ராமர் சீதை லட்சுமணன் மூவரும் தண்டகாருண்ய காட்டில் பரத்வாஜர் ஆசிரமத்தில் தங்கியிருக்கிறார்கள். அங்கிருந்து தங்களுக்கு நல்ல செய்தி ஒன்று சொல்லி அனுப்பியிருக்கிறார் என்று அனுமன் பரதனிடம் தெரிவித்தார். ராமரிடம் இருந்து நல்ல செய்தி என்ற வார்த்தையை கேட்ட பரதனுக்கு மகிழ்ச்சியில் பேச வார்த்தைகள் வரவில்லை. அனுமன் தொடர்ந்து பேசினார். ராமர் தங்களின் நலனை விசாரித்து விட்டு நாளை இங்கே வருவதாக தகவல் சொல்லி அனுப்பினார். ராமருடன் சீதையும் லட்சுமணனும் அவர்களுடன் அவரது நண்பர்கள் பலரும் வருகிறார்கள் என்றார். இதனைக் கேட்ட பரதன் அனுமனைப் பார்த்து பேரின்பத்தை கொடுக்கும் செய்தியை தாங்கள் கொண்டு வந்திருக்கிறீர்கள். என்னுடைய அரசராகிய ராமர் என்னை விட்டு பிரிந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இத்தனை ஆண்டுகாலம் ராமர் என்ன செய்து கொண்டிருந்தார் என்றும் தாங்கள் யார் தங்களிடம் ராமருக்கு எப்படி நட்பு ஏற்பட்டது என்றும் தயவு கூர்ந்து சொல்லுங்கள். இத்தனை ஆண்டுகள் ராமரைப் பற்றி மட்டுமே நினைத்துக் கொண்டிருந்த நான் மேலும் அவரைப் பற்றி கேட்டு தெரிந்து மகிழ்ச்சி அடைந்து கொள்கிறேன் என்றான். சீதையை ராவணன் தூக்கிச் சென்றது முதல் ராவணனை அழித்து புஷ்பக விமானத்தில் பரத்வாஜர் ஆசிரமத்தில் ராமர் வந்தது வரை நடந்தவைகள் அனைத்தையும் அனுமன் பரதன் சொல்லி முடித்தார்.
ராமரின் பராக்கிரமத்தை கேட்டு பேரானந்தமடைந்த பரதன் சத்ருக்கனை அழைத்து ராமர் நாளை வருகிறார் இந்த செய்தியை மக்களுக்கு சொல்லி அயோத்தியின் எல்லையிலிருந்து ராமர் வரும் வீதிகள் தோறும் அலங்காரங்கள் செய்து இசை நடனம் என்று அனைத்திற்கும் ஏற்பாடுகள் செய்துவிடு என்று கட்டளையிட்டான். அடுத்த நாள் காலையில் கைகேயி சுமத்ரை கௌசலை மூவருடனும் பரதன் சத்ருக்கனன் மற்றும் மந்திரிகள் படைகள் என்று ஆயிரக்கணக்கான யானைகளுடன் அயோத்தியின் எல்லைக்கு ராமரை வரவேற்க புறப்பட்டார்கள்.
ராமர் கங்கை கரையின் அருகை குகன் இருக்கும் இடத்தில் புஷ்பக விமானத்தில் வந்து இறங்கினார். வேடவர்களின் தலைவன் குகன் ராமரை வரவேற்று உபசரித்தான். குகனின் மரியாதையை ஏற்றுக்கொண்ட ராமர் சீதையுடன் கைகேயி சுமத்ரை கௌசலை மூவரின் பாதங்களில் வீழ்ந்து வணங்கினார். ராமருடன் இத்தனை ஆண்டு காலம் இருந்த லட்சுமணனை அனைவரும் பாராட்டினார்கள். ராமர் சீதையின் கால்களில் வீழ்ந்து வணங்கிய பரதனும் சத்ருக்கனனும் அவருக்கு தகுந்த மரியாதை செய்தார்கள். பரதன் ராமரிடம் தங்களின் பாதுகைகளை வைத்து இத்தனை ஆண்டு காலம் தங்களின் உத்தரவுப்படி ஆட்சி செய்து வந்திருக்கிறேன் இனி நீங்கள் அரசனாக பதவி ஏற்றுக் கொள்ளுங்கள் என்றான். ராமர் பரதனிடமும் சத்ருக்கனனிடமும் தன்னுடன் வந்த அனைவரையும் அறிமுகம் செய்து வைத்தார். அனைவரும் அரண்மனை திரும்பினார்கள். ராமரின் வரவினால் அயோத்தி மகிழ்ச்சியில் திளைத்தது. அரண்மனைக்கு சென்றதும் ராமருக்கு பட்டாபிஷேகம் செய்து வைக்க ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்தார்கள். வசிஷ்டர் ராமருக்கு பட்டாபிஷேகம் செய்து நவரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட சிம்மாசனத்தில் ராமரையும் சீதையையும் அமர வைத்து வாழ்த்தினார். ராமர் தன்னுடன் வந்த வானரங்களுக்கும் விபீஷணனுக்கும் தகுந்த மரியாதைகள் செய்து பரிசுகள் அளித்து கௌரவப்படுத்தினார். சுக்ரீவனும் விபீஷணனும் தங்களது இருப்பிடத்திற்கு சென்றார்கள். ராமர் அயோத்தியின் அரசராக நாட்டை சிறப்பாக ஆட்சி செய்தார்.
யுத்த கண்டம் முற்றியது. அடுத்து உத்திர காண்டம்