குகன் கேள்வி கேட்ட பாவனையில் இருந்து அவன் ராமரின் மேல் வைத்திருக்கும் அன்பை உணர்ந்தான் பரதன். கைகேயி செய்த சூழ்ச்சியால் ராமருக்கு தான் விரோதி போல் அனைவராலும் பார்க்கப்படுவதை தெரிந்து கொண்டான். பரதனுடைய உடம்பெல்லாம் வியர்த்தது. தந்தை இறந்த துக்கத்துடனும் ராமர் பிரிந்த துக்கத்துடனும் இருந்த பரதன் குகனின் வார்த்தையால் மேலும் வேதனைப்பட்டு உடலெல்லாம் எரிவதை போன்று உணர்ந்தான். குகனே நீங்கள் சந்தேகப்படவேண்டாம். தந்தையை இழந்த எனக்கு மூத்தவரான ராமர் தந்தையாவார். அவரை எப்படியாவது அயோத்திக்கு அழைத்துச் சென்றுவிட வேண்டும் என்ற எண்ணத்தில் வந்திருக்கின்றேன். தெய்வத்தின் மீது ஆணையாக சொல்கிறேன். என் உள்ளத்தில் வேறு எந்த எண்ணமும் இல்லை என்றான். ராமர் மேலிருந்த அன்பும் ராமரை பிரிந்த துக்கமும் பரதனின் முகத்திலும் பேச்சிலும் கண்ட குகன் உள்ளம் பூரித்தான். தானாக வந்த ராஜ்யத்தை வேண்டாம் என்று துறந்த தங்களை போன்ற மகானை பார்ப்பதில் பெருமை கொள்கிறேன். உங்களை சிரமம் இல்லாமல் அழைத்துச் செல்கிறேன் என்று கங்கை கரையை பரதனின் பெரும் படைகள் கடப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தான் குகன்.
கங்கை கரையை பெரும் படைகள் கடந்தது பெரிய படகுத் திருவிழாவைப் போல் இருந்தது. கரையை கடக்கும் போது ராமர் எங்கு சாப்பிட்டார். எங்கு தங்கினார் என்ன சொன்னார் என்று குகனிடம் கேட்டுக்கொண்டே பரதன் பயணித்தான். குகனும் ராமர் அமர்ந்த இடம் உணவருந்திய இடம். இரவு களைப்பாறிய இடம் என்று அனைத்தையும் காட்டிக்கொண்டே சென்றான். லட்சுமணனை பற்றி கேட்டான் பரதன். இரவு முழுவதும் தூங்காமல் ராமருக்கும் சீதைக்கும் காவலிருந்து லட்சுமணனும் தானும் பேசிக்கொண்டிருந்ததை விவரித்தான் குகன்.
காட்டின் நடுவே ரம்யமான சோலையும் மத்தியில் பரத்வாஜ முனிவரின் ஆசிரமம் இருந்ததை கண்டு அங்கு வந்து சேர்ந்தார்கள். பரத்வாஜ முனிவரின் ஆசிரமம் என்பதை உறுதி செய்து கொண்டு தன்னுடன் வந்தவர்கள் அனைவரையும் வெளியே நிற்க வைத்துவிட்டு பரதன் வசிஷ்டர் மற்றும் சில முக்கிய பிரமுகர்கள் மட்டும் உள்ளே சென்றனர். பரத்வாஜ முனிவரை பரதன் வணங்கினான். வந்தவர்கள் யார் என்பதை அறிந்த பரத்வாஜ முனிவர் வசிஷ்டருக்கும் பரதனுக்கும் செய்ய வேண்டிய வரவேற்பு உபசாரத்தை முறைப்படி செய்து முடித்து அவர்கள் ராமரை தேடிக்கொண்டு வந்திருக்கின்றார்கள் என்பதை அறிந்து கொண்டார்.
பரத்வாஜ முனிவர் பரதனிடம் உன் பொறுப்பு அயோத்தியில் இருக்கின்றது அதை விட்டுவிட்டு நீ ஏன் இங்கு வந்திருக்கின்றாய். உனது தாயின் வரத்தின் படி தசரதர் ராமரை காட்டிற்கு அனுப்பிவிட்டார். அவருடன் சீதையும் லட்சுமணனும் இப்போது காட்டில் வசித்து வருகின்றார்கள். ராமரால் உன்னுடைய ராஜ்யத்திற்கு மேலும் ஏதாவது இடையூறு இருக்கின்றதா அதனை தீர்த்துக் கொள்ள அவரை தேடிக்கொண்டு வந்திருக்கின்றாயா என்று கேட்டார். இதனைக் கேட்ட பரதன் தாங்களும் என்னை சந்தேகப்பட்டு விட்டீர்களா? என்னைப் பெற்றவள் நான் இல்லாத போது என் சம்மதம் இல்லாமல் இக்காரியத்தை செய்துவிட்டாள். எப்படியாவது ராமரை அயோத்திக்கு அழைத்துச் சென்று அவரை அரசராக்கி என் ஆயுளுக்கும் அவருக்கு அடிமையாக இருந்து என் மீது சுமத்தப்பட்ட பழியை போக்கிக் கொள்ளவே தேடிக் கொண்டு வந்திருக்கின்றேன் என் மீது குற்றம் சொல்லாதீர்கள் என்று கதறி அழுதான் பரதன்.