கௌசலையிடம் ஆசிர்வாதம் பெற்ற ராமர் லட்சுமனனிடம் என் உடலுக்கு வெளியில் நடமாடும் என்னுடைய இரணாடாவது உயிர் நீ. என்னோடு சமமாக இருந்து செல்வம் நிறைந்த இந்த நாட்டை நீயும் ஆட்சி செய்யவேண்டும். எனக்கு சொந்தமான இந்த ஆட்சி அதிகார பாக்கியமெல்லம் உன்னுடையதும் ஆகும் என்று கூறினார். மகிழ்ச்சி அடைந்த லட்சுமனன் ராமரின் அன்புக்கு தலைவணங்கி தன்னுடைய வணக்கத்தை தெரிவித்துக்கொண்டான். அனைவரும் அங்கிருந்து விடைபெற்று தங்கள் இருப்பிடம் திரும்பினார்கள். ராமனுடைய இருப்பிடத்திற்கு வந்த வசிஷ்டர் ராமனுக்கு பட்டாபிஷேகம் செய்வதற்கு முன் செய்ய வேண்டிய பூஜைகள் அதற்கான நியதிகளையும் எடுத்துச்சொன்னார். அனைத்தையும் கேட்டுக்கொண்ட ராமர் நியதிகளை முறையாக கடைபிடிப்பதாக வசிஷ்டருக்கு வாக்களித்தார்.
ராமர் அரசனாகப்போகின்றார் என்ற செய்தி அயோத்தி மக்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியது. கொண்டாட்டத்தில் மக்கள் இருந்தார்கள். அந்நேரம் கேகய சக்ரவர்த்திக்கு பணிப்பெண்ணாக இருந்த மந்தரா என்ற கூனிப்பணிப்பெண் கைகேயியை பார்க்க அயோத்திக்கு வந்திருந்தாள். ஊர் முழுவதும் விழாக்கோலம் பூண்டிருப்பதை பார்த்த அவள் அதற்கான காரணத்தை விசாரித்தாள். ராமன் அரசனாகப்போகின்றான் என்ற செய்தியை கேட்ட அவள் மிகவும் திகிலடைந்தாள். தன்னுடைய எஜமானி கைகேயியை பார்க்க அரண்மனைக்கு விரைவாக சென்றாள். கைகேயியை சந்தித்த மந்தரா ராஜகுமாரி அவர்களே ராமர் பட்டாபிஷேகம் செய்து இளவரசனாக போகின்றார் என்றாள். அதனைக்கேட்ட கைகேயி இந்த நல்ல செய்தி கேட்டு மகிழ்ச்சியுடன் இருக்கின்றேன். என்னுடைய மகிழ்ச்சிக்கு இந்த முத்துமாலையை பரிசாக வைத்துக்கொள் என்று தன்னுடைய முத்துமாலையை பரிசளித்தாள். முத்துமாலையை வேண்டா வெறுப்பாக வாங்கிய மந்தரா அதனை தூக்கி எறிந்தாள்.
கேகய நாட்டு ராஜகுமாரி நீங்கள் ஒரு ராஜாவிற்கு மணம் முடித்து கொடுக்கப்பட்டிருக்கின்றீர்கள். இருந்தும் ஒரு குழந்தை போல் நடந்து கொள்கின்றீர்கள்.
இன்று நீங்கள் தசரத சக்ரவர்த்தியின் பேரன்புக்கு இலக்காக இருக்கிறாய் ஆகையால் மகாராணியிகள் மூவருள் முதன்மையானவளாய் இருக்கின்றாய். நாளை ராமன் இளவரசனாக முடிசூடிக்கொண்ட பிறகு ராமரின் தாய் கௌசலை முதன்மை ஆகிவிடுவாள். முதல் இடத்தில் இருக்கும் நீ இரண்டாம் இடத்திற்கு தள்ளப்படுவாய். ராமரும் பரதனும் ராஜகுமாரர்கள் என்னும் ஒரே அந்தஸ்தில் இருக்கின்றார்கள். நாளை ராமர் இளவரசனானதும் பரதன் சாதாரண குடிமகன் ஆகிவிடுவான். இந்த பாங்கில் பரதன் கீழ் நிலைக்கு சென்றுவிடுவான். உன்னுடைய வீழ்ச்சிக்கும் உனது மைந்தனின் வீழ்ச்சிக்கும் நீயே காரணமாகிவிடுவாய். இதனை கண்டும் நான் அமைதியாக இருந்தால் நாளை நீ வருத்தப்படுவதற்கு நானும் காரணமாக இருப்பேன். அதனால் உனக்கு எடுத்துச் சொல்கிறேன். இந்த அடாத செயலை எதிர்த்து நடக்கப்போகின்றவற்றை உனக்கு சொல்வது எனது கடமையாகும் நான் சொல்கின்றபடி கேள் என்று கைகேயியிடம் மந்தரா கூறினாள்.