ராமாயணம் 3. ஆரண்ய காண்டம் பகுதி – 33

ராமரிடம் ராட்சசன் பேச ஆரம்பித்தான். எனது பெயர் கபந்தன். பிரம்மாவை குறிந்து கடுமையான தவம் இருந்து நீண்ட ஆயுளைப் பெற்றேன். நீண்ட ஆயுள் கிடைத்து விட்டது இனி யாராலும் நம்மை ஒன்றும் செய்ய முடியாது என்ற கர்வத்தில் இந்திரனை போருக்கு அழைத்தேன். இந்திரனின் ஆயுதத்தால் எனது தலையும் காலும் உடலுக்குள் சென்று விட்டது. நீண்ட ஆயுள் பெற்ற நான் வாய் இல்லாமல் சாப்பிடாமல் எப்படி வாழ்வேன் என்று புலம்பினேன். கால்கள் இல்லாததினால் நீண்ட கைகளையும் வயிற்றுப்பகுதியில் வாயும் கொடுத்து இதே உடலுடன் இருப்பாயாக என்று இந்திரன் என்னை சபித்து விட்டுவிட்டான். இந்திரனிடம் சாப விமோசனம் கேட்டு முறையிட்டேன். ஒரு நாள் ராமர் லட்சுமணன் இருவரும் வந்து உனக்கு விமோசனம் கொடுப்பார்கள் என்று சாப விமோசனமாக கூறினார். தற்போது எனது கையை நீங்கள் வெட்டியதும் எனக்கு பழைய நினைவுகள் வந்துவிட்டது. நீங்கள் தான் ராம லட்சுமணன் என்று எண்ணுகிறேன். எனது உடலை நீங்கள் எரிந்து விடுங்கள். நான் எனது பழைய உடலெடுத்து தேவலோகம் சென்று விடுவேன் என்று கேட்டுக்கொண்டான். ராம லட்சுமணன் இருவரும் காட்டில் விறகுகளை குவித்து அந்த ராட்சச உடலை எரித்துவிட்டனர். அந்த நெருப்பில் இருந்து மங்கள ரூபத்துடன் கபந்தன் வெளியே வந்து ராமரை வணங்கினான். நீங்கள் சீதை தேடிக் கொண்டிருக்கின்றீர்கள். முதலில் பம்பா சரஸ் நதிக்கரைக்கு அருகில் இருக்கும் ரிச்யமுக மலையில் வசித்து வரும் சுக்ரிவன் என்ற வன ராஜாவை சந்தியுங்கள். அவர் தனது அண்ணன் வாலியால் ராஜ்யத்தில் இருந்து துரத்தப்பட்டு காட்டில் வாழ்ந்து வருகிறார். அவரை சந்தித்து அவருடைய நட்பை பெற்றுக் கொள்ளுங்கள். ராட்சசனிடம் இருந்து சீதையை மீட்க அவர் உங்களுக்கு உதவி செய்வார். நீங்கள் நிச்சயமாக சீதையை அடைவீர்கள் என்று சொல்லி தேவலோகம் நோக்கி புறப்பட்டான் கபந்தன்.

ராமரும் லட்சுமணனும் பம்பா சரஸ் நோக்கி சென்றார்கள். பம்பா சரஸ் நதிக்கரைக்கு அருகில் ஆசிரமம் ஒன்று இருப்பதை கண்டு அதன் அருகில் சென்றார்கள். ஆசிரமத்தில் இருந்த வயதான பெண்மணி வந்திருப்பது இறைவனின் அவதாரம் என்பதை தனது ஞான திருஷ்டியில் அறிந்து கொண்டாள். அவர்களை வணங்கி வரவேற்று உணவளித்து உபசாரங்கள் செய்தாள். உபசாரங்களை ஏற்றுக்கொண்ட ராமர் தாங்கள் யார்? இந்த ஆசிரமத்தில் இருந்த ரிஷிகள் எங்கே என்று கேட்டார். அதற்கு அந்த வயதான பெண்மணி எனது பெயர் சபரி. இந்த இடம் மதங்க மகரிஷியின் ஆசிரமம். இங்கிருந்த ரிஷிகள் அனைவரும் தங்களது ஆத்ம சாதனம் முற்றுப்பெற்று சொர்க்கம் சென்று விட்டார்கள். எனது ஆத்ம சாதனம் முற்றுப்பெறும் தருவாயில் எனது குருவானவர் தான் சொர்க்கம் செல்வதற்கு முன்பாக எனக்கு ஓர் உத்தரவிட்டுச் சென்றார். இந்த ஆசிரமத்திற்கு தசரதரின் புதல்வர்கள் ராம லட்சுமணர்கள் வருவார்கள். அவர்களுக்கு உணவு உபசரனைகள் செய்ய வேண்டும் என்று எனக்கு கட்டளை இட்டு சொர்க்கம் சென்றார். தங்களின் வரவிற்காக இத்தனை காலம் காத்திருந்தேன். தங்களை தரிசித்ததில் நான் மேன்மை அடைந்து விட்டேன் என்று சொல்லி ராமருக்கு பரவச நிலையில் வந்தனைகளும் வழிபாடுகளும் செய்தாள். சபரியின் வழிபாடுகளை ராமர் ஏற்றுக்கொண்டார். தனது குருவின் உத்தரவை செயல் படுத்திய சபரி ராமரை தரிசித்த மகிழ்ச்சியில் தனது உடலை விட்டு சொர்க்கம் சென்றாள்.

ராமரும் லட்சுமணனும் பம்பா சரஸ் நதியில் குளித்த பின் புத்தணர்ச்சி பெற்று மனம் தெளிந்திருப்பதை உணர்ந்தார்கள். ராமர் லட்சுணனிடம் நாம் சீதையை மீட்டெடுப்போம் என்ற நம்பிக்கை எனது மனதில் தோன்ற ஆரம்பித்திருக்கிறது. நாம் நிச்சயம் வெற்றி அடைவோம். நாம் அடுத்து ரிச்யமுக மலைக்கு சென்று வன ராஜா சுக்ரீவனை பார்க்கும் முயற்சியில் அடுத்து ஈடு படவேண்டும் விரைவாக சொல்வோம் வா என்று அங்கிருந்து இருவரும் கிளம்பினார்கள்.

ஆரண்ய காண்டம் முற்றியது அடுத்து கிஷ்கிந்தா காண்டம்

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.