ராமரிடம் பரதன் பேச ஆரம்பித்தான். ராஜ தர்மத்தைப் பற்றி பேச நான் தகுதியற்றவனாய் நிற்கின்றேன். சிம்மாசனத்தில் அமர்ந்து ராஜ்யம் செய்ய நீங்கள் இருக்கும் போது நான் எப்படி அரசனாவேன். தர்மத்தை மீறி சிம்மாசனத்தில் நான் அமர்ந்தால் அரசனுக்கு உரிய தர்மத்தை என்னால் அனுஷ்டிக்க முடியாது. எனக்கு தெரிந்த தர்மம் தங்களுக்கு அடிமையாக இருந்து தங்களுக்கு சேவை செய்வது மட்டுமே. நீங்கள் காட்டிற்கு வந்து விட்டபடியால் இத்தனை நாட்கள் அதற்கும் பிராப்தம் இல்லாமல் போய் விட்டது. நமது ராஜ குல தருமப்படி மூத்தவரே அரசனாக வேண்டும். பல தலைமுறைகளாக இருக்கும் நமது குலத்தின் பொதுவான தருமம் இது. நாட்டின் நலன் கருதி நீங்கள் அயோத்திக்கு வந்து அரச பதவியை ஏற்றுக்கொள்ள வேண்டும். இங்கேயே தங்களுக்கு பட்டாபிஷேகம் செய்ய அனைத்து ஏற்பாடுகளுடன் வந்திருக்கின்றோம். தயவு செய்து அரச பதவியை ஏற்றுக்கொண்டு நாட்டுக்கும் மக்களுக்கும் செய்ய வேண்டிய நன்மைகளை செய்யுங்கள் என்றான் பரதன்.
ராமர் பேச ஆரம்பித்தார். கேகய நாட்டில் இருக்கும் நீ அயோத்திக்கு வந்து பின்னர் தந்தையை பிரிந்து வெகு தூரத்தில் இருக்கும் யாராலும் எளிதில் உள்ளே வரமுடியாத அடர்ந்த காட்டிற்குள் வந்திருக்கறாய் என்றால் என்னை பிரிந்த தந்தையார் மனோ தைரியத்துடன் இருக்கின்றார் என்று எண்ணுகின்றேன். தாயார் மூவரின் நலம் மற்றும் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் நலமாக இருக்கின்றார்களா சொல் இதனை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கின்றேன் என்றார் ராமர்.
நான் கேகய நாட்டில் இருந்த போது அரண்மனையில் நடந்த சூழ்ச்சியால் நீங்கள் அயோத்தியில் இருந்து கிளம்பி காட்டிற்கு வந்துவிட்டீர்கள். பற்பல வேள்விகளை செய்தவரும் மாவீரராய் திகழ்ந்தவரும் சான்றோர்களால் பெரிதும் மதிக்கப்பட்ட நமது தந்தை தசரதர் உங்களை பிரிந்த துக்கத்தை தாங்க முடியாமல் நோய் வாய்ப்பட்டு உங்கள் பெயரை மீண்டும் மீண்டும் சொல்லி அழைத்துக்கொண்டே இருந்தார். சுமந்திரன் வரும் போது நீங்களும் அவனுடனேயே திரும்பி வந்து விடுவீர்கள் என்ற நம்பிக்கையில் இருந்தார். சுமந்திரன் மட்டும் தனியாக வந்ததை பார்த்ததும் தங்களின் பெயரை கூறிக்கொண்டே சொர்க்கலோகம் புகுந்து விட்டார் நமது தந்தையார் என்று தழுதழுத்த குரலில் கூறினான் பரதன். பரதன் கூறியதை கேட்டதும் கோடாலியால் வெட்டப்பட்ட மரம் போல ராமர் கீழே விழுந்தார்.
ராமரை தாங்கிபிடித்த பரதன் நம்முடைய தந்தையாருக்கு செய்ய வேண்டிய கிரியை கடமைகளை நானும் சத்ருக்கனனும் செய்து விட்டோம். தந்தைக்கு மிக பிரியமானவராக தாங்கள் இருந்தீர்கள். உங்கள் ஞாபகமாகவே தந்தை உடலை விட்டார். நீங்கள் கொடுக்கும் பிதுர்கடனே அவருக்கு சாந்தி தரும். அவருக்கு செய்ய வேண்டி கடமைகளை நீங்களும் லட்சுமணனும் செய்து முடிக்கவேண்டும். தாங்கள் வருந்தவேண்டாம். நீங்களே எங்களுக்கு வழிகாட்டியாக இருக்கவேண்டியவர் என்று ஆறுதலாக சொல்லி முடித்தான் பரதன்.