பரத்வாஜ முனிவர் சிரித்தார். பரதா உன் உள்ளம் எனக்கு தெரியும். ரகு வம்சத்தில் பிறந்த உன்னை நான் அறிவேன். ராமரிடத்தில் நீ வைத்துள்ள பக்தி அன்பு இன்று போல் என்றும் உறுதியாக உன் உள்ளத்தில் இருந்து உன் புகழ் வளர்ந்து ஓங்குவதற்காகவும் உன்னுடைய குணத்தை உலகிற்கு காட்டி உன் பெருமையை உலகம் அறிந்து கொள்வதற்காகவே அவ்வாறு கேட்டேன் வருத்தப்பட வேண்டாம். ராமர் சித்திரக்கூட மலையில் இருக்கிறார். அவர் இருக்குமிடம் செல்வதற்கான வழியை சொல்கின்றேன். இன்று இரவு இங்கு தங்கியிருந்து உன் களைப்பை தீர்த்துக்கொள். நாளை காலை இங்கிருந்து கிளம்பி ராமரை சந்திக்க செல் என்றார். அதற்கு பரதன் முனிவரே தாங்கள் எனக்கு இப்போது அளித்த வரவேற்பு விருந்தில் நான் மிகவும் திருப்தி அடைந்துவிட்டேன். மேலும் தங்களுக்கு தொந்தரவு தர விரும்பவில்லை ஆகவே கிளம்புகின்றேன் என்றார்.
பரதா உன் பக்திக்கும் பதவிக்கும் தக்க உபசாரம் செய்ய கடமைபட்டிருக்கின்றேன். நீ இன்று இரவு இங்கேயே தங்க வேண்டும். நீ இன்று தங்கினால் நான் மகிழ்ச்சி அடைவேன். உன்னுடைய படை பரிவாரங்கள் ஏன் தூரத்திலேயே இருக்கின்றது. அவர்களை ஏன் உள்ளே அழைத்துவரவில்லை என்று கேட்டார். படைபரிவாரங்கள் ரிஷிகளின் ஆசிரமத்திற்கு அருகில் செல்லக்கூடாது என்ற நியமப்படி இங்கே அழைத்து வரவில்லை. மேலும் என்னுடன் வந்திருக்கும் கூட்டம் மிகப்பெரியது. இங்கு அழைத்து வந்தால் உங்களுக்கு தொந்தரவாக இருக்கும். எனவே தூரத்திலேயே நிறுத்தி வைத்துவிட்டேன் என்றான். அதற்கு பரத்வாஜ முனிவர் அனைவரையும் இங்கே அழைத்துவா என்று கேட்டுக்கொண்டார். பரதனும் அவ்வாறே உத்தரவிட்டான். அனைத்து படைகளும் ஆசிரமத்திற்குள் நுழைந்தது. பரத்வாஜ முனிவர் மந்திரங்களை சொல்லி மயன் வருணன் குபேரன் அக்னி முதலிய தேவர்களை வரவழைத்து பரதனின் படைகளுக்கு விருந்தளிக்க விரும்புகின்றேன். அவர்களுக்கு தேவையான அனைத்தையும் செய்வீர்களாக என்று கேட்டுக்கொண்டார்.
காட்டிற்குள் உடனடியாக அற்புதங்கள் நிகழ்ந்தது. எண்ணிலடங்காத செல்வத்தை வைத்திருக்கும் ஒரு மன்னன் மற்றோரு மன்னருக்கு விருந்தளிப்பது போல் காட்டிற்குள் ஒரு கணத்தில் பெரிய மாற்றங்கள் உண்டாகின. சந்தனம் புஷ்பம் வாசனை திரவியங்களுடன் அவரவர்களுக்கு தகுந்தார் போல் வீடுகள் அமைந்தது. அவரவர்களுக்கு பிடித்த உணவு வகைகள் வந்தது. தெய்விக ரீதியில் சங்கீதம் இசைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. படை பரிவாரங்கள் தங்களை மறந்து அனைத்தையும் அனுபவித்தார்கள். இதற்கு மேல் நாம் காட்டிற்குள் செல்ல வேண்டாம். அயோத்திக்கும் செல்ல வேண்டாம். இங்கேயே தங்கிவிடலாம் என்ற எண்ணினார்கள். தேவலோக நந்தவனத்தில் இருப்பதைப்பொன்று உணர்ந்தார்கள். எல்லைமீறி அனுபவித்தும் மெய்மறந்தும் தூங்கிவிட்டார்கள். காலை விடிந்ததும் இரவில் நடந்தது கனவு போல் அங்கிருந்த அனைத்தும் மறைந்து விட்டது.