ராமாயணம் அயோத்தியா காண்டம் பகுதி -26

பரதன் வந்துவிட்டான் என்ற செய்தி அரண்மனை முழுவதும் பரவியது. பரதன் வந்து விட்டதை அளிந்த கௌசலை சுமத்ரையை அழைத்துக்கொண்டு பரதனை பார்க்க புறப்பட்டாள். அப்போது பரதனும் சத்ருக்கனனும் அங்கு வந்து சேர்ந்தான். ராஜ்ஜியம் தனக்கு எளிதில் கிடைத்துவிட்டது என்று எண்ணி பரதன் கேகய நாட்டில் இருந்து பட்டாபிஷேகம் செய்து அரசனாக முடிசூட்டிக்கொள்ள விரைந்து வந்துவிட்டான் என்று கௌசலை எண்ணினாள். கோபத்தில் பரதனிடம் எந்த ஒரு இடையூரும் இல்லாமல் உனக்கு அரச பதவியை கைகேயி பெற்றுக் கொடுத்துவிட்டாள். அதனை ஏற்றுக்கொண்டு சுகமாக வாழ்வாய். உனது தந்தையை எரியூட்டும் நெருப்பில் வீழ்ந்து நானும் அவருடன் மேலுலகம் சென்றுவிடுகிறேன். இங்கு நீயும் உனது தாயும் மகிழ்ச்சியுடன் இருங்கள் என்று புலம்பினாள்.

கௌசலையின் கொடிய விஷம் போன்ற பேச்சைக்கேட்ட பரதன் வேதனையில் கௌசலையின் காலைப்பிடித்தான். தாயே நான் கேகய நாட்டில் வெகு தூரத்தில் இருந்தது தங்களுக்கு தெரியும். இங்கு நடந்த கொடூரமான சூழ்ச்சி நான் அறியாமல் நடந்துவிட்டது. நான் அண்ணன் ராமர் மேல் நான் வைத்திருக்கும் அன்பை தாங்கள் அறிவீர்கள். இந்த பாவச்செயலில் எள் அளவிற்கு என் பங்கு இருந்தாலும் நான் பெற்ற சகல அறிவும் ஞானமும் என்னை விட்டுப்போகட்டும். இந்த உலகத்தில் யார் எந்த பாவம் செய்தாலும் அதனுடைய கர்ம்பலன் என்னேயே வந்து சேரட்டும். சத்தியம் செய்கிறேன் தாயே. நடந்தவைகளுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என்னை பெற்ற தாய் செய்த சூழ்ச்சி எனக்கு தெரியாது. இந்த சூழ்ச்சிக்கு நான் உடன்பட மாட்டேன். அரச பதவியை ஏற்க மாட்டேன். அண்ணன் ராமரை மீண்டும் அழைத்து வந்து அவரையே அரசனாக்குவேன். ஒரு பாவமும் அறியாத என்னை துன்பப்படுத்தாதீர்கள் என்று சொல்லி மயக்கம் அடைந்தான்.

பரதனின் மயக்கத்தை தெளிவித்த கௌசலை பரதனின் உள்ளத்தை அறிந்தாள். பரதனைப்பற்றி தான் எண்ணியது தவறு என்பதையும் உணர்ந்தாள். பரதனைப்பார்த்து அன்புக்குரிய மகனே உன்னுடைய துக்கத்தை பார்த்து என் மனம் இரண்டு மடங்கு துக்கமடைகிறது. உன் எண்ணத்தை புரிந்து கொண்ட என்னுடைய துக்கம் எனக்கு சிறிதளவு குறைகிறது. நடந்தவைகளுக்கு நாம் ஒன்றும் செய்ய இயலாது. விதிக்கு வசப்பட்டவர்களாக இருக்கிறோம். புண்ணியவான்களுடைய பதவிகள் எல்லாம் உன்னை வந்து அடையட்டும் என்று ஆசிர்வதித்தாள்.

பரதன் வசிஷ்டரை சந்தித்து தன் தந்தைக்கான காரியங்களை விரைவில் செய்து முடிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டான். தசரதரின் இறுதிக்காரியத்தை மன்னனுக்குரிய முறைப்படி செய்து முடித்தார்கள். தந்தையை எண்ணி அழுது புலம்பிய பரதன் சத்ருக்கனனை வசிஷ்டர் மற்றும் பல அறிஞர்கள் சமாதானம் செய்ய முயற்சி செய்தார்கள்.

தொடரும்……..

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.