சுலோகம் -33 # 34

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #33

நாம் யாருக்காக ராஜ்யத்தையும் போகங்களையும் இன்பங்களையும் விரும்பினோமோ அவர்களே செல்வத்தையும் உயிர் மேல் உள்ள ஆசையையும் துறந்து யுத்தத்தில் நிற்கிறார்கள்.

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #34

குருமார்கள் பெரியப்பா சித்தப்பாக்கள் மகன்கள் அவ்விதமே பாட்டனார்கள் தாய்மாமன்கள் மாமனார்கள் பேரன்கள் மைத்துனர்கள் ஆகியோர் இங்கு கூடியிருக்கிறார்கள்.

இந்த இரண்டு சுலோகத்திலும் அர்ஜூனன் சொல்ல வந்த கருத்து என்ன?

ராஜ்யம் போகம் இன்பம் செல்வம் அனைத்திலும் நிலையான ஆனந்தம் கிடையாது என்று அர்ஜூனனுக்குத் தெரியும். இருந்தாலும் சகோதரர்கள் மற்றும் உறவினர்களுக்காகத்தான் அனைத்தையும் விரும்பி இருந்தான். ஆனால் அவர்களே போரில் தங்களின் உயிரைத் தியாகம் செய்வதற்கு தயாராக இருக்கின்றார்கள். இவர்கள் அனைவரும் யுத்தத்தில் இறந்து விட்டால் அதன் பிறகு கிடைக்கும் ராஜ்யம் போகம் இன்பம் இதெல்லாம் யாருக்காக? ஆகவே யுத்தம் செய்வது சரியில்லை என்ற கருத்தில் அர்ஜூனன் அவ்வாறு கூறினான். சுலோகம் – 34 இல் சொல்லப்பட்ட உறவினர்கள் அனைவரும் யார் யார் என்று சுலோகம் – 26 இல் சொல்லப்பட்டுள்ளது.

சுலோகம் -32

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #32

கிருஷ்ணா நான் இந்த வெற்றியை விரும்பவில்லை ராஜ்யத்தையும் விரும்பவில்லை சுகங்களையும் விரும்பவில்லை கோவிந்தா நமக்கு இத்தகைய ராஜ்யங்களால் என்ன பயன்? இத்தனை சுகபோகங்களோடு உயிரோடு வாழ்வதில் என்ன பயன்?

இந்த சுலோகத்தில் முதல் கேள்வி: அர்ஜூனன் உயிரோடு இருந்து பெறும் வெற்றியையும் ராஜ்யத்தையும் ஏன் விரும்பவில்லை?

வெற்றிக்குப் பிறகு கிடைக்கும் ராஜ்யத்தையும் சுகபோகங்களையும் உறவினர்களோடும் நண்பர்களோடும் பகிர்ந்து கொள்ளாமல் தனியாக அனுபவிக்கும் போது இன்பம் இருக்காது துயரம் மட்டுமே இருக்கும். இந்த துயரம் இறுதிக் காலத்திற்கு பிறகு மேலுலகம் சென்றாலும் தொடரும் என்று அர்ஜூனன் நினைக்கின்றான். அதனால் உயிரோடு இருக்கும் போது இன்பத்தை பகிர்ந்து கொள்ள முடியாத வெற்றியும் ராஜ்யமும் சுகபோகங்களும் இருந்தும் பயனில்லாத காரணத்தினால் அர்ஜூனன் இவற்றை விரும்பவில்லை.

இந்த சுலோகத்தில் 2 வது கேள்வி: இந்த சுலோகத்தில் கிருஷ்ணரை கோவிந்தா என்று அர்ஜூனன் ஏன் அழைக்கின்றான்?

கோவிந்தா என்ற சொல்லுக்கு இந்திரியங்களை அடக்கி ஆளுகின்றவன் என்று பொருள். அர்ஜூனன் மன குழப்பத்தில் இருக்கும் போது அவனது இந்திரியங்கள் அடங்காமல் இருக்கிறது. கிருஷ்ணர் குழப்பம் இல்லாமல் தன் இந்திரியங்களை அடக்கி அமைதியாக இருப்பதால் கிருஷ்ணரை கோவிந்தா என்று அர்ஜூனன் அழைக்கின்றான்.

சுலோகம் -31

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #31

கேசவா கெடுதல்களை விளைவிக்கக் கூடிய சகுனங்களை நான் பார்க்கிறேன். போரில் நம் உறவினர்களை கொல்வதால் எந்த நன்மையையும் நான் காணவில்லை.

இந்த சுலோகத்தில் முதல் கேள்வி: இந்த சுலோகத்தில் கிருஷ்ணரை கேசவா என்று அர்ஜூனன் ஏன் அழைக்கின்றான்?

கேசவன் என்றால் கறுத்துச் சுருண்டு சேர்ந்து சீராக இருக்கும் அழகிய கூந்தலை உடையவர் என்று பொருள். அர்ஜூனனுக்கு சுலோகம் # 29 இல் உள்ளபடி பயத்தில் அவனது ரோமங்கள் சிலிர்த்து அவனுடைய கூந்தல் சீரில்லாமல் விரிந்து கிடந்தது. கிருஷ்ணருடைய கூந்தல் கறுத்துச் சுருண்டு சேர்ந்து சீரான அழகுடன் இருந்ததால் கிருஷ்ணரை கேசவா என்று அர்ஜூனன் அழைக்கின்றான்.

இந்த சுலோகத்தில் 2 வது கேள்வி: கெடுதலான சகுனங்கள் என்று அர்ஜூனன் எதனை குறிப்பிடுகின்றான்?

யுத்தம் ஆரம்பிப்பதற்கு முன்பே அர்ஜூனனுக்கு உடல் நடுக்கம் மற்றும் தன் உடலில் ஏற்பட்ட சில மாறுதல்களை கெடுதலான சகுனங்கள் என்று அர்ஜூனன் குறிப்பிடுகின்றான்.

இந்த சுலோகத்தில் 3 வது கேள்வி: உறவினர்களை கொல்வதால் நன்மை இல்லை என்று அர்ஜூனன் எதனை குறிப்பிடுகின்றான்?

உறவினர்களையும் நண்பர்களையும் கொன்ற பிறகு முதலில் தவறு செய்து விட்டோமோ என்று மனம் கலங்கும் பின்பு உறவினர்களும் நண்பர்களும் நம்முடன் இல்லையே என்ற கவலை வாழ்நாள் முழுவதும் தொடரும். மேலும் உயிர் கொலை செய்வதால் பாவம் உண்டாகும். ஆகவே இந்த யுத்தம் நடந்தால் துயரம் மட்டுமே இருக்கும். நன்மைகள் ஒன்றும் இருப்பதாக அர்ஜூனனுக்கு தெரியவில்லை. இதனையே அர்ஜூனன் இங்கு குறிப்பிடுகின்றான்.

சுலோகம் -29 # 30

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #29

என் உடல் அங்கங்கள் சோர்வடைகின்றன. என் நாக்கு உலர்கின்றது. என் உடலில் நடுக்கம் ஏற்படுகிறது. என் ரோமங்கள் சிலிர்க்கிறது.

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #30

எனது கையிலிருந்து காண்டீபம் நழுவி விழுகிறது. என் உடல் முழுவதும் தீப்பற்றியது போல் உள்ளது. என்னால் சரியாக நிற்கக் கூட முடியவில்லை. எனது மனது அலைபாய்கிறது.

இந்த இரண்டு சுலோகத்திலிருந்தும் ஒரு கேள்வி: அர்ஜூனனின் உடலில் ஏன் இத்தனை மாற்றங்கள் ஏற்படுகிறது?

இந்தப் போர் நடந்தால் அதன் விளைவுகள் மிகவும் கொடுமையானதாக இருக்கும். அனைத்து உறவினர்களும் நண்பர்களும் மரணத்தின் நுழைவு வாயிலில் நிற்பதைப் போல் அர்ஜூனன் எண்ணுகிறான். இந்த எண்ணம் அர்ஜூனனின் மனதில் பயத்தையும் துன்பத்தையும் ஏற்படுத்தி அவனின் உடலில் இத்தனை மாற்றங்ளை உண்டாக்குகிறது.

சுலோகம் -27 # 28

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #27

கூடியிருந்த அனைத்து உறவினர்களையும் நன்கு பார்த்த குந்தியின் மகனான அர்ஜூனன் மிகுந்த இரக்கம் கொண்டவனாக துயரத்துடன் பேச ஆரம்பித்தான்.

இந்த சுலோகத்தில் ஒரு கேள்வி: யுத்தம் ஆரம்பிக்கும் நேரத்தில் அர்ஜூனனுக்கு இரக்கம் வர காரணம் என்ன?

யுத்தம் ஆரம்பித்தால் நான்கு பக்கமும் சூழ்ந்திருக்கின்ற உறவினர்கள் பலர் இந்த யுத்தத்தின் மூலமாக கொல்லப்படுவார்கள். உறவினர்கள் நண்பர்கள் மீது அர்ஜூனன் வைத்திருந்த பலவீனமான பற்று மற்றும் பாசம் காரணமாக அவனுக்கு அவர்கள் மீது இரக்கம் உண்டானது.

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #28

கிருஷ்ணா போர் புரிவதற்காக எனது உறவினர்கள் எனது முன்பாக ஒன்று கூடி நிற்பதைப் பார்க்கிறேன்.

சுலோகம் -26

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #26

கூடியிருந்த இரண்டு படைகளிலும் நிற்கின்ற குருநாதர்கள் முப்பாட்டர் பாட்டனார்கள் பெரியப்பாக்கள் சித்தப்பாக்கள் தாய்மாமன்கள் மாமனார்கள் சகோதரர்கள் புதல்வர்கள் பேரன்கள் மற்றும் நண்பர்களும் அன்பர்களும் நிற்பதை அர்ஜூனன் கண்டான்.

இந்த சுலோகத்தில் ஒரு கேள்வி: இந்த சுலோகத்தில் இரண்டு படைகளிலும் உறவு முறையில் சொல்லப்பட்டவர்கள் யார் யார்?

குருநாதர்கள் – கிருபாச்சாரியாரும் துரோணாச்சாரியாரும்

முப்பாட்டர் – பாஹ்லீகர்

பாட்டனார்கள் – பீஷ்மரும் பாஹ்லீகரின் மகன் சோமதத்தரும்

பெரிப்பா மற்றும் சித்தப்பா – தந்தையைப் போல் மதிக்கத்தக்க சோமதத்தரின் மகன் பூரிச்ரவஸ் போன்ற தந்தையின் சகோதரர்கள்

தாய்மாமன்கள் – சல்லியனும் புருஜித்தும் குந்திபோஜனும்

சகோதரர்கள் – தன்னுடைய சகோதரர்கள் 4 பேரும் கௌரவர்கள் நூறு பேரும்

புதல்வர்கள் – அர்ஜூனனுக்கும் சுபத்திரைக்கும் பிறந்த அபிமன்யுவும் இடும்பிக்கும் பீமனுக்கும் பிறந்த கடோத்கஜனும் உப பாண்டவர்களான யுதிஷ்டிரனுக்கு பிறந்த பிரதிவிந்த்யனும் பீமனுக்கு பிறந்த சுதசோமனும் அர்ஜூனனுக்கு பிறந்த சுருதகீர்த்தியும் நகுலனுக்கு பிறந்த சதாநீகனும் சகாதேவனுக்கு பிறந்த சுருதகர்மாவும்

பேரன் – தங்களுடைய புதல்வர்களின் மகன்கள் வயதை ஒத்தவர்கள்.

நண்பர்கள் – சிறு வயதில் குருகுலத்தில் உடன் விளையாடிய நண்பர்கள்

மாமனார்கள் – துருபதன் சைப்யன்

அன்பர்கள் – பிரதி உபகாரத்தை எதிர்பார்க்காமல் உதவி செய்ய வந்திருக்கும் மன்னர்கள் பலர்.

சுலோகம் -25

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #25

பீஷ்மர் மற்றும் துரோணர் இருவரின் ரதங்களுக்கு முன்பாக தேரை கொண்டு சென்று நிறுத்திய கிருஷ்ணர் அர்ஜூனனிடம் பார்த்தனே யுத்தத்திற்காக ஒன்றாக கூடியிருக்கும் கௌரவர்களைப் பார் என்றார்.

இந்த சுலோகத்தில் முதல் கேள்வி: அர்ஜூனனை பார்த்தனே என்ற பெயரில் கிருஷ்ணர் ஏன் அழைக்கிறார்?

அர்ஜூனனின் தாய் குந்தியின் இயற்பெயர் பிருதை (சிறந்த அழகி என பொருள்) இவளது பெயரை வைத்து பிருதையின் மகனே என்ற பொருளுக்கு பார்த்தனே என்று கிருஷ்ணர் அர்ஜூனனை அழைத்தார். (இந்தப் பெயர்கள் அனைத்தும் சமஸ்கிருதப் பெயர்கள் ஆகையால் சமஸ்கிருதத்தில் மட்டுமே பொருள் புரிந்து கொள்ள முடியும்.)

இந்த சுலோகத்தில் 2 வது கேள்வி: யுத்தத்திற்காக ஒன்றாக கூடியிருக்கும் கௌரவர்களைப் பார் என்று கிருஷ்ணர் அர்ஜூனனிடம் ஏன் கூறினார்?

கௌரவர்களை நன்றாகப் பார் என்ற சொல்லை சொல்லி அவர்கள் அனைவரும் உன்னுடைய உறவினர்கள் நண்பர்கள் என்று அர்ஜூனனுடைய உள்ளத்தில் மறைந்திருக்கும் பலவீனமான பந்த பாசத்தை தட்டி எழுப்பி விடுகிறார் கிருஷ்ணர். இந்த வார்த்தை அர்ஜூனனின் உள்ளத்தில் வேரூன்றி நின்று அவனை யுத்தம் செய்ய மறுக்கும் படி செய்கிறது. இதன் விளைவாக வேதத்தின் சுருக்கமான பகவத் கீதையை கிருஷ்ணர் அர்ஜூனனுக்கு உபதேசித்து அதனை இந்த உலகத்திற்கு சொல்வதற்காக கௌரவர்களைப் பார் என்றார் கிருஷ்ணர்.

சுலோகம் -24

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #24

சஞ்ஜயன் திருதராஷ்டிரரிடம் சொல்கிறார். பாரத நாட்டின் அரசே குடாகேசன் (அர்ஜூனன்) கூறியதை கேட்ட கிருஷ்ணர் உயர்ந்த தேரை இரண்டு படைகளுக்கும் நடுவில் கொண்டு சென்றார்.

இந்த சுலோகத்தில் ஒரு கேள்வி: அர்ஜூனனை சஞ்ஜயன் ஏன் குடாகேசன் என்ற பெயரில் கூறினார்?

குடகா என்றால் தூக்கம் குடாகேசன் என்றால் தூக்கத்தின் மீது தனது அதிகாரத்தை நிலைநாட்டுபவன் என்று பொருள். அர்ஜூனன் தூக்கத்தை வென்றவன். அவன் எப்போதும் உடல் அசதிக்கு ஆட்படுவதில்லை எப்போதும் கவனத்துடனும் விழிப்புடனும் இருப்பவன். இந்த பெயரை சொல்லி அழைப்பதன் மூலமாக அர்ஜூனனை கௌரவர்கள் வெற்றி கொள்வது கடினம் என்று திருதராஷ்டிரருக்கு மறைமுகமாக சொல்கிறார் சஞ்ஜயன்.

இந்த சுலோகத்தில் அர்ஜூனன் கிருஷ்ணர் இருக்கும் தேர் உயர்ந்த தேர் என்று சொல்லப்படுவதற்கான காரணம் சுலோகம் 14 இல் உள்ளது.

சுலோகம் -23

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #23

மிகவும் தீய புத்தியுடைய துரியோதனனின் நலனை விரும்பி எந்தெந்த அரசர்கள் இந்தப் படையில் போர் புரிய வந்திருக்கிறார்கள் என்று நான் பார்க்கிறேன்.

இந்த சுலோகத்தில் முதல் கேள்வி: அர்ஜூனன் துரியோதனனை ஏன் தீய புத்தியுடையவன் என்று கூறினான்?

ஆதிபர்வத்தில் அரக்கு மாளிகை கட்டி பாண்டவர்கள் அனைவரையும் குடும்பத்தோடு எரிக்க முயன்றது மற்றும் சூதாட்டத்திற்கு பின்பு திரெளபதியை சபையில் இருக்கும் அனைவருக்கும் முன்பாக துகிலுரிக்கச் செய்தது அதன் பிறகு செய்து கொண்ட உடன்படிக்கையின்படி பன்னிரண்டு ஆண்டுகள் வனவாசமும் ஒரு வருட காலம் அஞ்ஞாத வாசமும் இருந்த பிறகும் பாண்டவர்களுக்கு கொடுக்க வேண்டிய பங்கை கொடுக்க மறுத்தது மற்றும் தங்களுக்கு உதவி செய்ய வந்த மாமா சல்லியனையும் வஞ்சகமாக அவனது பக்கம் சேர்த்துக் கொண்டது இவை அனைத்தையும் செய்த துரியோதனனை அர்ஜூனன் தீய புத்தி உடையவன் என்று கூறினான்.

இந்த சுலோகத்தில் 2 வது கேள்வி: துரியோதனனின் நலனை விரும்பி அவனுடன் யுத்தம் செய்ய வந்த அரசர்களை பார்க்கிறேன் என்று அர்ஜூனன் ஏன் கூறினான்?

தீய புத்தியுடைய துரியோதனனின் செயல்களை உலகத்திலுள்ள அனைவரும் அறிவார்கள். அவன் செய்யும் தீய செயல்களை அறிந்தும் அதை தடுக்கவோ அல்லது புத்தி சொல்லவோ இயலாமல் அவனுக்கு உதவி செய்ய பல அரசர்கள் வந்திருக்கிறார்கள். தீய செயல்களை செய்பவனுக்கு புத்தி சொல்லி திருத்துவதை விட்டு விட்டு இவர்களும் அவன் செய்யும் தவறுக்கு துணை போகிறார்கள். வந்திருப்பவர்கள் யார் யார் என்று தெரிந்து கொண்டு அதர்மத்திற்கு துணை போகின்றவர்களுக்கு அதன் விளைவை யுத்த களத்தில் புரிய வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அந்த அரசர்களை பார்க்க அர்ஜூனன் விரும்பினான்.

சுலோகம் -21 # 22

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #21

அச்சுதா எனது தேரை இரண்டு படைகளுக்கும் நடுவில் சென்று நிறுத்துங்கள்.

இந்த சுலோகத்தில் ஒரு கேள்வி: அர்ஜூனன் கிருஷ்ணரைப் பார்த்து ஏன் அச்சுதா என்று கூப்பிட்டார்?

எவர் தன் சுயரூபத்திலிருந்து தன் சக்தியாலும் பெருமையினாலும் வழுவாமல் நிலையாக இருக்கிறாரோ மேலும் எந்த இடத்திலும் எந்த நிகழ்விலும் எந்த நேரத்திலும் எவருக்கு தோல்வி என்பது இல்லையோ அவரே அச்சுதன் என்று அழைக்கப்படுகிறார். அச்சுதா என்ற பெயரை சொல்லி அழைக்கும் அர்ஜூனன் கிருஷ்ணருடைய தன்மையையும் பெருமையையும் அறிந்திருக்கிறேன் என்பதை இந்த வார்த்தையால் உணர்த்துகிறார்.

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #22

இந்த போர் தொடக்கத்தில் போர் புரிய விருப்பம் கொண்டு அணிவகுத்து நிற்கும் எதிரிப்படை வீரர்களை எவ்வளவு நேரம் நான் பார்க்கிறேனோ அவ்வளவு நேரம் ரதத்தை இரு படைகளுக்கும் நடுவே நிறுத்தி வையுங்கள். இந்தப் போரில் என்னுடன் யுத்தம் புரியப்போவது யார் என்று நான் பார்க்க வேண்டும்.

இந்த சுலோகத்தில் ஒரு கேள்வி: அர்ஜூனன் பாண்டவர்களுக்கு எதிராக யுத்தம் புரிய வந்திருப்பவர்களை பார்க்க ஏன் எண்ணினான்?

பாண்டவர்களுக்கு எதிராக யுத்தம் புரிய வந்திருப்பவர்கள் அனைவரும் தன்னுடைய உறவினர்களும் நண்பர்களும் என்பதை அர்ஜூனன் நன்கு அறிவான். யுத்தத்தில் தனக்கு துணையாக கிருஷ்ணரும் தன் கொடியில் அனுமனும் இருப்பதினால் பாண்டவ அணியினர் நிச்சயமாக வெற்றி பெறுவார்கள் என்று அர்ஜூனன் நம்பினான். பாண்டவர்களின் வெற்றியில் யுத்தம் முடியும் போது எதிரிப் படை வீரர்கள் பல பேர் உயிருடன் இருக்க மாட்டார்கள். ஆகவே தன்னுடைய உறவினர்களையும் நண்பர்ளையும் இறுதியாக ஒரு முறை பார்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் அவர்களை பார்க்க அர்ஜூனன் எண்ணினான்.