ராமாயணம் 3. ஆரண்ய காண்டம் பகுதி 10

ராமர் வந்திருந்த ராட்சச பெண்ணை பார்த்து நீ யார்? உனது பெயர் என்ன? உன்னைப்பார்த்தால் ராட்சச பெண் போல் தெரிகிறது. இங்கு எதற்கு வந்திருக்கிறாய் என்று கேட்டார். அதற்கு ராட்சச பெண் ராவணனைப் பற்றி கேள்விப்பட்டிருக்கின்றாயா? ராவணனின் சகோதரி நான். எனது பெயர் சூர்ப்பனகை. விச்ரவஸினுடைய மகனும் ராட்சசர்களின் அரசன் ராவணன் அவனின் சகோதர்களான விபீஷணனும் கும்பகர்ணனும் மகா பலசாலிகள். தவிர இக்காட்டின் அரசனான கரணும் தூஷணனும் என் சகோதரர்கள் ஆவார்கள். இவர்களின் அதிகார பலம் மிகவும் பெரியது. நினைக்கும் எதையும் செய்யும் பலமும் அதிகாரமும் பெற்றவர்கள். ஆனால் நான் அவர்களுக்கு கட்டுப்பட்டவள் அல்ல. என் விருப்ப்படி தான் எதையும் செய்வேன். இந்த வனத்தில் என்னைக் கண்டால் அனைவரும் பயப்படுவார்கள். உன்னைக் கண்டதும் உன் மேல் நான் காதல் கொண்டுவிட்டேன். இனி நீ தான் என் கணவன். இந்த பூச்சியை போலிருக்கும் இந்த பெண்ணை கட்டிக்கொண்டு ஏன் அலைகிறாய். இக்காட்டில் உனக்கு தகுந்த மனைவி நான் தான். என்னுடன் வந்து மகிழ்ச்சியாய் இரு. என் உருவத்தை பார்த்து பயப்படாதே. எனக்கு உருவத்தை மாற்றிக்கொள்ளும் சக்தி உண்டு. உனக்கு பிடித்தாற் போல் அழகாக என் உருவத்தை மாற்றிக்கொள்கிறேன். நீயும் நானும் வாழ்வதற்கு உனது தம்பியும் உனது மனைவியும் தடையாய் இருந்தால் இப்போதே அவர்களை தின்று முடித்து விடுகின்றேன். எதற்கும் யோசிக்காதே உடனே என்னுடன் வந்துவிடு என்றாள் சூர்ப்பனகை.

ராமர் சூர்ப்பனகை பேசிய அனைத்தையும் கேட்டு சிரித்துவிட்டு லட்சுமணனுடன் விளையாட எண்ணம் கொண்டார். அரக்கியே எனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விட்டது. இவள் எனது மனைவி என்னுடனேயே இருக்கிறாள். என்னை ஆசைப்பட்டு நீ அடைந்தால் இரண்டாவது மனைவியாவாய். உனக்கு துன்பம் மிகவும் வரும். இரண்டு மனைவிகள் இருவருக்குமே தொந்தரவு வரும். எனது தம்பியை என்னை போலவே அழகிலும் வலிமையிலும் பலசாலி. இன்னும் திருமணம் ஆகாமல் தனியாக இருக்கின்றான். உனக்கு தகுந்த கணவனாக இருப்பான் அவனிடம் சென்று கேட்டுப்பார் என்றார்.

ராமர் சொன்னபடி சூர்ப்பனகையும் லட்சுமனணிடம் தனது ஆசையை தெரிவித்தாள். தனது அண்ணன் தன்னுடன் விளையாடுவதை அறிந்த லட்சுமணன் தானும் விளையாட்டில் சேர்ந்து கொண்டான். சூர்ப்பனகையிடம் பைத்தியக்காரி நீ ஏமாந்து போகாதே. நான் எனது அண்ணனுக்கு அடிமையாக இருந்து பணி செய்து கொண்டிருக்கின்றேன். நீ என்னை திருமணம் செய்தால் நீயும் என்னுடன் அடிமையாக இருந்து பணி செய்ய வேண்டும். நீயோ ராஜகுமாரி என்னைப்போன்ற அடிமையுடன் சேர்ந்து நீ வாழலாமா? அண்ணன் மனைவியை பற்றி கவலைப்படாதே. எனது அண்ணனை திருமணம் செய்து கொண்டு இரண்டாவது மனைவியாக மகிழ்ச்சியுடன் இருப்பாய் என்றான். சூர்ப்பனகை மீண்டும் ராமரிடம் வந்தாள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.