வசிஷ்டர் தசரதரை பார்த்து இது சித்திரைமாதம் மங்களமான காலம் வனங்களெல்லாம் பூத்துக்குலுங்கும் நேரம். புஷ்ய நட்சத்திரத்தில் பட்டாபிஷேகத்திற்கு ஏற்பாடுகளை செய்யுங்கள் என்று கூறினார். வசிஷ்டர் கூறிய நாள் வர இன்னும் 3 நாட்களே இருந்தது. இதனை அறிந்து மகிழ்ந்த தசரதர் இன்றிலிருந்து 3 ம் நாளில் ராமருக்கு பட்டாபிஷேகம் என்று அனைவர் முன்னுலையிலும் அறிவித்தார். வசிஷ்டரிடமும் வாமதேவர் என்ற அந்தணரிடமும் பட்டாபிஷேகத்திற்கான பூஜைகள் யாகங்கள் செய்து தருமாறு கேட்டுக்கொண்டார். பட்டாபிஷேகத்திற்கான அனைத்து பணிகளையும் விரைவாக செய்யுமாறு பணியாட்களுக்கு கட்டளையிட்டார்.
தசரதர் ராமரிடம் எனக்கு வயதாகிவிட்டது. நேற்றிரவு கெட்ட கனவு ஒன்று கண்டேன். அதன்படி எனக்கு பெரிய துக்கம் சம்பவிக்கும் என்று சாஸ்திரங்கள் அறிந்தவர்கள் சொல்லி இருக்கின்றார்கள். எல்லா சுகங்களும் நீண்ட ஆயுளும் அனுபவித்து விட்டேன். செய்ய வேண்டிய தேவபித்ரு காரியங்களை அனைத்தையும் செய்துவிட்டேன். இனி உலகில் செய்ய வேண்டியது ஒன்றும் இல்லை. உனக்கு பட்டாபிஷேகம் செய்து சிம்மாசனத்தில் அமரவைக்க வேண்டும் என்ற ஆசை மட்டுமே தற்போது உள்ளது. அதற்கான ஆயத்தப்பணிகள் நடந்து கொண்டிருக்கின்றது. இன்றிலிருந்து 3 நாளில் பட்டாபிஷேகம் நீயும் சீதையும் பட்டாபிஷேகத்திற்காக விரதம் இருக்க வேண்டும். தரையில் படுத்துத் தூங்கி விரதம் இருந்து மங்கள பூஜைகள் செய்துவா என்றார். பரதனும் சத்ருக்கனனும் தற்போது கைகய நாட்டில் இருக்கின்றார்கள். பட்டாபிஷேகத்திற்குள் அவர்களை வரவழைக்க முடியாது. அதற்காக காலம் தற்போது இல்லை. அவர்கள் வரும் வரை பட்டாபிஷேகத்தை தள்ளி வைக்கவும் முடியாது. பரதன் மிகவும் நல்லவன் உன்னிடம் அன்பும் மரியாதையும் வைத்திருப்பவன். ஆகையால் அந்த பட்டாபிஷேகத்திற்கு எந்த ஆட்சேபனேயும் சொல்ல மாட்டான். அவர்கள் வந்ததும் அவர்களுக்கு நடந்ததை தெரியப்படுத்திக் கொள்ளலாம் என்றார். தங்கள் ஆணைப்படி நடக்கின்றேன் என்று ராமர் தசரதரிடம் கூறினார்.
தசரதர் கைகேயிக்கு பல காலங்களுக்கு முன்பு கொடுத்த வாக்கு ஞாபகத்திற்கு வந்தது. அதை பயன்படுத்தி ஏதேனும் விபரிதமாக கேட்டுவிடுவாளோ என்று தசரதருக்கு ஓரு பயம் வந்தது. தந்தையிடம் விடைபெற்ற ராமர் கௌசல்யையிடம் ஆசி வாங்க அவர் இருக்கும் இடம் சென்றார். ராமர் வருவதற்கு முன்பே கௌசல்யைக்கு தகவல் சென்றுவிட்டது. லட்சுமனனும் சீதையும் அவருடன் இருந்தனர். ராமர் கௌசல்யாவை வணங்கினார். சிரஞ்சீவியாக இருப்பாயாக ராஜ்யத்தை நிர்வாகித்து எதிரிகளை அழித்து விரோதிகளை அடக்கி மக்களை காப்பாற்றுவாய். உன் குணத்தினால் உன் தந்தையை திருப்தி செய்து விட்டாய் இது என்னுடைய பாக்கியம் என்று ஆசிர்வாதம் செய்தார்.