பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #44
ஜனார்த்தனா குல தர்மங்கள் அடியோடு அழிந்து விட்டபின் இருக்கும் மனிதர்களுக்கு எக்காலமும் நரகவாசம் என்று கேள்விப்பட்டிருக்கிறோம்.
இந்த சுலோகத்தில் உள்ள கருத்து என்ன?
வர்ணகலப்பின் காரணமாக சில தலைமுறைகள் சென்ற பிறகு பார்த்தால் பலரும் குலத்திற்கு உரிய தர்மங்களை மறந்து போயிருப்பார்கள். இதனால் குலத்திற்குரிய வழிபாட்டு முறைகள் மறைந்து அழிந்து போகும். அதனால் அந்த தர்மங்களை கடைபிடிக்காமல் அவரவர்கள் தங்களின் விருப்பம் போல் செய்து கொண்டிருப்பார்கள். இப்போது ஒழுக்கமுறைகள் இல்லாததால் தவறுகள் செய்ய அதிக வாய்ப்புள்ளது. இங்கு அதர்மம் சூழ்ந்து கொள்ளும் பாவங்கள் வந்து சேரும். இதன் விளைவாக அவர்கள் நரகத்திற்கு செல்வார்கள். இதனை படித்து அறிந்து வைத்துள்ள அர்ஜூனன் கண் கூடாக இதனை பார்க்கவில்லை. ஏனெனில் அர்ஜூனன் காலத்தில் இது போல் ஒரு சம்பவம் நடைபெறவில்லை. ஆகையால் இதனை கேள்விப்பட்டிருக்கிறோம் என்று சொல்கிறான்.
பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #45
ராஜ்யம் சுகம் ஆகியவற்றிற்கு ஆசைப்பட்டு நம் உறவினர்களேயே கொல்லத் தயாராக உள்ளோம். இது மிகப்பெரிய பாவம் என்று உணர்ந்தும் அதனைச் செய்ய துணிந்து நிற்கிறோம்.
இந்த சுலோகத்தில் உள்ள கருத்து என்ன?
மேல் சொல்லப்பட்ட 3 சுலோகங்களில் உள்ளவற்றை நாம் தெரிந்தும் உணர்ந்தும் வைத்திருக்கிறோம். ஆனாலும் ராஜ்யம் சுகம் ஆகியவற்றிற்கு ஆசைப்பட்டு நம் உறவினர்களேயே கொல்லத் துணிந்து இந்த பாவத்தை செய்ய வந்திருக்கிறோம் என்று அர்ஜூனன் கிருஷ்ணரிடம் கூறுகிறான்.