பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #17
வில்லாளிகளில் மிகச் சிறந்த காசிராஜனும் மகாரதனாகிய சிகண்டியும் திருஷ்டத்யும்னனும் விராடனும் தோல்வியை என்பதை அறியாத சாத்யகியும்
பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #18
துருபதனும் திரௌபதியின் ஐந்து மகன்களும் பெரும் தோள்களுடைய சுபத்திரையின் மகன் அபிமன்யுவும் தனித்தனியே தங்களுக்குரிய சங்குகளை முழங்கினார்கள்.
பகவத்கீதையின் இந்த இரண்டு சுலோகத்தில் சொல்லப்பட்டவர்கள் யார் யார் என்று முதலில் வரும் சில சுலோகங்களில் விளக்கமாக சொல்லப்பட்டுள்ளது.
இரண்டு சுலோகத்திலும் எழும் பொதுவான கேள்வி: பாண்டவர்களில் முக்கியமானவர்கள் அத்தனை பேரும் ஏன் ஒரே நேரத்தில் சங்குகளை ஊதினார்கள்?
தாங்களும் தங்களின் படைகளும் யுத்தத்திற்கு தயாராக இருக்கிறோம் என்றும் தங்களின் படைகளை உற்சாகப்படுத்தவும் அவர்களிடம் உள்ள சங்குகளை தனித்தனியாக ஒரே நேரத்தில் முழங்கினார்கள்.
மேலும் இதில் கவனிக்க வேண்டியது சங்கின் சத்தமாகும். அர்ஜூனனும் பீமனும் முழங்கிய சங்குகளிலிருந்து வந்த சத்தம் எதிரிகளுக்கு பயத்தை உருவாக்கியது போல இவர்கள் முழங்கிய சங்குகளில் இருந்து வரும் சத்தம் பாண்டவ படைகளின் பயத்தை போக்குகிறது. மிகப்பெரிய ராட்சச ராட்டினத்தில் செல்பவர்களை கவனித்தால் புரியும் அதில் செல்பவர்கள் ஆ ஊ என்று சத்தம் போடுவார்கள். ஏன் என்றால் உரக்கமாக கத்தினால் வரும் சத்தத்திலிருந்து பயம் குறையும். யுத்தத்தில் ஒருவரை ஒருவர் கொல்லப் போகிறார்கள். மரண பயம் படைகளில் யாருக்கேனும் இருந்தால் சங்கு நாதத்தில் இருந்து வரும் ஒலியானது மனித மனதில் உள்ள பயத்தை பல விதங்களில் சரி செய்து யுத்தம் செய்ய ஒரு வெறியை கூட்டும். அதே ஒலி மிகவும் வெறித்தனத்துடன் இருப்பவர்களின் மனதை அமைதிப்படுத்தி யுத்த தர்மத்துடன் யுத்தம் செய்ய வைக்கும். இல்லை என்றால் யுத்த வெறியில் ஆயுதம் இல்லாதவர்களையும் யுத்த களத்தில் இருந்து பயந்து பின் வாங்குபவர்களையும் கொன்று தர்மத்திற்கு எதிராக செயல்படுவார்கள்.
சங்கின் முழக்கமனாது பலவகைப்படும். சங்கை முழங்குபவர்கள் என்ன தேவைக்காக எப்படி முழக்கம் செய்கிறார்கள் என்பதைப் பொறுத்து அதன் பலன் உண்டாகும். உதாரணமாக இசை ஒன்று தான் அதை என்ன ராகத்தில் இருக்கிறது என்பதை பொறுத்து ராகத்திற்கு ஏற்றார் போல் மகிழ்ச்சி துக்கம் பயம் என ஒருவருக்குள் இசையால் எந்த மனநிலையையும் வரவழைக்க முடியும். இசையால் உடல் நோய்களைக் கூட சரி செய்ய முடியும். இசையைப் போலவே மனித உணர்வுகளை பாதிப்பதில் சங்கின் நாதமும் முக்கியமானது. பயத்தைப் போக்கவும் அல்லது உண்டாக்கவும் குழப்பத்தைப் போக்கவும் அல்லது உண்டாக்கவும் தெளிவு படுத்தவும் அமைதிப் படுத்தவும் யுத்த களத்தில் சங்கு பயன்படுகிறது. ஆகவே யுத்த களத்தில் சங்கின் பங்கு மிகவும் முக்கியமானது.