ராமாயணம் 6. யுத்த காண்டம் பகுதி – 8

ராமர் அனைவரின் கருத்தை கேட்டதும் முதலில் அங்கதன் பேச ஆரம்பித்தான். ராமரை சரணடைகிறேன் என்று நமது பகைவன் கூட்டத்தில் இருந்து சில ராட்சசர்கள் வந்திருக்கிறார்கள். இவர்கள் தானாக வந்தார்களா இல்லை ராவணனால் திட்டமிடப்பட்டு அனுப்பப்பட்டார்களா என்று நமக்கு தெரியாது. இதனை தெரிந்து கொள்ளாமல் இவர்களை அழிப்பது தவறு. இவர்களை சேர்த்துக் கொண்டால் பின்நாளில் நமக்கு ஏதேனும் அபாயம் இவர்களால் வந்தாலும் வரலாம். இவர்களை பற்றி உடனடியாக ஒரு தீர்மானத்திற்கு வர முடியாது. சில நாள் இவர்கள் இங்கே இருக்கட்டும். இவர்கள் நடவடிக்கைகளை கண்காணிக்கலாம். எப்படி நடந்து கொள்கின்றார்கள் என்று பார்க்கலாம். இவர்களின் செயல் நல்ல படியாக இருந்தால் நம்மோடு சேர்த்துக் கொள்ளலாம். சந்தேகத்தை ஏற்படுத்தினால் அதன் பிறகு விசாரித்து இவர்கள் வஞ்சகமாக ஏமாற்ற வந்திருக்கிறார்கள் என்று தெரிந்தால் அழித்து விடலாம் என்று அங்கதன் பேசி முடித்தான். அதன் பிறகு சபரன் பேச ஆரம்பித்தான். இவர்களை நம்மோடு சேர்த்துக் கொள்வது எனக்கு சரியானதாக இருக்கும் என்று தோன்றவில்லை. முதலில் நம்மிடம் இருக்கும் சாமர்த்தியமான ஒற்றர்களை வைத்து இவர்களை சோதித்து அதன் பிறகு முடிவு செய்யலாம் என்றான்.

ராமர் ஜாம்பவானைப் பார்த்தார். ஜாம்பவான் பேச ஆரம்பித்தார். ராட்சசர்கள் நல்ல எண்ணத்துடன் வந்திருக்கிறார்களா வஞ்சக எண்ணத்துடன் வந்திருக்கிறார்களா என்று சோதித்து பார்த்து அறிந்து கொள்வது என்பது கடினமான காரியம். ராவணன் நமக்கு மிகப்பெரிய பகைவன். அவனிடம் இருந்து பிரிந்து வந்துவிட்டதாக சொல்கிறார்கள். இவர்களின் பேச்சு எனக்கு சிறிது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இதனை எப்படி நாம் நம்புவது. இலங்கை செல்ல இன்னும் நாம் கடலை தாண்டவில்லை. அதற்குள்ளாக ராமரை சரண்டைகிறேன் என்று சொல்கிறார்கள். இதற்குறிய காரணத்தை நாம் முதலில் அறிந்து கொள்ள வேண்டும். ராவணன் ஏற்கனவே வஞ்சகம் செய்து ஏமாற்றியிருக்கிறான். மீண்டும் அது போல் நடக்க விடக்கூடாது. ஆகவே இவர்களை நம்முடன் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்பது என்னுடைய கருத்து என்று சொல்லி முடித்தார் ஜாம்பவான். மயிந்தன் பேச ஆரம்பித்தான். சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரை தள்ளி வைப்பது என்பது நல்லவர்கள் செய்யும் சரியான செயல் இல்லை. அவர்களை நம் சேர்த்துக் கொள்ளலாமா வேண்டாமா என்பதை நம் அறிவின் மூலம் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். ராவணனிடமிருந்து இவர்கள் பிரிந்து வந்தது உண்மையாக கூட இருக்கலாம். இதனை சோதித்து பார்த்து அறிந்து கொள்ளும் திறமையானவர்கள் நமக்குள் இருக்கிறார்கள் என்று சொல்லி முடித்தான்.

ராமர் அனுமனை பார்த்தார். ராமர் தன்னுடைய அபிப்பிராயத்தை அறிந்து கொள்ள விரும்புகிறார் என்பதை உணர்ந்த அனுமன் பேச ஆரம்பித்தார். தங்களின் யோசனைக்கு முன்பு சிறப்பான யோசனையை யாரால் சொல்ல முடியும். தங்கள் முன்பு யோசனை சொல்லும் வல்லவர்கள் யாரையும் நான் இந்த பூலோகத்தில் காணவில்லை. தாங்கள் என்னிடம் கேட்பதினால் எனக்கு தோன்றியதை இங்கு தெரிவிக்கிறேன். விபீஷணன் வஞ்சகம் செய்து ஏமாற்ற விரும்பி இருந்தால் மறைமுகமாகவே வந்திருக்கலாம். ஆனால் நேரடியாக இங்கு வந்து தைரியத்துடன் அனைவரின் முன்பும் நின்று இலங்கையில் நடந்தவற்றை சொல்லி உங்களை பார்க்க அனுமதி கேட்கிறான். நடந்தவைகள் அனைத்தையும் விபீஷணன் சொன்ன பிறகு ஒற்றர்கள் இவர்களிடம் தனியாக விசாரிக்க ஒன்றும் இல்லை. ஏற்கனவே இலங்கை சபைக்கு நான் சென்றிருந்த போது அங்கிருக்கும் அனைவரும் ராவணனுக்கு ஆதரவாகவும் தர்மத்திற்கு எதிராகவே பேசினார்கள். அப்போது ராவணனை எதிர்த்து தர்மத்திற்கு ஆதரவாக பேசியவர் இந்த விபீஷணன். இதனை நான் நேரடியாகவே கண்டிருக்கிறேன். தர்மத்திற்கு எதிராக செயல்பட்ட ராவணனுக்கு விபீஷணன் புத்திமதி சொல்லி இருக்கிறான். அதை ராவணன் கேட்காமல் விட்டான். அவனை எதிர்த்து தங்களின் பராக்கிரமத்தை அறிந்து உங்களை விபீஷணன் சரணடைய வந்திருக்கிறான். இதில் சந்தேகப்படுவதற்கு ஒன்றும் இல்லை.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.