ராமாயணம் 6. யுத்த காண்டம் பகுதி – 7

ராமரின் வலிமையை அறியாத உங்களிடம் நான் அவரின் பராக்கிரமத்தை எவ்வளவோ சொல்லியும் நீங்கள் கேட்காமல் இந்த சபையில் என்னை மிகவும் அவமானப்படுத்தி விட்டீர்கள். இனி நான் இங்கிருக்க விரும்பவில்லை. உங்கள் காதுக்கு இனிமையாக பேசுபவர்களின் பேச்சே உங்களுக்கு பிடித்திருக்கிறது. எனது பேச்சு உங்களுக்கு பிடிக்கவில்லை. ஏதேனும் வகையில் ராமரிடமிருந்து உங்களையும் உங்கள் நாட்டையும் காப்பாற்றிக் கொள்ளுங்கள். உங்களுக்கு துணை நின்று தீயவற்றை செய்வதை விட இங்கிருந்து சென்று தர்மத்தின் பக்கம் நிற்பதையே விரும்புகிறேன் நான் செல்கிறேன் என்ற விபீஷணன் ராமர் லட்சுமணன் இருக்குமிடம் நோக்கி ஆகாய மார்க்கமாக சென்றான். விபீஷணனுக்கு ஆதரவாக மேலும் நான்கு ராட்சசர்கள் சேர்ந்து கொண்டார்கள். கடலின் கடற்கரையில் இருந்த வானரங்கள் கடலுக்கு மேலிருந்து ஆகாய மார்க்கமாக பெரிய வடிவத்தில் ஐந்து ராட்சசர்கள் வருவதை பார்த்தார்கள். இதனை கண்ட வானரங்கள் சுக்ரீவனிடத்தில் விரைவாக சென்று ராட்சசர்கள் சிலர் ஆகாய மார்க்கமாக வருவதை தெரிவித்தார்கள். இதனைக் கண்ட சுக்ரீவன் கடற்கரைக்கு வந்து வருபவர்கள் ராட்சசர்கள் நம்மைக் கொல்ல ராவணன் அனுப்பியிருப்பான் நம்மை அழிக்க வருகிறார்கள் என்றார். இதனை கேட்ட வானரங்கள் தங்களது ஆயுதங்களுடன் தயாரானார்கள். உத்தரவு கொடுங்கள் இப்போதே அவர்களை அழித்து விடுகிறோம் என்று ஆர்ப்பரித்தனர். வானரங்களின் ஆர்ப்பரிப்பை கேட்ட விபீஷணன் சிறிதும் பயமின்றி அவர்கள் முன்நிலையில் வந்து நின்று பேச ஆரம்பித்தான்.

ராமரிடமிருந்து சீதையை தூக்கிச் சென்ற ராவணனது தம்பி விபீஷணன் நான். ராவணன் செய்த செயல்கள் அனைத்தும் தர்மத்திற்கு எதிரானது. எனவே சீதையை ராமரிடம் கொடுத்து விட்டு அவரிடம் மன்னிப்பு கேட்டு அவரை சரணடையுங்கள் என்று தர்மத்தை எவ்வளவோ எடுத்து சொல்லி பலமுறை மன்றாடினேன். நான் சொல்வதை கேட்காமல் சபை நடுவில் என்னை மிகவும் அவமானப் படுத்திவிட்டான் ராவணன். எனவே எனது நாடு மக்கள் அனைத்தையும் விட்டுவிட்டு ராமரை சரண்டைய இங்கு வந்து நிற்கிறேன். இந்த செய்தியை ராமரிடம் தெரிவித்து அவரை சந்திக்க அனுமதி பெற்றுக் கொடுங்கள் என்று சொல்லி முடித்தான். அனைத்தையும் கேட்ட சுக்ரீவன் தனது வானரங்களிடம் வந்திருப்பவர்களை தாக்காதிருங்கள் ராமரிடம் உத்தரவு பெற்று விட்டு வருகிறேன் என்று ராமர் இருக்குமிடம் சென்றான்.

ராமரிடம் சென்ற சுக்ரீவன் ராவணனின் தம்பி என்று சொல்லி ஒரு ராட்சசனும் அவனுக்கு துணையாக நான்கு ராட்சசர்களும் தங்களை சரணடைய வந்திருக்கிறார்கள். ராட்சசர்கள் மிகவும் ஏமாற்றுக்காரர்கள். அவர்களை நம்பக்கூடாது. அவர்களை ஏதோ சதி வேலை செய்யும் நோக்கில் ராவணன் தான் நம்மிடம் அனுப்பியிருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். நம்மிடம் புகுந்து நமக்குள் இருக்கும் ஒற்றுமையை குலைப்பதற்காக ஏதேனும் சதி வேலை செய்யலாம். அல்லது நாம் அசந்திருக்கும் சமயம் நம்மை கொல்ல முயற்சிக்கலாம். இவன் சரணடைய வந்திருக்கிறேன் என்று சொன்னாலும் இவன் நமது எதிரி ராவணனின் தம்பி என்பதை நாம் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும். அவனையும் அவனுடன் வந்திருப்பவர்களையும் அழித்து விடலாம் என்பது என்னுடைய கருத்து. இதைப் பற்றி நீங்கள் நன்கு ஆராய்ந்து பார்த்து முடிவு செய்யுங்கள். எங்களுக்கு உத்தரவு கொடுங்கள் இப்போதே வந்திருப்பவர்களை அழித்து விடுகிறேன் என்றான் சுக்ரீவன். அனைத்தையும் கேட்ட ராமர் நீதி சாஸ்திரம் அறிந்த சுக்ரீவன் வந்திருப்பவர்களை பற்றி தனது கருத்தை சொல்லி விட்டார். நெருக்கடியான சமயத்தில் சுற்றத்தார்கள் நண்பர்களது யோசனை மிகவும் முக்கியம் எனவே உங்களது கருத்துக்களையும் சொல்லுங்கள் என்று தன்னை சுற்றியிருப்பவர்களின் கருத்தை ராமர் கேட்டார். ஒவ்வொருவராக தங்களின் கருத்தை சொல்ல ஆரம்பித்தார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.