பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #15
கிருஷ்ண பகவான் பாஞ்சஜன்யம் என்ற பெயர் கொண்ட சங்கை முழங்கினார். அர்ஜூனன் தேவதத்தம் என்ற பெயர் கொண்ட சங்கை முழங்கினான். ஓநாயின் வயிற்றைக் கொண்ட பயங்கர செயலை புரியும் பீமன் பௌண்டிரம் என்ற பெயருள்ள பெரிய சங்கை முழங்கினான்.
இந்த சுலோகத்தில் முதல் கேள்வி: கிருஷ்ணரிடம் பாஞ்சஜன்யம் சங்கு எப்படி வந்தது?
கிருஷ்ணர் மற்றும் பலராமர் சிறுவர்களாக இருந்த போது அவர்களுக்கு கல்வி கற்றுக் கொடுக்கும் குருவாக இருந்தவர் சாந்திபனீ முனிவர் அவரிடம் குரு தட்சணையாக என்ன வேண்டும் என்று கிருஷ்ணரும் பலராமரும் கேட்டார்கள். அதற்கு அவர் தன்னுடைய மகனை சங்கு வடிவில் இருந்த பாஞ்சஜன்யன் என்ற அசுரன் விழுங்கி விட்டான். தங்களால் இயன்றால் அவனை மீட்டுத் தாருங்கள் என்று கேட்டார். குருவின் வேண்டுகோளுக்கிணங்க கடலின் அடியில் சங்கு வடிவில் இருந்த அசுரனை கடலுக்கு மேல் கொண்டு வந்து அழித்து எமபுரம் வரை சென்று குருவின் மகனை மீட்டுக் கொடுத்த கிருஷ்ணர் சங்கு வடிவில் இருந்த அசுரனுக்கு அபயம் கொடுத்து சங்கு வடிவிலேயே அவனை தன்னுடன் வைத்துக் கொண்டார். அதனால் அந்த சங்குக்கு பாஞ்சஜன்யன் என்ற பெயர் கிடைத்தது.
இந்த சுலோகத்தில் 2 வது கேள்வி: அர்ஜூனனுக்கு தேவதத்தம் சங்கு எப்படி கிடைத்தது?
யுதிஷ்டிரர் நடத்திய ராஜசூய யாகத்தின் போது போது அர்ஜூனன் பல அரசர்களை வெற்றி பெற்று நிறைய செல்வங்களை கொண்டு வந்தான். அப்போது தைத்யர்களுடன் போரிட்ட போது இந்திரன் தேவதத்தம் என்ற சங்கை அர்ஜூனனுக்கு வழங்கினான். இந்த சங்கின் சத்தம் எதிரிப் படைகளை நடுநடுங்க வைக்கும்.
இந்த சுலோகத்தில் 3 வது கேள்வி: பீமனுக்கு ஓநாயின் வயிற்றைக் கொண்டவன் என்ற பெயர் எப்படி வந்தது?
பீமன் அதிக அளவு உணவுகளை உட்கொள்ளக் கூடியவனாக இருந்தான். அத்தனை உணவுகளையும் ஜீரணமாக்கும் சக்தி அவனது வயிற்றில் இருந்தது. இதனால் அவனுக்கு ஓநாயின் வயிற்றைக் கொண்டவன் என்ற பெயர் வந்தது. பீமன் வைத்திருந்த பௌண்டிரம் சங்கு அளவில் பெரிதாக இருந்தது. பௌண்டிரம் என்ற சொல்லுக்கு எதிரிகளின் மனதை பிளப்பது என்று பொருள். பீமன் இந்த சங்கை முழங்கினால் தெளிவாக இருக்கும் எதிரிகளின் மனம் பிளந்து சிறிது நேரத்திற்கு குழப்பத்திற்குள் இருக்கும்.
குறிப்பு: சுலோகம் -14 இல் கிருஷ்ணர் மற்றும் அர்ஜூனன் வைத்திருந்த சங்குகள் தெய்வீகமானவை என்று சொல்லப்பட்டது. அதற்கான காரணம் கிருஷ்ணர் திருமாலின் அவதாரம் இறைவனிடன் இருந்த சங்கும் தெய்வீக அம்சமுடையதுதான். அதன் பிரதிபலிப்பாகவே பாஞ்சஜன்யம் என்ற பெயர் பஞ்ச இந்திரியங்களையும் அடக்குவது என்ற பொருளுடன் இந்த சங்கை முழங்கும் போது சங்கு சத்தத்துடன் ஓம் என்ற பிரணவ மந்திரத்தை துல்லியமாக சரியாக ஒலிக்கின்ற படியால் அதுவும் தெய்வீகம் பெற்றது. அர்ஜூனனுக்கு இந்திரன் தேவலோகத்து சங்கை அளித்திருந்தான். அதனால் அந்த சங்கும் தெய்வீகமானதுதான்.