பரதன் தன்னுடன் வந்த கூட்டத்துடன் முதலில் கங்கை கரையை அடைந்தான். சுமந்திரன் பரதனிடம் இங்கு தான் ராமர் ரதத்தில் இருந்து இறங்கி என்னை அயோத்தி திரும்பி செல்லுமாறு உத்தரவிட்டார். கரைக்கு அப்பால் இருக்கும் பிரதேசத்தின் தலைவராக குகன் என்பவர் இருக்கின்றார். அவரிடம் கேட்டால் ராமர் செல்லும் பாதையை காட்டுவார் என்று கூறினான்.
கங்கை கரைக்கு எதிர்புறம் இருந்த குகன் அக்கரையில் பெரும்படை தங்கியிருப்பதை பார்த்தான். தன் அருகில் இருப்பவர்களிடம் பெரும் படை ஒன்று அக்கரையில் இருக்கிறது அவர்கள் இக்கரைக்கு வர முயற்சி செய்வது போல் தெரிகிறது. எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் நம்முடன் இருப்பவர்களை எச்சரிக்கை செய்யுங்கள் என்று உத்தரவிட்டான். குகனின் கண்களுக்கு அந்த கூட்டத்தின் கொடி தென்பட்டது. அக்கொடி அயோத்தி நாட்டின் கொடி என்பதை அறிந்த குகன் ராமருக்கு சொந்தமான ராஜ்யத்தை அடைந்தது மட்டுமல்லாமல் ராமரை கொல்லவும் பெரும் படையுடன் வந்திருக்கின்றான் பரதன் என்று அவன் மீது சந்தேகம் அடைந்தான் குகன். தன்னுடன் இருந்தவர்களிடம் நம்முடைய அனைத்து வீரர்களையும் ஆயுதங்களுடன் போருக்கு தாயார் நிலையில் இருக்க சொல்லுங்கள். நல்ல எண்ணத்துடன் இவர்கள் ராமரை தேடி வந்தால் கங்கை கரையை கடக்க இவர்களுக்கு உதவி செய்வோம். ராமரை கொல்லும் எண்ணத்துடன் வந்திருந்தால் இவர்கள் கங்கையை கடக்க விடக்கூடாது. இங்கேயே தடுத்துவிட வேண்டும் என்று தனது சகாக்களுக்கு உத்தரவிட்டான் குகன். பரதனின் மன நிலையை அறிந்து கொள்ள சிறிய படகில் குகன் பரிசுப்பொருட்களுடன் பரதனை சந்திக்க சென்றான்.
குகன் படகில் வருவதை பார்த்த சுமந்திரன் பரதனிடம் வருபவர் இப்பிரதேசத்தின் தலைவர். இவரது பெயர் குகன். ராமரிடம் நிறைய அன்பு வைத்திருப்பவர். நம்மை வரவேற்க வருகின்றார். இவருடைய குலத்தவர்களுக்கு அக்காட்டின் அனைத்து இடங்களும் மிகவும் நன்றாக தெரியும். ராமர் சென்ற இடத்தை இவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். இவரின் ஆலோசனைப்படி சென்றால் விரைவாக நாம் ராமர் இருக்கும் இடம் சென்று அடையலாம் என்றான். நதியை தாண்டிய குகன் பரதனுக்கு வணக்கம் செலுத்தினான். எனது பொருள்கள் எல்லாம் உங்களுடையதாக பாவித்து என்ன வேண்டும் என்று கேளுங்கள். தங்களது தேவையை என்னால் இயன்ற வரை நிறைவேற்றுகின்றேன். ராமரின் தம்பியான தங்களுக்கு பணி செய்வது எனது பாக்கியம் என்றான் குகன். அதற்கு பரதன் ராமரை தேடி வந்திருக்கின்றோம். அவர் இருக்கும் இடத்திற்கு நாங்கள் அனைவரும் செல்ல வேண்டும். எங்களுக்கு கரையை கடக்க உதவி செய்து ராமர் தற்போது இருக்கும் இருப்பிடம் எங்கே இருக்கிறது. எப்படி செல்ல வேண்டும் என்று சொன்னால் பெரிய உதவியாக இருக்கும் என்றான் குகனிடம்.
கங்கை கரையை கடக்க தங்களுக்கு உதவி செய்து ராமர் சென்ற பாதையை காட்டுகின்றோம். ஆனால் எனக்கு ஒரு சிறு சந்தேகம் இருக்கின்றது. இவ்வளவு பெரிய படையுடன் ராமரை தேடி வந்திருக்கின்றீர்கள். எதற்காக இவ்வுளவு பெரிய படை என்ற சந்தேகத்தை தாங்கள் தீர்த்து வைத்தால் காலதாமதமின்றி இப்போதே தங்களுக்கு தேவையானதே செய்து கொடுக்கின்றேன் என்றான் குகன்.