சுலோகம் -162

பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-43

நீண்ட புஜங்களை உடையவனே இவ்விதம் புத்தியைக் காட்டிலும் ஆத்மா மிகவும் மேலானவன். நுண்ணியவன் பலமுள்ளவன் என்று அறிந்து புத்தியினால் மனதை வசப்படுத்தி காமம் என்ற வெற்றி கொள்ள முடியாத சத்ருவைக் கொன்று விடு.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

அர்ஜூனா உன்னுடைய உறுதியான தோள்களை வைத்து எதிரியை வீழ்த்துவது போல் மேலான நுண்ணியவானான பலமுள்ள உன்னுடைய புத்தியை வைத்து கர்ம யோகத்தின் படி செய்யும் காரியங்களை பற்றில்லாமல் செய்து மனதை வசப்படுத்தி ஆசை என்ற வெற்றி கொள்ள முடியாத எதிரியை அழித்துவிடு என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

சுலோகம் -161

பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-42

புலன்கள் உடலைக் காட்டிலும் மேலானவை என்று கூறுகிறார்கள். அவை உயர்ந்தவை பலமுள்ளவே நுண்ணியமானவை. இந்த புலன்களைக் காட்டிலும் மனம் மேலானது. மனதைக் காட்டிலும் புத்தி மேலானது. எது புத்தியைக் காட்டிலும் மேலானதோ அதுவே ஆத்மா.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

கண்களால் பார்க்க முடியாத நுண்ணிய புலன்கள் பலத்துடன் கண்களால் பார்க்கக் கூடிய உடலை தன் விருப்பத்திற்கு இழுத்துச் சென்று வழி நடத்திச் செல்கிறது. ஆகவே உடலை விட புலன்களே மேலானவை என்று பலர் கூறுவார்கள். இந்த புலன்களை விட மனம் மேலானது. மனதை விட புத்தி மேலானது. இந்த மனதையும் புத்தியையும் சரியாக பயன்ப்படுத்தி ஆத்ம விசாரம் செய்தால் தமக்குள் இருக்கும் ஜீவாத்மாவான இறைவனை உணர்ந்து கொள்ளலாம். ஆகவே ஆத்மா அனைத்தையும் விட மேலானதாக இருக்கிறது.

சுலோகம் -160

பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-41

ஆகவே அர்ஜூனா நீ முதலில் புலன்களை வசப்படுத்தி ஞானத்தையும் விஞ்ஞானத்தையும் அழிக்கின்ற பெரும் பாவியான இந்த காமத்தை நிச்சயமாக வீறுடன் ஒழித்து விடு.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

ஆசைகள் ஐந்து புலன்களின் வழியாக மனிதனை மயக்கி ஞானத்தையும் அந்த ஞானத்தை அடைய வேண்டிய வழிமுறையை அறிந்து கொள்ளும் அறிவையும் பெற முடியாதபடி தடுக்கிறது. ஆகவே எதனே செய்தாலும் பற்றில்லாமல் செய்து கர்ம யோகத்தில் ஈடுபட்டு முதலில் ஐந்து புலன்களை தன் வசப்படுத்த வேண்டும். அதன் வழியாக இந்த ஆசைகளை அழித்து விடு என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

கர்ம யோகத்தின் கடைபிடித்து ஆசைகளை அழித்து புலன்களை வசப்படுத்தி விட்டால் இறைவனை அடையக் கூடிய ஞானத்தையும் அந்த ஞானத்தை அடையகூடிய கூடிய வழிமுறையையும் அறிந்து கொள்ளலாம்.

சுலோகம் -159

பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-40

புலன்கள் மனம் புத்தி இவையெல்லாம் இந்தக் காமத்தின் இருப்பிடம் என்று சொல்லப்படுகிறது. இந்தக் காமம்தான் மனம் புத்தி புலன்களைக் கொண்டு ஞானத்தை மறைத்து மனிதனை மோகத்தில் உட்படுத்துகிறது.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

பார்த்தல் கேட்டல் சுவைத்தல் நுகர்தல் உணர்தல் என்ற ஐம்புலன்கள் மற்றும் மனம் புத்தி ஆகிய இந்த மூன்றும் மனிதனின் அதிகாரத்திற்கு உட்பட்டு இருப்பதால் இதில் ஆசைகள் தனது இருப்பிடமாக இருந்து கொண்டு செயல்படுகிறது. இந்த ஆசை தனது இருப்பிடமான புலன்கள் மனம் புத்தி வழியாக செயல்பட்டு ஞானத்தை மறைத்து உண்மை எது என்று தெரிந்து கொள்ள விடாமல் மனிதனை மயக்கத்தில் வைக்கிறது.

ஆசைகள் ஐம்புலன்கள் மனம் புத்தியின் வழியாக மனிதனிடம் போகங்களில் சுகம் உள்ளது என்று ஆசைகாட்டி மனித சக்திகளை மங்கச் செய்து பாவச்ல செயல்களில் ஈடுபடுத்தி மனிதனை வீழ்ச்சி அடையச் செய்கிறது. ஆகவே இறைவனை அடைய விரும்பும் மனிதன் ஐம்புலன்கள் மனம் புத்தி ஆகியவற்றிலிருந்து வரும் ஆசைகளை உடனடியாக விரட்டி அடித்து அழித்து விட வேண்டும். இயலவில்லை என்றால் செயல்பட விடாமல் தடுத்து வைக்க வேண்டும். இந்த ஆசைகள் வீட்டிற்குள் புகுந்து விட்ட பகைவனைப் போல் மனித பிறவி என்ற விலை மதிப்பற்ற செல்வத்தை வீணடித்து விடும்.

சுலோகம் -158

பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-39

அர்ஜூனா திருப்தி அடையாத நெருப்பைப் போன்றதும் காமம் என்ற வடிவத்தில் உள்ளதும் ஞானிகளுக்கு என்றுமே பகைவனுமாகிய இந்த காமத்தினால் மனிதனுடைய ஞானம் மறைக்கப் பட்டிருக்கிறது.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

நெருப்பில் எவ்வளவு நெய்யையும் விறகையும் போட்டாலும் நெருப்பானது போதும் என்று சொல்லாமல் மேலும் அதிகமாக எரிந்து கொண்டே இருக்கும். நிறையவும் நிறையாது. அது போலவே இறைவனை உணர்ந்த ஞானிகளுக்கு என்றுமே பகைவனாக இருக்கும் இந்த ஆசைகளை எவ்வளவு அனுபவித்தாலும் மேலும் இந்த ஆசைகளை அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணமும் வளர்ந்து கொண்டே இருக்கும். இந்த ஆசை என்ற பகைவனும் அதன் விளைவாக வரும் கோபம் என்ற பகைவனும் மனிதனுடைய ஞானத்தை மறைத்து வைக்கிறது.

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 100

சுலோகம் -157

பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-38

எவ்விதம் புகையால் நெருப்பும் அழுக்கினால் கண்ணாடியும் மறைக்கப்படுகிறதோ கருப்பை தசைகளால் கரு மறைக்கப்படுகிறதோ அது போலவே காமத்தினால் ஞானம் மறைக்கப்படுகிறது.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

நெருப்பை அதில் இருந்து வரும் புகை மறைத்து விடும். தெளிவாக அனைத்தையும் காட்டக்கூடிய கண்ணாடியை அழுக்கு சேர்ந்து மறைத்து விடும். கருவை கர்ப்பப்பை தசைகள் மறைத்து விடும். அது போலவே உயிர்களிடத்தில் உள்ள ஞானத்தை காமமும் கோபமும் மறைத்து விடும்.

சுலோகம் -156

பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-37

ரஜோ குணத்திலிருந்து உண்டாகியது இந்தக் காமமும் கோபமுமாகும். இது பெருந்தீனிக்காரன். போகங்களில் போதும் என்ற எண்ணமில்லாதவன் மேலும் பெரிய பாவி இதையே இந்த விசயத்தில் பகைவனாக அறிந்து கொள்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

ஒருவன் இறைவனை நோக்கிய யோகத்தில் ஈடுபடும் போதோ அல்லது தர்மத்தின் வழி செல்லும் போதோ பூர்வ ஜென்ம வாசனைகளின் காரணமாக ரஜோ குணம் தலை தூக்குகிறது. இதன் காரணமாக ஆசைகள் புலன்கள் வழியாக எளிதாக வந்து உலக விசயங்களில் இழுக்கிறது. இந்த ஆசைகளை அனுபவித்தாலும் பெருந்தீனீக்காரன் போல் மேலும் மேலும் என்று அடுத்த ஆசைகள் வந்து கொண்டே இருக்கிறது. இந்த ஆசைகளை அனுபவக்க முயற்சிக்கும் போது அது தடைபட்டால் மிகுந்த கோபம் ஏற்படுகிறது. இந்த கோபம் அடுத்தவர்களுக்கு தீமையை ஏற்படுத்துகிறது. இது பாவம் ஏற்பட காரணமாயிருக்கிறது. அனுபவித்த ஆசைகள் போதும் என்ற எண்ணமில்லாதவன் மேலும் பாவத்தை சேர்த்துக் கொள்கிறான். தணிக்க முடியாத ஆசையும் கோபமும் உயிர்களுக்கு மிகப்பெரிய விரோதிகள் இது உயிர்களின் அழிவிற்கு வழிவகுத்து விடுகிறது என்பதை அறிந்து கொள் என்று என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

சுலோகம் -155

பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-36

அர்ஜூனன் கிருஷ்ணரிடம் கேள்வி கேட்கிறான். கிருஷ்ணா இந்த மனிதன் தான் விரும்பா விட்டாலும் பலவந்தமாக தூண்டப்பட்டவன் போல எதனால் ஏவப்பட்டு பாவத்தை சேர்க்கிறான்?

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

ஒரு மனிதன் பாவம் செய்வதற்கு விருப்பப்படுவது கிடையாது. ஆனாலும் ஒரு அரசனின் கட்டளைக்கு அடிபணியும் சேவகன் போல ஐந்து புலன்களின் கட்டளைக்கு அடிபணிந்து ஒரு மனிதன் பாவம் செய்து விடுகிறான். ஏன் இவ்வாறு நடக்கிறது? என்று அர்ஜூனன் கிருஷ்ணரிடம் கேள்வி கேட்கிறான்.

சுலோகம் -154

பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-35

நன்கு கடைபிடிக்கப்பட்ட பிறருடைய தர்மத்தைக் காட்டிலும் குணக்குறைகள் இருந்தாலும் தன்னுடைய தர்மம் மிகவும் உயர்ந்தது. ஸ்வதர்மத்தைக் கடைபிடிப்பதில் இறப்பது மேன்மையை தரும். பிறருடைய தர்மம் பயத்தைக் விளைவிக்கும்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

அரசர்களுக்கு உண்டான தர்மம் என்றும் வியாபாரம் செய்பவர்களுக்கான தர்மம் என்றும் விவசாயம் செய்பவர்களுக்கான தர்மம் என்றும் ஒவ்வொரு தொழிலுக்கு உண்டான தர்மங்கள் பல இருக்கின்றன. அந்தந்த தொழிலை செய்பவர்கள் அந்தந்த தொழிலுக்கு உண்டான தர்மங்களை கடை பிடிக்க வேண்டும். பிறருடைய தொழிலுக்கான தர்மத்தை சிறந்ததாக இருக்கிறதே என்று தன் செய்யும் தொழிலுக்கு ஏற்ப பயன் படுத்தக் கூடாது. தன்னுடைய தொழிலுக்கு உண்டான தர்மத்தை கடைபிடிப்பதில் தன்னிடம் சில குணக்குறைகள் இருந்தாலும் தன் தொழிலுக்கான தர்மமே உயர்ந்தது. பிறர் செய்யும் தொழிலுக்கான தர்மத்தை கடைபிடித்தால் அதனால் பல பாவங்களை சேர்த்துக் கொள்ள வேண்டியது வரலாம். மேலும் தவறு செய்கிறோமோ என்ற பயத்தையும் உண்டு பண்டும். தன்னுடைய தொழில் தர்மத்தை விட்டு பிறர் செய்யும் தொழிலுக்கான தர்மம் சிறந்தது என்று தன் தர்மத்தை விடுவதை விட இறப்பதே மேன்மையை தரும்.

சுலோகம் -153

பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-34

ஒவ்வோரு புலனுக்குரிய நுகர்ச்சிப் பொருட்களிலும் விருப்பு வெறுப்புகள் மறைந்து இருக்கிறது. மனிதன் அவ்விரண்டு பிடியிலும் அகப்பட்டு விடக்கூடாது. ஏனெனில் அவ்விரண்டும்தான் இவனுடைய மேன்மைப் பாதையில் இடையூறு விளைவிக்கும் எதிரிகள்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

1.கண் – பார்த்தல் 2.காது- கேட்டல் 3.மூக்கு- நுகர்தல் 4.வாய் – பேசுதல் 5.மெய் – உணர்தல் ஆகிய ஐந்து புலன்களின் வழியே ஆசையும் விருப்பமும் ஏற்படுகின்றன. இவற்றை அனுபவிக்கும் போது அவற்றின் நுகர்ச்சிப் பொருளில் விருப்பங்களும் வெறுப்புக்களும் மறைந்து இருக்கிறது. மனிதன் அவற்றை அனுபவிக்கும் போது சில நேரங்களில் விருப்பங்கள் ஏற்படும். சில நேரங்களில் வெறுப்புக்கள் ஏற்படும். இந்த இரண்டிலும் மனிதன் அகப்பட்டு விடக்கூடாது. ஏனெனில் இறைவனை நோக்கி மேன்மை நிலைக்கு செல்ல விரும்பும் மனிதனுக்கு இவை இரண்டும் மிகப்பெரிய எதிரிகளாக இருக்கின்றன.