கைகேயி மந்தரையின் பேச்சை பொருட்படுத்தவில்லை. மந்தரா ஒரு வேலைக்காரி இவளால் அரச குடும்ப விசயங்களை இவளால் புரிந்து கொள்ளமுடியாது என்ற எண்ணி மந்தரையிடம் பேச ஆரம்பித்தாள். ராமன் தசரத சக்ரவர்த்திக்கு முத்த குமாரன் அவனே இளவரசனாக பதவி எற்க உரிமையுள்ளவன். ராமர் மக்களின் அன்புக்கு பாத்திரமானவன். ஞானிகள் ராமரை தெய்வம் என்று எண்ணி போற்றுகின்றனர். சத்தியத்தின் சொரூபமான ராமன் அறநெறி பிசகாதவன். தன்னை பெற்றடுத்த கௌசலையை விட என் மீது அதிகமாக அன்பு வைத்து எனக்கு பணிவிடை செய்கின்றான். அவன் ஆட்சிக்கு வரும் போது அவனால் எனக்கு எந்த இடைஞ்சலும் வராது. தன் சகோதரர்களை தன் சொரூபமாகவே நேசிக்கின்றான். ராமனுடைய ஆட்சிக்கு பிறகு பரதனும் ஒரு நாள் அரசனாகி இந்நாட்டை ஆட்சி செய்வான். உன் கற்பனைகளை ஒதுக்கு வைத்துவிட்டு நீயும் நாளை பட்டாபிஷேக விழாவில் கலந்து கொள்வாயாக என்று கைகேயி மந்தராவிடம் கூறினாள்.
முன்பு இருந்ததைவிட இப்போது மந்தராவுக்கு முகவாட்டம் அதிகமானது. கைகேயிடம் மேலும் பேச ஆரம்பித்தாள். இப்போது ராமன் அரசனானால் அவனுக்கு பிறகு ராமனின் பிள்ளைகள் அரசனாவார்கள். ராமனுடைய சகோதரனான பரதன் ஒரு போதும் அரசனாக மாட்டான். அரச குமாரர்கள் அனைவரும் ஆட்சி புரிய எண்ணினால் சமுதாயத்தில் குழப்பமே உருவாகும். ராஜதந்திரம் அறிந்த அரசன் ஒருவன் தன் பிள்ளைகளேயே அரசனாக்கவே விரும்புவான். தனக்கு நிகரான உடன் பிறந்தவர்களை உடன் வைத்திருக்கமாட்டார்கள். ஏதேனும் சொல்லி கண்ணுக்கேட்டாத தூரத்திலேயே வைத்திருப்பார்கள். அதுபோல் ராமன் தனது ராஜதந்திரத்தால் பரதனை தூரத்திலேயே வைத்திருப்பான். இப்போதும் பரதன் பல தூரம் தள்ளி தனது தாத்தாவுடன் பல வருடங்களாக இருக்கின்றான். இதனால் மக்கள் பலருக்கு பரதனின் முகமே மறந்துபோயிருக்கும். அனைவரும் ராமரை பற்றியே பேசிக்கொண்டிருக்கின்றார்கள். பரதனை அனைவரும் மறந்து விட்டார்கள்.
ராமன் அரசனானால் பரதனை விரோதி போலவே பார்ப்பான். விரோதிகளை அரசர்கள் எப்போதும் விட்டுவைக்கமாட்டார்கள். பயத்தினால் கொன்று விடுவார்கள். பரதனை ராமன் சந்தேகமாகவே பார்ப்பான் ஒரு நாள் பயத்தில் கொன்று விடுவான். பரதனின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. அவன் உயிருடன் இருக்கவேண்டும் என்றால் அவனின் தாத்தாவுடனேயே தங்க வைத்துவிடு. கௌசலை தசரதரின் முதல் மனைவியாக இருந்து அவரின் அன்புக்கு பாத்திராமாக இருந்தாள். உன்னை திருமணம் செய்ததும் அவரின் அன்புக்கு நீ பாத்திரமானாய். இதனை கௌசலை மறந்திருக்கமாட்டாள். உன் மீது கோபத்துடனே இருப்பாள். நேரம் கிடைக்கும் போது உன்னை பழி வாங்க காத்திருப்பாள். அதற்கான நேரம் இப்போது கௌசலைக்கு வந்துவிட்டது. உன்னை இப்போது பழிவாங்குவாள். உன்னை சிறு வயதில் இருந்து நான் உன்னை பேணி வருகிறேன் உன் நலனில் எனக்கு மிகுந்த அக்கரை உள்ளது. வேறு எந்த குறிக்கோளும் என்னிடம் இல்லை ஆகவே என் சொல்படி நடந்துகொள் இல்லை என்றால் ராமர் பட்டாபிஷேகம் முடிந்ததும் நீயும் பரதனும் வேலைக்காரர்களை போல இங்கு இருப்பீர்கள் என்று சொல்லி முடித்தாள்.