பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #40
ஒரு குலம் அழியும் போது அந்த குலத்தின் பழமையான நெறிமுறைகளும் அழிந்து விடுகின்றது. அந்த குலத்தின் நெறிகள் அழியும் போது அந்த குலத்தை அதர்மம் சூழ்ந்து கொள்கிறது.
இந்த சுலோகத்தில் முதல் கேள்வி: குலத்தின் நெறிமுறைகள் என்றால் என்ன?
ஒரு குலத்தில் தலை முறை தலைமுறையாக தர்மத்தின்படி பல நல்ல ஒழுக்க முறைகளை பாரம்பரியமாக கட்டுப் பாடுகளுடன் கடைபிடித்து வருவார்கள். இந்தக் கட்டுப்பாடுகளினால் அந்த குலம் நல்ல பெயருடன் தலைமுறை தலைமுறையாக பலகாலம் தொடந்து வாழ்ந்து வரும்.
இந்த சுலோகத்தில் 2 வது கேள்வி: குலத்தின் நெறிகள் அழியும் போது அதர்மம் எப்படி அந்த குலத்தை சூழ்ந்து கொள்கிறது?
ஒரு குலம் அதர்மத்தில் இருந்து தப்புவதற்கான காரணங்கள் அந்த குலத்தில் உள்ளவர்களுக்கு தலைமுறை தலைமுறையாக கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கும் கடவுள் மீது நம்பிக்கை வைத்து வழிபடுவது மற்றும் ஆகமங்களையும் நியமங்களையும் சரியாக கடைபிடித்தல் ஆகியவை ஆகும். இவற்றை அறிந்த பெரியோர்கள் யுத்தத்தில் அழியும் போது அவர்களுக்குப் பின் வரும் வாரிசுகளின் சிறுவயது முதலே குலத்தின் நெறிமுறைகளையும் தர்மத்தையும் கற்றுக் கொடுக்க யாரும் இல்லாத சூழ்நிலை ஏற்படுகிறது. வாரிசுகள் தர்மத்துக்காக கடைபிடிக்க வேண்டிய நெறி முறைகள் தெரியாததால் அவரவர்கள் விருப்பப்படி நடந்து கொள்வார்கள். இதில் யாரேனும் தவறு செய்தால் அதன் பலனாக அவர்களை அதர்மம் சூழ்ந்து கொள்வது மட்டுமின்றி அவர்களது மரபாகத் தொடர்ந்து வரும் தலைமுறையையும் அதர்மம் சூழ்ந்து கொள்ளும்.