ராமர் ராவணனிடம் பேச ஆரம்பித்தார். ராவணா நீ இன்று மிகவும் பயங்கரமாக யுத்தம் செய்து என்னுடைய படைகளில் உள்ள முக்கியமான வீரர்களை அழித்திருக்கிறாய். லட்சுமணனுடனும் என்னுடனும் நீண்ட நேரம் யுத்தம் செய்து மிகவும் களைப்புடன் இருக்கின்றாய். மேலும் இப்போது உன்னிடம் தேரும் இல்லை எந்த ஆயுதங்களும் இல்லை. அரசனுக்குரிய எந்த விதமான அறிகுறியும் இல்லாமல் சாதாரண வீரன் போல் தரையில் நின்று கொண்டு நிராயுதபாணியாக இருக்கிறாய். யுத்தத்தில் நிராயுதபாணியாக நிற்பவனை தாக்குவது தர்மத்திற்கு எதிரானது. எனவே இங்கிருந்து உயிருடன் செல்ல உன்னை அனுமதிக்கிறேன். நீ உன் நகரத்திற்குச் சென்று உனது களைப்பை போக்கிக் கொண்டு நாளை ஆயுதங்களுடன் உனது தேரில் வந்து மீண்டும் என்னுடன் யுத்தம் செய். அரசர்களுக்குரிய ரதம் இல்லாமல் உன்னுடன் நான் யுத்தம் செய்கிறேன். அப்போது மேலும் என்னுடைய ஆற்றலை நீ அறிந்து கொள்வாய் என்றார். ராவணன் மிகவும் அவமானத்துடன் தலை கவிழ்ந்தவனாய் தனது அரண்மனைக்குப் போய்ச் சேர்ந்தான். ராவணன் தோல்வி அடைந்து சென்றதை கண்ட தேவர்களும் முனிவர்களும் இனி நமக்கு நல்ல காலம் பிறந்து விட்டது என்று எண்ணி மகிழ்ச்சி அடைந்து ஆரவாரம் செய்தார்கள்.
ராமரை பற்றி ராவணன் பலவகையாக சிந்திக்க ஆரம்பித்தான். ஒரு மானிடனால் எப்படி நம்மை வெற்றி கொள்ள முடிந்தது? எந்த தேவர்களாலும் நம்மை வெல்ல முடியாது என்று வரம் வாங்கிய போது மனிதனால் தான் உனக்கு ஆபத்து என்று நம்மிடம் பிரம்மா சொன்னது இந்த ராமரை தானோ என்று பல வகையிலும் சிந்தனை செய்த ராவணன் அரசவையை கூட்டி அனைவரிடமும் பேச ஆரம்பித்தான். ராமரைப் பற்றி அனைவரும் சொன்னது உண்மையாகி விடும் போல் உள்ளது. என்னுடைய தவ வலிமைகள் எல்லாம் எங்கே போனது என்று தெரியவில்லை. இப்போது நம்மை பாதுகாக்க கும்பகர்ணன் ஒருவன் தான் இருக்கின்றான். கும்பகர்ணனை வெல்ல யாராலும் முடியாது. மிகவும் பராக்கிரமசாலி. கும்பகர்ணன் யுத்தத்திற்கு வந்து விட்டால் விரைவாக அனைவரையும் அழித்து விடுவான். நமது பிரச்சனைகள் அனைத்தும் முடிந்துவிடும். சாபத்தினால் ஆறு மாதம் தூங்கிக் கொண்டும் ஆறு மாதம் விழித்துக் கொண்டும் இருக்கும் கும்பகர்ணன் இப்போது தூங்க ஆரம்பித்து ஒன்பது நாட்கள் மட்டுமே ஆகிறது. கும்பகர்ணன் தூக்கத்திலிருந்து தானாக எழுந்து கொள்ள இன்னும் பல நாட்கள் ஆகும். அது வரை காத்திருக்க முடியாது. கும்ப கர்ணனை எப்படியாவது எழுப்பி யுத்தம் ஆரம்பித்த தகவலை சொல்லி இங்கே அழைத்து வாருங்கள். மேலும் நமது நகரத்தை காவல் காக்கும் காவலர்களை எச்சரிக்கையுடன் இருக்கச் சொல்லுங்கள் என்று உத்தரவிட்டான் ராவணன்.
ராமரிடம் தோல்வி அடைந்த அவமானத்தை விட ராமர் சொன்ன வார்த்தைகள் ராவணனை மிகவும் காயப்படுத்தியது. தன்னை மிகவும் அவமானமாக உணர்ந்தான். இதனால் யாரையும் சந்திக்காமல் தனிமையில் ராமரைப் பற்றிய சிந்தனையிலேயே இருந்தான். கும்பகர்ணனை எழுப்புவதற்கான காரியத்தில் ராட்சச வீரர்கள் இறங்கினார்கள். கும்பகர்ணன் எழுந்ததும் பசி என்று தனக்கு அருகில் கிடைத்ததை எல்லாம் விழுங்க ஆரம்பிப்பான். எனவே முதலில் அவனுக்கு தேவையான தண்ணீர் உணவுகளை அவனை சுற்றி வைத்தார்கள். சங்கு பேரிகை என்று அனைத்து வாத்தியங்களையும் வைத்து அவனது காதின் அருகில் சத்தம் எழுப்பினார்கள். யானைகளை வைத்து அவனது உடலை முட்ட வைத்தார்கள். நீண்ட கம்புகளாலும் ஈட்டிகளாலும் அவனது கால்களை குத்த ஆரம்பித்தார்கள். ஒரு வழியாக லேசாக தூக்கத்திலிருந்து கண் விழித்த கும்பகர்ணனுக்கு பசி எடுக்க ஆரம்பித்தது. பசிக்கு உணவு தேடி எழுந்த கும்பகர்ணன் தன்னை சுற்றி இருக்கும் உணவுகளை சாப்பிட்டு முடித்ததும் அனைவரும் தன்னை எழுப்ப முயற்சி செய்வதை கண்டு கடும் கோபமடைந்தான். கும்பகர்ணனிடம் ராட்சச வீரர்கள் ராவணனின் உத்தரவையும் யுத்தத்தில் நடந்தவற்றையும் கூறினார்கள். அனைத்தையும் கேட்ட கும்பகர்ணன் தனது தொடர் தூக்கத்தை விட்டு எழுந்து ராவணனை சந்திக்க சென்றான்.


























