ராமரிடம் இருந்து சீதையை நான் தூக்கி வந்தது உங்கள் அனைவருக்கும் தெரியும். அதன் பிறகு ஒரு வானரம் இங்கு வந்து நாசம் செய்ததும் இலங்கையில் நடந்து கொண்டிருக்கும் அபசகுனங்களும் உங்கள் அனைவருக்கும் தெரியும். பலர் என்னிடம் சீதை இங்கு வந்ததினால் தான் இப்படி நடக்கறது. எனவே சீதையை ராமரிடம் அனுப்பி விடுமாறும் அவரிடம் மன்னிப்பு கேட்டுக் கேட்க வேண்டும் என்று மீண்டும் மீண்டும் என்னை வற்புறுத்துகின்றனர். ராமரிடம் சீதையை நான் திருப்பி அனுப்ப முடியாது. ராமரிடம் நான் மன்னிப்பும் கேட்க முடியாது. ராமர் வந்து தன்னை மீட்பான் என்று சீதை நம்பிக் கொண்டு இருக்கிறாள். ராமரால் கடல் தாண்டி இங்கு வருவது இயலாத காரியம். மீறி வந்தாலும் அதைப்பற்றி எனக்கு கவலையும் இல்லை பயமும் இல்லை. நம்மை தாக்கலாம் என்று ராமரும் லட்சுமணனும் வானரங்களுடன் கடற்கரையில் இருந்து கடலை எப்படி தாண்டலாம் என்ற யோசனை செய்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களை அங்கேயே அழிக்கும் வழிகளை நீங்கள் சொல்லுங்கள் இத்தனை நாட்கள் தம்பி கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்தான் ஆகவே இது பற்றி பேசவில்லை. இப்போது தம்பி கும்பகர்ணன் சபைக்கு வந்து விட்டான் எனவே இதுபற்றி நன்றாக யோசித்து உங்கள் ஆலோசனைகளை சொல்லுங்கள் என்று பேசி முடித்தான் ராவணன். கும்பகர்ணன் பேச ஆரம்பித்தான்.
ராமர் லட்சுமணனின் மீது உங்களுக்கு விரோதம் இருந்தால் நீங்கள் முதலில் அவர்களை எதிர்த்து யுத்தம் செய்து வெற்றி பெற்றிருக்க வேண்டும். அவர்களை அழித்திருந்தால் வெற்றி வீரரான உங்களுடன் சீதை தானகவே வந்திருப்பாள். அதை விட்டுவிட்டு யாரையும் ஆலோசனை கேட்காமல் நீங்களாகவே ஒரு பாவ காரியத்தை செய்துவிட்டு ராமரின் பகையை சம்பாரித்துக் கொண்டு விட்டீர்கள். இப்போது காலம் தாண்டிய பின்பு ஆலோசனை சொல்லுங்கள் என்று கேட்கிறீர்கள். நீதி சாஸ்திரம் அறிந்த அரசனுக்குரிய உத்தம காரியத்தை செய்யாமல் நீதி சாஸ்திரம் அறியாத மூடனைப் போல் செய்து விட்டீர்கள் என்று ராவணனின் மேல் எந்த பயமும் இல்லாமல் தைரியமாக சொல்லி அமர்ந்தான் கும்பகர்ணன். அனைவரின் முன்பும் தம்பி இப்படி பேசி விட்டானே என்று ராவணனின் முகம் வாடியது. ராவணனின் மேல் அளவு கடந்த அன்பு வைத்திருந்த கும்பகர்ணனால் ராவணனின் முகம் வாடியதை பொறுக்க முடியவில்லை. தன்னுடைய கடினமான சொல்லால் தான் அண்ணன் முகம் வாடி விட்டது என்பதை உணர்ந்த கும்பகர்ணன் பழையதை பேசி இனி பிரயோஜனம் இல்லை. இனி நடக்க வேண்டியதை பார்ப்போம். இனி அண்ணனுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டான்.
ராமரின் வல்லமையும் அவர் ஒரு சிறந்த வில்லாளி என்றும் அவர் பெற்ற வரங்களும் கும்பகர்ணனுக்கு நன்றாக தெரியும். ராவணனுக்கு எதிராக எந்த ஒரு காரியத்தையும் செய்யக் கூடாது என்ற முடிவில் இருந்த கும்பகர்ணன் மற்றவர்களை போல் ராவணனை பெருமைப்படுத்தி ராவணனுக்கு தைரியத்தை கொடுத்து பேசினான். நீங்கள் முன்னால் செய்ய வேண்டியதை பின்னாலும் பின்னால் செய்ய வேண்டியதை முன்னாலும் தவறாக செய்து கொண்டு இருக்கிறீர்கள். ஆனாலும் இனி நீங்கள் பயப்பட வேண்டாம். இந்த ராமரை நான் எனது வலிமையால் எதிர்த்து யுத்தம் செய்து வெற்றி பெறுவேன். ராமரது அம்புகள் என் மீது ஒன்றிரண்டாவது படும் அதைப் பற்றி எனக்கு கவலை இல்லை. எனக்கு ஒன்றும் ஆகாது. ராமரை அழித்து அவரது ரத்தத்தை குடித்துவிட்டு உங்களுக்கு செய்தி அனுப்புவேன். நீங்கள் என்ன முடிவு எடுக்கின்றீர்களோ அதற்கு நான் கட்டுப் படுகிறேன் என்று கும்பகர்ணன் பேசி முடித்தான். ராவணனுடைய பிரதான ஆலோசகன் பிரஹஸ்தன் ராவணனுடைய பலத்தை எடுத்துச் சொல்லி உங்களை எதிர்த்து இது வரை யாரும் வென்றது இல்லை. இனி வெற்றி பெறப் பொவதும் இல்லை என்று ராவணனை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினான். ராவணன் உற்சாகமடைந்தான். குபேரனை எதிர்த்து வெற்றி பெற்றவன் நான் என்னை எதிர்த்து யார் இங்கே வந்து வருவார்கள் என்று ஆர்ப்பரித்தான். ராவணனின் பேச்சில் சபையில் உள்ளவர்கள் ஆராவாரம் செய்தார்கள்.