பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-13
வேள்வியில் மீதமான எஞ்சிய உணவை உண்கின்ற சான்றோர்கள் எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுபடுகிறார்கள். ஆனால் எந்தப் பாவிகள் தம் உடலைப் பேணுவதற்காகவே உணவை சமைக்கிறார்களோ அவர்கள் பாவத்தை உண்கிறார்கள்.
இந்த சுலோகத்தின் கருத்து என்ன?
செய்யும் செயல்கள் அனைத்தையும் இறைவனுக்கு சமர்ப்பணம் செய்து தன்னலம் கருதாமல் கடமை ஆற்றும் ஒழுக்கங்களில் சிறந்த அறிவார்ந்தவன் இறைவனுக்காக என்றே சமைத்து அதனை இறைவனுக்கு சமர்ப்பித்து விட்டு அதனை இறைவனின் பிரசாதமாக உண்பவன் தனது எல்லாப் பாவங்களில் இருந்தும் விடுபடுகிறான். ஆனால் ஐம்புலன்களின் ஆசை வழியாக சென்று பார்ப்பது நுகர்வது கேட்பது ருசிப்பது உணர்வது ஆகிய ஏதேனும் ஒன்றினால் ஒரு உணவை சாப்பிட ஆசைப்பட்டோ அல்லது தனது உடல் அழகாக வேண்டும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று ஆசையின் வழியாக சென்று உணவை சமைத்து உண்கிறார்கள் பாவத்தை உண்பவர்கள் ஆகிறார்கள் என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.
சமைக்கும் போது ஐந்து வகையான கருவிகளால் பாவம் ஏற்படுவதாக ஆதிசங்கரர் தனது உரையில் கூறிப்பிட்டுள்ளார். அவை 1. அடுப்பு 2. நீர்த்தொட்டி 3. வெட்டும் கருவிகள் 4. அரைக்கும் கருவிகள் மற்றும் துடப்பம். இந்த கருவிகளை உபயோகித்து சமைக்கும் போது நம்மை அறிந்தோ அறியாமலோ கண்ணுக்கு தெரியாத பூச்சிகள் இறந்து அதனால் பாவம் சேர்கிறது.