பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #39
ஜனார்த்தனா குலநாசத்தினால் ஏற்படும் குற்றத்தை நன்கு உணர்கின்ற நாம் இந்த பாவச்செயலிலிருந்து விலகுவது பற்றி ஏன் ஆலோசிக்காமல் இருக்க வேண்டும்? (ஆலோசிப்போம்)
இந்த சுலோகத்தில் ஒரு கேள்வி: கிருஷ்ணரை ஜனார்த்தனா என்று அர்ஜூனன் ஏன் அழைக்கின்றான்?
சுலோகம் – 36 இல் ஜனார்த்தனன் என்ற பெயருக்கு விளக்கம் கொடுக்கப்பட்டாலும் இந்த சுலோகத்தில் வேறு வகையான அர்த்தத்தில் அர்ஜூனன் கிருஷ்ணரை ஜனார்த்தனன் என்று அழைக்கிறான். ஜனார்த்தனன் என்ற சொல்லுக்கு மக்களின் மனதில் மாயையாக இருப்பவன் என்ற அர்த்தமும் உண்டு. எதிரணியில் இருப்பவர்கள் தான் மாயையில் சிக்கி ராஜ்யத்திற்கும் சுக போகத்திற்கும் ஆசைப்பட்டு இதனால் வரும் பாவங்களை பற்றி சிந்திக்காமல் யுத்தத்திற்கு வந்திருக்கிறார்கள். நான் மாயையில் சிக்காமல் வரும் பாவங்களைப் பற்றி அறிந்து தெளிவாக இருக்கிறேன் என்பதை மறைமுகமாக கிருஷ்ணரிடம் சுட்டிக்காட்ட ஜனார்த்தனா என்ற பெயரை குறிப்பிடுகிறான்.
இந்த சுலோகத்தின் கருத்து என்ன?
கௌரவ சகோதரர்கள் அரச பதவி மீது உள்ள பேராசையினால் அறிவிழந்த நிலையில் குலநாசத்தினால் ஏற்படும் பாதிப்புகளை உணராமல் இந்த யுத்தத்திற்கு வந்திருக்கிறார்கள். நமக்கு தான் பதவி ஆசை இல்லையே மேலும் நடக்கப்போகும் பாதிப்புகளும் வரப்போகும் பாவங்களையும் நன்றாக தெரிந்து வைத்திருக்கிறோம் ஆகையால் நாம் யுத்தம் செய்யாமல் இருப்பது பற்றி ஆலோசிக்கலாம் என்று அர்ஜூனன் கிருஷ்ணரிடம் கூறிகின்றான்.