பரதனுக்கு என்ன நடந்தது என்று இப்போது புரிந்துவிட்டது. கோபத்தில் கைகேயியை பார்த்து கர்ஜிக்க ஆரம்பித்தான். பொல்லாத பாதகியே உனக்குரிய வரங்களால் என்ன காரியத்தை செய்துள்ளாய் தெரியுமா? இக்ஷ்வாகு வம்சத்தில் மூத்த மகன் அரசனாக முடிசூட வேண்டும் என்பது நம்முடைய பரம்பரை பாரம்பரியமாகும். புனிதம் வாய்ந்த அந்த பாரம்பரியத்திற்கு கேட்டை வரவழைத்திருக்கிறாய். பதவி மோகம் உன்னுடைய அறிவை பாழ்படுத்திவிட்டது. உன்னை அன்புக்குரிய மனைவியாக்கி எனது தந்தை பெரும் தவறு செய்துவிட்டார். அவர் உன் மேல் வைத்த அன்பிற்கு கைமாறாக அவரை கொன்றுவிட்டாய். ராமன் தன் தாயை விட உன்னையே அதிகம் நேசித்தான். உனக்கு பல பணிவிடைகளை செய்திருக்கின்றான். ராமரும் உனக்கு செய்த பணிவிடைகளுக்கு கைமாறாக அவனை காட்டிற்கு அனுப்பிவிட்டாய்.
உன்னை தங்கை போல் பாவித்த கௌசலைக்கு மாபாதக கொடுமையை செய்திருக்கின்றாய். ஒரு மகனைப்பெற்ற அவளை அனாதையாக்கிவிட்டு நீ உன் மகனுடன் சுகவாசியாக வாழலாம் என்று எண்ணுகிறாயா? உன் எண்ணம் கனவிலும் நிறைவேறாது. நீ செய்த பாவச்செயலுக்கு தண்டனையாக உன்னை கொன்று தள்ளுவதே முறை. ஆனால் உன்னை கொல்வதை எனது அண்ணன் ராமர் ஆமோதிக்கமாட்டான். அதனை முன்னிட்டு உனக்கு உயிர் பிச்சை தருகிறேன். நீ நாட்டுக்கும் வீட்டுக்கும் உதவாதவள். கெட்ட வழியில் சென்று தருமத்தை கைவிட்டவள். என் தந்தை சென்ற சொர்க்கம் உனக்கு கிடைக்காது. உனக்கு நரகமே கிடைக்கும். நீ பெரும் துக்கத்தை அடைந்து மரணத்தை பெருவாய் இது நிச்சயம்.
இந்த உலகத்தை ஆள்வதற்கு மகா பராக்கிரமசாலியான என் தந்தை ராமர் மற்றும் லட்சுமணனையே தனது பக்க பலமாக கருதினார். அவர்களை காட்டிற்கு அனுப்பிவிட்டு என்னை அரசனாக சொல்கிறாயே. இவ்வளவு பெரிய ராஜ்யத்தை ஆள என்னால் முடியுமா. உன் ஆசை ஒரு நாளும் நிறைவேறாது. அதை நிறைவேற்றவும் மாட்டேன். எனக்கு ராஜ்யத்தை பெற்றுக்கொடுத்து விட்டதாக இன்பத்தில் மிதக்கிறாய். உன் முன்னிலையில் சபதம் செய்கிறேன் கேட்டுக்கொள். ராமன் இல்லாத அயோத்தியில் பரதன் இருக்க மாட்டான். ராமன் அரச உடையை களைந்து தபஸ்விகளுக்கான உடையை அணிந்து கொண்டிருப்பதை போல் நானும் அதே உடையை அணிந்து கொள்வேன். தந்தைக்கான கடமையை செய்து முடித்துவிட்டு ராமரை தேடிக்கொண்டு காட்டிற்கு செல்வேன். ராமரை அழைத்து வந்து அரசனாக்கி இந்த ராஜ்யத்தை அவரிடம் ஒப்படைத்து அவருக்கு அடிமையாக இருந்து நீ எனக்கு தேடித்தந்த பழியை போக்கிக்கொள்வேன். ராட்சசியே உன்னுடைய மகன் பரதன் என்ற எண்ணத்தை இப்போதே மறந்துவிடு. இவ்வளவு பெரிய பாவச்செயல் புரிந்த உன்னை என் தாயாக நான் ஏற்க முடியாது. தாய் என்ற ஸ்தனத்தில் இருந்து நான் உன்னை துறந்துவிட்டேன். கௌசலையும் சுமத்ரையுமே என் தாய் அவர்களை பார்க்க நான் செல்கிறேன். என்னை இனி நீ பார்க்கமுடியாது என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான் பரதன்.
தொடரும்…….