ராமருடைய உறுதியான பேச்சைக்கேட்ட பரதனும் மக்களும் பேச வார்த்தை இல்லாமல் தவித்தார்கள். பரதன் மீண்டும் ராமரிடம் சொன்னான். தாங்கள் ராஜ்யத்தை ஏற்க மறுத்தால் என்மேல் விழுந்த பழி தீராமல் போகும். நான் என்ன செய்தாலும் இப்பாவத்தை போக்க இயலாது என்று வருத்தத்துடன் சொன்னான். அதற்கு ராமர் உன்னை நீயே நிந்தித்துக்கொள்ள வேண்டாம். நடந்தவைகள் அனைத்தும் உன்னாலேயே நடந்தது என்று நீ எண்ண வேண்டாம். விதியே அனைத்திற்கும் காரணம். துக்கத்தை விடு. தேவ ராஜனுக்கு சமமான நமது தந்தையார் எனக்கு இட்ட ஆணையை நான் நிறைவேற்றாமல் போனால் அதற்கு பதிலாக இந்த உலகமே எனக்கு கிடைத்தாலும் நான் திருப்தி அடைய மாட்டேன். தந்தையின் ஆணையை என்னால் நிராகரிக்க முடியாது. தந்தையின் கட்டளையை நாம் இருவரும் ஏற்க வேண்டும். உன்னிடம் ஒப்படைத்த ராஜ்ஜியத்தை நீ ஏற்றுக்கொண்டு அரச பதவியை நீ தாங்கியே ஆக வேண்டும். அயோத்திக்கு சென்று அரசனுக்கு உரிய பணியை செய்து மக்களுக்கு நன்மையை செய். உனக்கு உதவியாக சத்ருக்கணன் இருக்கின்றான். எனக்கு உதவியாக லட்சுமணன் இருக்கின்றான். தசரதரின் நான்கு புத்திரர்களாகிய நாம் நால்வரும் தந்தையின் ஆணையை நிறைவேற்றுவோம் என்று உறுதியுடன் கூறினார் ராமர்.
ராமரின் உறுதியையும் ராமருக்கு துணையாக லட்சுமணனேயும் பரதனின் அன்பையும் பரதனுக்கு துணையாக சத்ருக்கணனையும் பார்த்த கௌசலை சுமத்ரை கைகேயி மூவரும் களங்கமற்ற உள்ளத்தை கொண்ட ராஜகுமாரர்களை பெற்றோமே என்று மகிழ்ந்தார்கள். பரதனுடன் வந்த மக்கள் கூட்டத்தில் இருந்த ஜாபலர் என்ற புரோகிதர் இடையில் ராமருக்கு வணக்கம் செலுத்தி பேசினார். தந்தையின் ஆணை என்று திரும்ப திரும்ப சொல்கின்றீர்கள். தசரதர் என்பது ஒரு உடல். அது அழிந்து பஞ்ச பூதங்களுடன் கலந்து விட்டது. இல்லாத ஒரு உருவத்திற்கும் உங்களுக்கும் சம்பந்தம் இருப்பது போலவே பேசுகின்றீர்கள். இது அறியாமை. கண் எதிரே இருக்கும் சுகங்களை அனுபவிக்காமல் விட்டு விட்டு மூடர்கள் பேசும் பேச்சு போல் இருக்கினது தாங்கள் பேசுவது. துயரத்தில் மூழ்கி கிடக்கும் பெண் ஒருத்தி கூந்தலை வாரி முடிக்காமல் உள்ளது போல் அயோத்தி இப்போது துக்கத்தில் கிடந்து உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. பட்டாபிஷேகம் செய்து கொண்டு சுகங்களை அனுபவித்துக் கொண்டு மகிழ்ச்சியாய் இருந்து அனைவருக்கும் மகிழ்ச்சியை கொடுங்கள் அதுவே இப்போதைய தர்மம். பரதன் சொல்வதை கேளுங்கள் என்றார்.
ராமருக்கு அவர் இவ்வாறு பேசியது அதிருப்தியை உண்டாக்கியது. சத்தியத்தை நீங்கள் ஒரு பொருட்டாக மதிக்கவில்லை என்று எண்ணுகின்றேன். நீங்கள் நாத்திகம் பேசுவது போல் உள்ளது. இது சரியாக இல்லை. சத்தியத்தை விட உயர்ந்த பொருள் உலகத்தில் இல்லவே இல்லை என்றார் ராமர். வசிஷ்டர் ராமரை சமாதானம் செய்தார். உன்னை எப்படியாவது அயோத்திக்கு அழைத்து சென்றுவிட வேண்டும் என்றும் பரதனுடைய துக்கத்தை போக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே அவர் அவ்வாறு பேசினார். அவர் மீது கோபிக்க வேண்டாம் என்றார் வசிஷ்டர்.