பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-37
ரஜோ குணத்திலிருந்து உண்டாகியது இந்தக் காமமும் கோபமுமாகும். இது பெருந்தீனிக்காரன். போகங்களில் போதும் என்ற எண்ணமில்லாதவன் மேலும் பெரிய பாவி இதையே இந்த விசயத்தில் பகைவனாக அறிந்து கொள்.
இந்த சுலோகத்தின் கருத்து என்ன?
ஒருவன் இறைவனை நோக்கிய யோகத்தில் ஈடுபடும் போதோ அல்லது தர்மத்தின் வழி செல்லும் போதோ பூர்வ ஜென்ம வாசனைகளின் காரணமாக ரஜோ குணம் தலை தூக்குகிறது. இதன் காரணமாக ஆசைகள் புலன்கள் வழியாக எளிதாக வந்து உலக விசயங்களில் இழுக்கிறது. இந்த ஆசைகளை அனுபவித்தாலும் பெருந்தீனீக்காரன் போல் மேலும் மேலும் என்று அடுத்த ஆசைகள் வந்து கொண்டே இருக்கிறது. இந்த ஆசைகளை அனுபவக்க முயற்சிக்கும் போது அது தடைபட்டால் மிகுந்த கோபம் ஏற்படுகிறது. இந்த கோபம் அடுத்தவர்களுக்கு தீமையை ஏற்படுத்துகிறது. இது பாவம் ஏற்பட காரணமாயிருக்கிறது. அனுபவித்த ஆசைகள் போதும் என்ற எண்ணமில்லாதவன் மேலும் பாவத்தை சேர்த்துக் கொள்கிறான். தணிக்க முடியாத ஆசையும் கோபமும் உயிர்களுக்கு மிகப்பெரிய விரோதிகள் இது உயிர்களின் அழிவிற்கு வழிவகுத்து விடுகிறது என்பதை அறிந்து கொள் என்று என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.
