல்லாமல் இருக்கிறான். ஆகையால் அவனும் யுத்தத்திற்கு வருவானா என்று தெரியாது. ஆகையால் நாம் நகரத்திற்குள் இருக்கும் ராட்சசர்கள் மீது திடீர் தாக்குதல் நடந்தலாம். இதனால் கோபத்தில் ராவணன் யுத்தம் செய்ய வருவான். அவனை வெற்றி பெற்றால் மட்டுமே யுத்தம் நிறைவு பெறும். எனவே இந்த திடீர் தாக்குதலுக்கு அனுமதி கொடுங்கள் என்று விபீஷணன் ராமரிடம் கேட்டுக் கொண்டான்.
ராமர் பலவகையில் யோசனை செய்து திடீர் தாக்குதல் நடத்தும் பொறுப்பை சுக்ரீவனிடம் கொடுத்தார். சூக்ரீவன் வேகமாகவும் விவேகமாகவும் செயல்படும் அனுமன் உட்பட பல வானர வீரர்களை தேர்வு செய்தான். அவர்களிடம் இந்த இரவு நேரத்தில் பெரிய தீப்பந்தங்களுடன் இலங்கை நகரத்திற்குள் நுழைந்து கண்ணில் படும் அனைத்து மாளிகைகளுக்கும் தீ வைத்து விடுங்கள் என்றான். வானர வீரர்கள் தீப்பந்தத்துடன் நகரத்திற்குள் நுழைந்து பார்த்த இடத்தில் எல்லாம் நெருப்பை பற்ற வைத்தார்கள். தேவலோகத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட முத்துக்கள் ரத்தினங்கள் வைரங்கள் சந்தனக் கட்டைகளால் கட்டப்பட்ட மாட மாளிகைகளும் கோபுரங்களும் எரிந்து சாம்பலாயின. இரவு நேரத்தில் வைரம் போன்று ஜொலித்த இலங்கை நகரம் இப்போது சூரியன் எரிவதைப் போல் நெருப்பில் எரிந்தது. ராட்சசர்கள் பலர் நெருப்பில் அலறி ஒட்டம் பிடித்தார்கள். நெருப்பு வைத்தவர்கள் வானரங்கள் என்பதை அறிந்த ராட்சச வீரர்கள் எதிர் தாக்குதல் நடத்த ஆயத்தமானார்கள். இதனை கண்ட சூக்ரீவன் மற்ற வானர வீரர்களிடம் நகரத்தை சூழ்ந்து கொள்ளுங்கள். எதிர்த்து வரும் ராட்சச வீரர்களை கொன்று குவியுங்கள் என்று கட்டளையிட்டான். மூலிகை வாசத்தில் உடல் வலிமையும் புத்துணர்ச்சியும் பெற்ற வானர வீரர்கள் சுக்ரீவனின் வார்த்தைகளில் உற்சாகமடைந்தார்கள். எதிர்த்து வந்த ராட்சசர்களை எல்லாம் கொன்று குவித்தார்கள். சில ராட்சச வீரர்கள் நகரத்திற்குள் நடக்கும் விபரீதத்தை ராவணனிடம் தெரிவித்தார்கள். இதனால் கோபம் கொண்ட ராவணன் கும்பகர்ணனின் மகன்களான கும்பனையும் நிகும்பனையும் போர் முனைக்கு செல்லுமாறு கட்டளையிட்டான். இருவருக்கும் துணையாக வலிமையான வீரர்களான யூபாக்சன் சோணிதாக்சன் பிரஜங்கன் கம்பனன் என்ற ராட்சச வீரர்களையும் அனுப்பினான். ராவணனின் கட்டளையை ஏற்றுக் கொண்ட கும்பனும் நிகும்பனும் பெரிய படையுடன் இரவு நேரத்தில் சங்கு நாதம் செய்து யுத்த களத்திற்கு சென்றார்கள்.