ராமாயணம் அயோத்தியா காண்டம் பகுதி -1

அயோத்திக்கு வலிமைமிகுந்த அரசனாக முடிசூட்டிக்கொள்ளும் தகுதி ராமருக்கு வந்து விட்டதை தசரதர் உணர்ந்தார். தன்னைப்போலவே ராமனும் இந்த உலகத்தை அரசனாக இருந்து ஆட்சி செய்வதை பார்க்க ஆசைப்பட்டார். ராமனுக்கு முடிசூட்டி இளவரசனாக்கி விடலாம் என்று தீர்மானித்தார். ஆகையால் இதனைப்பற்றி ஆலோசிக்க வசிஷ்டர் முனிவர்கள் மற்றும் வேற்று நாட்டு அரசர்கள் சிலரையும் ஆலோசனை சொல்வதில் வல்லவர்கள் சிலரையும் கலந்தாலோசிக்க வரவழைத்தார். ராமனை அரசனாக்க முடிவெடுத்த பின்னர் கேகய மன்னர் மற்றும் ஜனகரிடம் சொல்லிக்கொள்ளலாம் என்று தசரதர் அவர்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை. அரசவை கூடியது அனைவரும் வந்து அவரவர்களுக்கு தக்கபடி ஆசனங்களில் அமர்ந்தனர். அனைவரையும் வரவேற்ற தசரதர் பல ஆண்டுகாலம் இந்நாட்டை ஆட்சி செய்து பாதுகாத்து வருகிறேன். தனக்கு முதுமை வந்து விட்டபடியால் ராமனை இளவரசனாக முடிசூட்டி விடலாம் என்று ஆசைப்படுகிறேன். தங்கள் கருத்தை சொல்லுங்கள் என்று அனைவரிடமும் கேட்டார் தசரதர்.

ராமர் மக்களின் மனம் கவர்ந்தவராய் இருக்கிறார். எதிரிகளிடம் இருந்து மக்களையும் நாட்டையும் காப்பாற்றும் வல்லைமையும் இருக்கிறது. சத்தியத்தை கடைபிடிக்கும் ராமனை இளவரசனாக முடிசூட்டலாம் என்று அனைவரும் தரசதரின் கருத்தை வரவேற்றார்கள். இதனைக்கேட்ட தசரதர் தனக்கு இப்போது ஒரு சந்தேகம் ஏற்படுகின்றது அதனை இப்போதே கேட்டு நிவர்த்தி செய்து கொள்ளவிரும்புகின்றேன். தங்கள் கருத்தை ஒளிவு மறைவில்லாமல் யார் வேண்டுமானாலும் கூறலாம் என்று தனது சந்தேகத்தை கேட்க ஆரம்பித்தார். இத்தனை ஆண்டு காலம் நீதி நெறி தவறாமல் அயோத்தையை ஆட்சி செய்து கொண்டிருக்கின்றேன். நான் சொன்னதை கேட்டதும் எந்த மறுப்பேதும் சொல்லாமல் ராமரை இளவரசனாக முடிசூட்டலாம் என்று தங்கள் கருத்தை சொன்னீர்கள். இதன் காரணத்தை அறிந்து கொள்ள விரும்புகின்றேன். என்னுடைய ஆட்சியில் ஏதேனும் குறைகள் இருக்கின்றதா என்று கேட்டார்.

தங்களுடைய புதல்வன் ராமர் தேவர்களைப் போல் புத்திமானாக இருக்கின்றார். சத்தியத்தின் உருவமாகவும் நல்லொழுக்கத்தின் உருவமாகவும் இருக்கின்றார். தேவ அசுர மானிடர்கள் என் அனைவரது அஸ்திர வல்லமைகளையும் பெற்றவராக இருக்கின்றார். தந்தையான உங்களை பார்த்துக்கொள்வது போல் அன்புடன் நாட்டு மக்களை பார்த்துக்கொள்கிறார். மக்கள் துக்கப்படும் போது தானும் துக்கப்படுகிறார். மக்கள் மகிழ்ச்சி அடையும் போது தந்தை குழந்தையை பார்த்து மகிழ்வதை போல் மகிழ்ச்சி அடைகிறார். ஆசைக்கு அடிமைபடாமல் தன்புலன்களை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றார். தங்கள் பரம்பரையில் வந்தவர்களில் மேன்மையானவராக இருக்கின்றார். இவ்வுலகில் அவரது பெருமைகள் வளர்ந்து கொண்டே செல்கிறது. இவரை தற்போது இளவரசனாக முடிசூட்டினால் தங்களுக்கும் தங்கள் பரம்பரைக்கும் மேலும் புகழை பெற்றுத்தருவார் ராமர். ஆகவே அவரை இளவரசனாக முடிசூட்டலாம் என்று கூறினோம் என்று தங்கள் கருத்தை கூறினார்கள். அனைவரது கருத்தை கேட்டு மகிழ்ந்த தசரதர் ராமரின் முடிசூட்டு விழாவுக்கு நல்ல நாள் பார்த்து சொல்லுமாறு கேட்டுக்கொண்டார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.