பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #16
குந்தியின் மகனான அரசர் யுதிஷ்டிரர் அநந்தவிஜயம் என்ற சங்கையும் நகுலனும் சகாதேவனும் முறையே சுகோஷம் மணிபுஷ்பகம் என்ற சங்கையும் முழங்கினார்கள்.
இந்த சுலோகத்தில் முதல் கேள்வி: யுதிஷ்டிரரின் தாய் குந்தி என்று ஏன் குறிப்பிட்டு சொல்லப்படுகிறார்?
யுதிஷ்டிரரும் அர்ஜூனனும் பீமனும் குந்திக்கு பிறந்தவர்கள். நகுலனும் சகாதேவனும் மாத்ரீக்கு பிறந்தவர்கள். இந்த சுலோகத்தில் நகுலன் மற்றும் சகாதேவன் பெயர்களும் வருகிறது. எனவே யுதிஷ்டிரரின் தாய் வேறு நகுலன் சகாதேவனின் தாய் வேறு என்பதை குறிப்பிடுவதற்காக குந்தியின் பெயர் சொல்லப்படுகிறது.
இந்த சுலோகத்தில் 2 வது கேள்வி: யுதிஷ்டிரர் மகாபாரத யுத்தம் ஆரம்பிக்கும் போது எந்த நாட்டிற்கும் அரசனாக இல்லை ஆனாலும் அரசர் யுதிஷ்டிரர் என்று ஏன் சஞ்சயன் திருதராஷ்டிரரிடம் கூறினார்?
யுதிஷ்டிரர் வனவாசம் செல்வதற்கு முன்பு இந்திரப்பிரஸ்தத்திற்கு அரசனாக இருந்து தன் சகோதரர்களுடன் ராஜசூய யாகம் நடத்தி தன்னை எதிர்த்த அனைத்து அரசர்களையும் வெற்றி பெற்று அரசர்களுக்கெல்லாம் அரசனாக இருந்து சக்கரவர்த்தி என்று பெயர் பெற்று பெரிய சாம்ராஜ்யத்தை ஆட்சி செய்து வந்தவர். மேலும் யுத்தத்தின் போது யுதிஷ்டிரருடைய உடம்பில் அரசனுக்குரிய அரசுச் சின்னங்கள் இருந்தது. இதன் காரணமாகவும் மேலும் இந்த யுத்தத்தில் யுதிஷ்டிரனே வெற்றி பெற்று அரசனாவான் என்று சஞ்சயன் அறிந்திருந்தான். இதனை திருதராஷ்டிரருக்கு மறைமுகமாக தெரிவிக்கும் வகையில் யுதிஷ்டிரனை அரசன் என்றுகூறினார்.