பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #2
சஞ்ஜயன் திருதராஷ்டிரனிடம் பதில் கூறுகிறார். பாண்டவர்களின் அணிவகுத்து நின்ற படைகளை பார்த்ததும் துரியோதன ராஜா தனது குருவாகிய துரோணாச்சாரியாரிடம் சென்று பேச ஆரம்பிக்கின்றான்.
இந்த சுலோகத்தில் முதல் கேள்வி: நாட்டின் அரசனாக திருதராஷ்டிரர் இருக்கும் போது சஞ்ஜயன் ஏன் துரியோதனனை ராஜா என்று அழைக்கிறார்.
பதில்: நாட்டின் அரசனாக திருதராஷ்டிரர் இருந்தாலும் அவரின் ஆளுகைக்குட்பட்ட ஒரு நாட்டிற்கு துரியோதனனும் ராஜாவாகவே உள்ளான். தன்னுடைய மகன் ராஜா என்ற அடைமொழியுடன் மரியாதையாக குறிப்பிட்டு அழைக்கப்படுவதை எண்ணி திருதராஷ்டிரர் மகிழ்ச்சி அடைவார் என்று சஞ்ஜயன் அவ்வாறு அழைக்கிறார்.
இந்த சுலோகத்தின் 2 வது கேள்வி: பாண்டவர்களின் படைகளை கண்ட துரியோதனன் ஏன் துரோணரிடம் சென்றான்.
பதில்: பாண்டவர்களின் படைகள் கௌரவர்களின் படைகளை விட சிறிது குறைவாக இருந்தாலும் அவர்களின் அணிவகுப்பு விசித்திரமான முறையில் இருந்தது. இதனைப் பார்த்த துரியோதனன் வியப்படைந்தான். தனூர்வேதத்தில் சிறந்த அறிவு படைத்த துரோணரிடம் இதனைப் பற்றி கூறினால் அவர் படைத்தளபதியான பீஷ்மரிடம் இதனைப் பற்றி சொல்லி கௌரவர்களின் படைகளை இன்னும் சிறப்பாக அணிவகுக்க செய்வார் என்ற எண்ணத்தில் துரோணரிடம் துரியோதனன் சென்றான்.
இந்த சுலோகத்தின் 3 வது கேள்வி: ராஜாவான துரியோதனன் துரோணரை தான் இருக்குமிடம் வரவழைத்து செய்தியை சொல்லியிருக்கலாம். ஆனால் அவர் இருக்குமிடத்திற்கு ஏன் துரியோதனன் சென்றான்.
பதில்: கௌரவப்படைகளுக்கு பிரதான படைத்தலைவராக பீஷ்மர் இருந்தாலும் ஒவ்வொரு படைப்பிரிவுக்கும் ஒரு உப தலைவர் இருப்பார். துரோணரும் ஒரு படைப்பிரிவுக்கு தலைவராகவே இருக்கிறார். படைகள் அணிவகுத்து நின்ற பிறகு அந்தந்த படைகளின் தலைவருக்கு என்று ஒரு இடம் ஒதுக்கப்பட்டிருக்கும். அந்த இடத்தில் இருந்து அவரை அழைத்தாலும் அகற்றினாலும் அந்த படையினருக்கு குழப்பத்தை ஏற்படுத்தும். மேலும் இந்த யுத்தத்தில் வெற்றி பெற வேண்டுமென்றால் அதற்கு துரோணரின் உதவி அவசியம் தேவை என்பது துரியோதனனுக்கு தெரியும் அவரின் அன்பைப் பெறுவதற்கும் பிறர் முன்பாக அவரை பெருமைப் படுத்துவதற்காகவும் அவர் இருக்குமிடம் துரியோதனன் சென்றான்.