தசரதர் கொடுத்த உறுதிமொழியில் உற்சாகமடைந்த கைகேயி தனது வேண்டுதலை கேட்டாள். அரசே பஞ்ச பூதங்கள் சாட்சியாக கேட்கிறேன். சத்தியம் செய்திருக்கின்றீர்கள். எனக்கு கொடுத்த சத்தியத்தை காப்பாற்றுங்கள். ராமருக்கு பட்டாபிஷேகம் ஏற்பாடு செய்த அதே நேரத்தில் பரதனுக்கு பட்டாபிஷேகம் செய்து அரசனாக்குங்கள். ராமர் தவம் செய்யும் பொருட்டு பதினான்கு வருடங்கள் காட்டிற்கு இன்றே அனுப்புங்கள் என்றாள்.
கைகேயியின் வார்த்தையை கேட்ட தசரதன் தன் மேல் இடி இடித்ததை போல் உணர்ந்தார். தன் வலிமை அனைத்தும் அழிந்தவராக சோர்வுற்று கீழே விழுந்தார். புலி ஒன்று மானை பார்த்து நடுங்குவது போல் கைகேயியை பார்த்து தசரதர் நடுங்கினார். மன்னர்கள் அனைவரும் தசரதரின் காலில் விழுந்து வணங்குவார்கள் அத்தகைய சிறப்பு மிக்க தசரதர் கைகேயியின் காலில் விழுந்தார். ராமர் உனக்கு என்ன தீங்கு செய்தான் தன் தாயை விட உன் மீது மிகவும் அன்பாக இருந்து பணிவிடைகள் செய்கின்றான். ராமர் தன்னை அறியாமல் தவறு செய்திருந்தால் அவனை மன்னித்துவிடு.
பரதன் அரசனாக விரும்ப மாட்டான். அவன் விரும்பி ஏற்றுக்கொண்டாலும் இந்த உலகம் அதனை சரி என்று ஒப்புக்கொள்ளாது. மக்கள் இதனை கேட்டால் பொறுமை இழந்து உன்னை பழிப்பார்கள். இவ்வுலகில் மக்களால் பேசப்படும் புகழை நீ அடைய மாட்டாய். இந்த நிகழ்சியால் கொடிய பழி உன்னை வந்தடையும். இந்த பழியைக் கொண்டு என்ன பயனை அடையப்போகிறாய்.
ராமன் மூத்தவன் என்ற முறையில் அவனுக்கு அரச பட்டம் கொடுப்பதாக சொன்னதால் ராமன் அரசனாக முடிசூட்டிக்கொள்ள சம்மதித்தான். அவனிடம் நீ பரதனுக்கு இந்த பட்டத்தை கொடு என்று கேட்டால் ராமனே மனம் உகந்து பரதனை அரசனாக்கிவிடுவான். உன்னால் கேட்கப்பட்ட இரண்டாவது வரத்தை மட்டும் மறுபடியும் கேட்காதே. நீ கேட்ட முதல் வரத்தை இப்போதே தந்தேன். நீயும் பரதனும் இந்த உலகத்தை மகிழ்ச்சியுடன் ஆட்சி செய்யுங்கள். இனி அதனை மாற்ற மாட்டேன். என் உயிரான ராமன் எல்லா உயிர்களுக்கும் நல்லவனாக இருக்க கூடியவன். உனக்கு ஒரு ரகசியம் சொல்கிறேன். என் உயிராக இருக்கும் ராமர் என்னை பிரிந்து காட்டிற்குள் சென்றால் உன் உயிர் என் உடலை விட்டு பிரிந்து விடும். நான் உன்னை யாசித்து கேட்கிறேன். ராமரை என்னிடம் இருந்து பிரித்து என்னை வருந்தும்படி செய்யும் இரண்டாவது வரத்தை கேட்காதே. ராமன் இந்த நாட்டை கடந்து செல்லாமல் இருக்க ஒரு நல்ல வார்த்தை சொல் உனது காலை பிடித்து கேட்கிறேன். அதர்மத்தை செய்ய என்னை தூண்டாதே என்றார்.
அனைத்தையும் கேட்ட கைகேயி கோபத்துடன் எனக்கு கொடுத்த வாக்கை நீங்கள் நிறைவேற்றா விட்டால் நீங்கள் சத்தியத்தை மீறியவர் ஆவீர்கள். கொடுத்த வாக்கை மீறியவர் தசரதர் என்ற பெயரை பெற்றுவிடுவீர்கள். நான் கேட்ட இரண்டு வரத்தை கொடுத்தால் கொடுங்கள் இல்லையேல் ராமருக்கு பட்டாபிஷேகம் செய்து நீங்கள் மகிழ்ச்சியுடன் வாழுங்கள். நான் இன்றே என் உயிரை விட்டுவிடுவேன் என்று தீர்க்கமாக கூறினாள்.