ராமரை வணங்கி வலம் வந்த சீதை எனது உயிர் இந்த ராமருக்கு சொந்தம் என்பது உண்மையானால் எனது மனம் ராமரை விட்டு ஒரு வினாடி கூட பிரியாமல் இருப்பது உண்மையானால் நான் மாசற்றவள் என்பது உண்மையானால் இந்த அக்னி தேவர் என்னை காப்பாற்றட்டும் என்று அக்னியில் இறங்கினாள் சீதை. ராமர் தன் முகத்தில் எந்த விதமான சலனமும் இல்லாமல் அமைதியாக இருந்தார். ராமரை மீறி ஒன்றும் செய்ய முடியாமல் அனைவரும் நடுங்கியபடி அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தனர். அக்னி சீதையை சுடாமல் இருந்தது. எதனால் ராமர் இப்படி செய்கிறார் என்று கேள்வி கேட்க முடியாமல் அனைவரும் ராமரின் முகத்தையும் அக்னியையும் திரும்பத்திரும்ப பார்த்தபடி இருந்தனர். தேவர்கள் சூழ பிரம்மா ராமரின் முன்பு வந்தார்.
ராமர் பிரம்மாவை வணங்கி நின்றார். பிரம்மா ராமரிடம் பேசத் தொடங்கினார். ராம பிரானே தாங்கள் என்ன காரியம் செய்து விட்டீர்கள்? ஏன் இது போல் நடந்து கொண்டீர்கள் என்று கேட்டார். அதற்கு ராமர் சூரியனிடமிருந்து வெளிச்சச்தை எப்படி தனியாக பிரிக்க முடியாதோ அது போல் சீதையை என்னிடமிருந்து பிரிக்க முடியாது. சீதை கொழுந்து விட்டு எரியும் நெருப்பைப் போன்றவள். அவளை யாராலும் நெருங்க முடியாது. மூன்று உலகங்களிலும் உள்ள தூய்மையான பொருள்களை விட சீதை தூய்மையானவள். இவை அனைத்தும் எனக்கு நன்றாக தெரியும். ஆனால் சிலகாலம் ராட்சசர்களின் கட்டுப்பாட்டில் இருந்த சீதையை தர்மத்தின்படி யுத்தம் செய்து அடைந்த நான் தர்மப்படி அவள் புனிதமானவள் என்று மூன்று உலகங்களுக்கும் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். அவளை அப்படியே ஏற்றுக் கொண்டால் ராமர் சீதையின் அழகில் மயங்கியதால் தான் அவளை ஏற்றுக் கொண்டார். சீதை மீது அன்பு ஒன்றும் இல்லை என்று யாரும் சொல்லி விடக்கூடாது. நான் எவ்வளவு அன்பு சீதை மீது வைத்திருக்கிறேன் என்றும் சீதை என் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறாள் என்றும் எங்கள் இருவருக்கும் தெரியும். சீதை புனிதமானவள் என்பதை அனைவரின் முன்பும் நிரூபிக்க வேண்டி இத்தனை பெரிய கடுமையான வார்த்தைகளை உபயோகிக்க வேண்டிய சூழ்நிலை வந்தது. அதனால் சீதையிடம் சொல்லக்கூடாத கடுமையான வார்த்தைகளை சொல்லி அவளைக் காயப்படுத்தினேன். அதற்கு வேறு காரணங்களும் உண்டு. சிறிது நேரத்தில் சீதைக்கு அந்த காரணம் தெரியும் போது அனைவருக்கும் தெரியும் என்று சொல்லி முடித்தார் ராமர்.
ராமரின் முன் எரிந்த கொண்டிருந்த அக்னியில் இருந்து வெளிவந்த அக்னி தேவர் சீதையை அழைத்துக் கொண்டு வந்து ராமரிடம் ஒப்படைத்தார். அப்போது சீதை இளம் சூரியனைப் போல் பிரகாசித்தாள். அப்போது விண்ணிலிருந்து தசரதர் அங்கு வந்தார். தசரதரைக் கண்டதும் ராமர் உட்பட அனைத்து வானரங்களும் ராட்சசர்களும் அவருக்கு மரியாதை செலுத்தினார்கள். தசரதர் சீதையிடம் பேச ஆரம்பித்தார். ராமர் உன்னிடம் கடுமையான வார்த்தைகளை சொல்லி விட்டார் என்று வருத்தப்படாதே. ராமர் தர்மத்தை கடைபிடித்து அதன் படி நடப்பவர். தண்டகாருண்ய காட்டில் நீ விரும்பிய மானை ராமர் கொண்டு வரச் சென்ற போது லட்சுமணன் உனக்கு காவலாக இருந்தான். அப்போது ராவணனின் சூழ்ச்சியால் ராமரின் குரலில் அபயக் குரல் எழுப்பினான் மாரீசன் ராட்சசன். இதனை நம்பிய நீ உன்னை தாயாக எண்ணிய லட்சுமணனை தீயைப் போல் சுடும் பேசக்கூடாத கடுமையான வார்த்தைகளால் பேசி தவறு செய்து விட்டாய். கடும் வார்த்தைகளை பேசிய நீ அதே கடுமையான வார்த்தைகளால் உனது தண்டனையை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற கோட்பாட்டின் படி நீ செய்த தவறுக்கான தண்டனையை நீ அனுபவித்தே ஆக வேண்டும். அதற்கான தண்டனையை நீ அனுபவிக்க மிகவும் கஷ்டப்படுவாய் என்று எண்ணி தர்மத்தின் படி உன்னை கடும் சொற்களால் பேசினார். இதனால் நீ அடைந்த மன உளைச்சலைப் போலவே சீதையை இப்படிப் பேசி விட்டோமே என்று அவனும் மன உளைச்சல் அடைந்து உனது தண்டனையில் பாதியை ஏற்றுக் கொண்டான். மேலும் லட்சுமணனை தீ சுடுவதைப்போல் வார்த்தைகள் பேசிய உன்னை அக்னியில் இறங்க வைத்து தீயால் சுட்டு நீ செய்த தவறுக்கான தண்டனையை முழுமையாக அனுபவிக்க வைத்தது மட்டுமல்லாமல் நீ புனிதமானவள் என்பதையும் இந்த உலகத்திற்கும் காட்டி விட்டார் ராமர். எனவே அவரின் மீது கோபம் கொள்ளாதே என்று சீதையிடம் பேசி முடித்தார் தசரதர்.