ராமாயணம் அயோத்தியா காண்டம் பகுதி -20

அயோத்தியில் தசரதர் தேரோட்டி சுமந்திரனின் வரவை ஆவலோடு எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தார். ஒரு வேளை மனதை மாற்றிக்கொண்டு ராமர் சுமந்தரனோடு திரும்பி வந்துவிடுவான் என்ற மனக்கோட்டையில் இருந்தார். அயோத்தி நகரை சுமந்திரன் நெருங்கினான். வழக்கமாக நகரத்தில் இருந்து வரும் சத்தம் ஒன்றும் இல்லாமல் பாழடைந்த ஊரைப்போல அமைதியாக இருந்தது அயோத்தி. ரதம் கோட்டை வாயிலை நெருங்கியதும் மக்கள் சுமந்திரனிடம் ராமர் எங்கே அவரை எங்கே விட்டீர்கள் என்று கேட்டுக்கொண்டே அவனை சுற்றிக்கொண்டார்கள். ராமர் கங்கை கரையில் ரதத்தை விட்டு இறங்கி என்னை அயோத்திக்கு செல்லுமாறு உத்தரவிட்டார். மூவரும் கங்கை கரையை கடந்து வனத்தில் தனியாக நடந்து சென்று விட்டார்கள் என்றான் சுமந்திரன். மக்கள் அனைவரும் கதறி அழ ஆரம்பித்தார்கள். பெண்களின் அழுகை சத்தம் ராஜவீதிகள் முழுவதும் சுமந்தரனுக்கு கேட்டுக்கொண்டே இருந்தது. துக்கத்தினால் தனது முகத்தை மறைத்துக்கொண்டு அரண்மனைக்குள் நுழைந்தான் சுமந்திரன்.

தசரதரின் அறைக்குள் நுழைந்தான் சுமந்திரன். அங்கே குற்றுயிராக இருந்த தசரதரிடம் ராமர் சொல்லி அனுப்பிய செய்தியை சொல்லினான் சுமந்திரன். தசரதர் ஒன்றும் பேசாமல் மௌனமாக இருந்தார். அப்போது கௌசலை தசரதரைப்பார்த்து கடுமையாக பேசினாள். உங்கள் சத்தியத்தை காப்பாற்ற வனத்திற்கு மகனை அனுப்பிவிட்டீர்கள். என்னுடைய துக்கத்தில் யார் பங்கெடுத்துக்கொள்வார்கள். உங்களுடைய துக்கத்தை பார்த்து நான் ஆறுதல் அடைந்து கொள்ளமுடியுமா? இங்கு கைகேயி இல்லை நீங்கள் பயப்பட வேண்டாம். தைரியமாக பேசுங்கள். உலகமே வியக்கும் வண்ணம் வீரனாக இருக்கும் என் மகனை காட்டில் விட்டு வந்த தங்கள் தேரோட்டி வந்து நிற்கின்றார். அவரிடம் ஒன்றும் பேசாமல் இருக்கின்றீர்கள். ராமர் எங்கே எப்படி இருக்கின்றார் என்று விசாரியுங்கள் என்று கோபமாக கூறினாள். புத்திர சோகத்தில் இருக்கும் தசரதரின் மனநிலையை புரிந்து கொள்ளாமல் கௌசலை கடுமையாக பேசினாள்.

சுமந்திரன் கௌசலையிடம் சமாதானமாக பேசினான். தேவி மனக்குழப்பத்தை விட்டு தைரியமாக இருங்கள். அயோத்தில் இருப்பது போலவே ராமர் வனத்திலும் ஆனந்தத்துடன் இருக்கிறார். லட்சுமணன் ராமருக்கு பணிவிடைகள் செய்து தன் தரும வாழ்க்கையின் பயனை அடைந்து வருகிறார். சீதை பிறந்தது முதல் காட்டில் இருந்ததைப்போலவே ராமருடன் சந்தோசத்துடன் இருக்கிறாள். உதய சந்திரனைப்போலவே சீதையின் முகத்தில் அழகு சிறிதும் குறையவில்லை. குழந்தையை போல் பயம் இல்லாமல் விளையாடிக்கொண்டிருக்கின்றாள். வனவாசத்தில் அவர்களை பார்ப்பது அரண்மணை தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருப்பவர்களை பார்ப்பது போலவே இருக்கிறது. நான் சொல்வது எல்லாம் உண்மை. உலகத்திற்கு ஒரு பாடமாக தருமத்தை வாழ்ந்து காண்பிக்கின்றார்கள். அவர்களின் தவம் உலகத்தில் பெரும் புகழுடன் என்றென்றும் நிற்கும் என்று கௌசலையை ஒருவாறு சமாதானப்படுத்தினான். கௌசலை சமாதானமடைந்தாலும் தசரதரை நிந்தித்துக்கொண்டே இருந்தாள்.

ராமாயணம் அயோத்தியா காண்டம் பகுதி -19

பரத்வாஜர் முனிவரின் ஆசிரமத்துக்குள் வந்த மூவரையும் ஆசிரமவாசிகள் தக்க மரியாதை செய்து வரவேற்றார்கள். ராமர் உலக நன்மைக்காக அரிய பல பெரிய செயல்களை செய்ய அவதரித்திருக்கிறார் என்று பரத்வாஜ முனிவர் அறிந்திருந்தார். வந்த மூவரையும் வரவேற்ற பரத்வாஜர் அங்கு வந்த காரணத்தை கேட்டுக்கொண்டார். அவர்களுக்கு சித்ரகூடம் என்னும் மலையைப் பற்றி சொன்னார். தெய்வீக இடத்திற்கு நிகரானது என்று அந்த இடத்தின் பெருமையை சொல்லி ஆத்ம சாதனங்கள் செய்ய ஏற்ற இடம் அங்கு செல்லுங்கள் என்றார். சித்ரகூடத்திற்கு செல்லும் வழி அடர்ந்த காட்டுப்பகுதி என்றும் அதனை கடப்பதற்கான வழிமுறைகளையும் செல்லும் வழியில் இருக்கும் சில சிறப்பு வாய்ந்த இடங்களைப்பற்றியும் கூறினார் பரத்வாஜர். அன்று அரவு அங்கு தங்கி விட்டு அதிகாலையில் பரத்வாஜர் ஆசிரமத்தில் இருந்து சித்ரகூடம் என்னும் இடத்திற்கு கிளம்பினார்கள்.

ராமர் லட்சுமணனிடம் நீ முன்னால் சென்று சீதை கேட்கும் பூக்கள் கனிவகைகளை பறித்துக்கொடுத்து முன்னால் செல். ஆயுதத்துடன் பாதுகாப்பாக பின்னால் நான் வருகிறேன் என்றார். லட்சுமணன் செடி கொடிகளை வெட்டி வழி எற்படுத்திக்கொண்டே முன்னால் சென்றான். லட்சுமணனுக்கு பின்னால் சீதையும் அவளுக்கு பாதுகாப்பாக ராமர் பின்னால் சென்றார். செல்லும் வழியில் இருக்கும் பறவைகள் விலங்குகள் செடி கொடிகளைப்பற்றியும் மலர்களைப்பற்றியும் கேள்விகள் கேட்ட வண்ணம் சென்று கொண்டிருந்தாள் சீதை. அவளுக்கு பதில் சொல்லிக்கொண்டே ராமர் அவள் பின்னால் வந்து கொண்டிருந்தார். மூவரும் உல்லாச பயணம் செல்வது போல மகிழ்ச்சியுடன் சென்று கொண்டிருந்தார்கள். அப்போது பரத்வாஜர் குறிப்பட்ட பெரிய ஆலமரம் ஒன்று வந்தது. அந்த ஆலமரத்தடியில் பரத்வாஜர் வழிகாட்டுதலின்படி சீதை பூஜைகள் செய்து பிரார்த்தனை செய்தாள். நடுவே ஆறு ஒன்று குறிக்கிட்டது. பரத்வாஜர் கூறியபடி மரக்கட்டைகளை வைத்து சிறிய ஓடம் செய்து அதில் பயணித்து சித்ரகூட மலை அடிவாரத்தை அடைந்தார்கள். .

சித்ரகூடத்தில் வண்ணப்பூக்களும் செடிகளும் பூத்துக்குலுங்கின. பூக்கள் மலர்ந்து உதிர்ந்து நடக்கும் இடமெல்லாம் பூக்களாக இருந்தது. அந்த இடத்தை பார்க்க பார்க்க அந்த இடத்தின் அழகு கூடிக்கொண்டே சென்றது. பழங்களும் கிழங்குகளும் நிறைய வளர்ந்திருந்தது. நீர் அருந்துவதற்கு மிகவும் சுவையுள்ளதாக இருந்தது. இந்த இடத்திலேயே குடில் அமைத்து தங்கிவிடலாம் என்றார் ராமர். சீதையும் லட்சுமணனும் அமோதித்தார்கள். லட்சுமணன் எல்லா வசதிகளுடன் காற்றுக்கு அசையாத பெரிய மழையை தாங்கும் வலிமை கொண்ட குடிலை கட்டி முடித்தான். ஐன்னலும் கதவுகளுடன் காற்றோட்டம் மிகுந்த வீடாக இருந்தது. சித்ரகூட மலைபிரதேசத்தில் நதிக்கரை ஓரத்தில் இந்திரன் சொர்க்கத்தில் வசிப்பது போல் மகிழ்ச்சியுடன் தங்கள் பதினான்கு ஆண்டுகள் வனவாசத்தை ஆரம்பித்தார்கள்.

ராமாயணம் அயோத்தியா காண்டம் பகுதி -18

லட்சுமணன் குகனிடம் மூன்று உலகத்தையும் யுத்தம் செய்து தனதாக்கிக்கொள்ளும் வல்லமை பெற்ற என் அண்ணன் புல் தரையில் படுத்து ஓய்வெடுக்கிறார். ஜனகர் மகாராஜாவின் புதல்வி சீதை சுகத்தை மட்டுமே அனுபவித்தவர். இப்போது தரையில் படுத்திருக்கிறாள். ராமனை வனத்திற்கு அனுப்பிய பின்பு அயோத்தி நகரம் எப்படி பிழைக்கப்போகிறதோ தெரியவில்லை. அரண்மனை முழுவதும் பெண்களின் அழுகுரலே கேட்டுக்கொண்டிருக்கும். ராமரை பிரிந்த துக்கத்தில் என் அன்னையர்கள் சுமத்ரையும் கௌசலையும் எப்படி உயிரோடு இருக்கின்றார்கள் என்றே எனக்கு தெரியவில்லை. வனத்திற்கு போ என்று தந்தை சொல்லிவிட்டார். அனால் அவர் ராமனை பிரிந்த துக்கத்தில் இனி உயிர் பிழைத்திருப்பது கடினமே. பதினான்கு வருடம் வனவாசம் இப்போது தான் ஆரம்பித்திருக்கின்றது. வனவாசம் முடிந்து நாங்கள் அரண்மனைக்கு திரும்பி செல்லும் போது யார் இருப்பார்கள் யார் இருக்க மாட்டார்கள் என்றே தெரியாது. இவ்வளவு துக்கத்தில் இருக்கும் எனக்கு தூக்கம் வரவில்லை என்றான். லட்சுமணன் கூறியதை கேட்ட குகனும் கண்ணீர் விட்டான். இருவரும் தூங்காமல் ராமருக்கும் சீதைக்கும் காவலாக இருந்து இரவு முழுவதும் பேசிக்கொண்டே இருந்தார்கள்.

அதிகாலையில் எழுந்த ராமர் குகனிடம் கங்கை நதிக்கரையை கடக்க ஒரு ஓடத்தை ஏற்பாடு செய்து தருமாறு கேட்டார். குகனும் தன் பணியாட்களிடம் சொல்லி ஓடம் ஒன்றை ஏற்பாடு செய்தார். மூவரும் கங்கை நதிக்கரையை கடக்க ஓடத்தில் ஏறினார்கள். குகன் ஓடத்தை செலுத்தினான். சீதை கங்கையை பிரார்த்திக்க ஆரம்பித்தாள். அனைனையே எங்கள் பதினான்கு வருட விரதம் முடிந்ததும் உன்னை கடந்து அயோத்திக்கு திரும்பி செல்ல அருள்புரிவாயாக என்று வேண்டிக்கொண்டாள். கங்கையின் மறுகரையை குகன் கடந்தான். குகனுக்கு தர வேண்டிய கூலிக்காக சீதை தன் மோதிரத்தைக் கொடுத்தாள். இதைக் கண்ட குகன் சுவாமி நாம் இருவரும் ஒரு தொழில் செய்பவர்கள். ஆற்றைக் கடக்க வைக்கும் ஓடக்காரன் நான். பிறவிக் கடலைக் கடக்க உதவும் ஓடக்காரர் நீங்கள். ஒரே தொழில் செய்யும் ஒருவருக்கொருவர் கூலி வாங்குவது தர்மம் ஆகாது என மோதிரத்தை வாங்க மறுத்தான். அவனது அன்பைக் கண்ட ராமர் உன்னையும் சேர்த்து தசரதருக்கு ஐந்து பிள்ளைகள் ஆகி விட்டோம் என்று உளமார வாழ்த்தினார்.

மூவரும் யார் துணையும் இன்றி முதன் முறையாக காட்டிற்குள் நடக்க ஆரம்பித்தார்கள். ராமர் லட்சுமணனிடம் நீ தான் இனி எங்களுக்கு காவல் படை என்றார். லட்சுமணனும் நீங்கள் முன்னால் செல்லுங்கள். உங்களை தொடர்ந்து அண்ணி சீதை வரட்டும் அவர்களை தொடர்ந்து நான் வருகிறேன். வனவாசத்தில் உங்களுக்கு கடினங்கள் ஏதும் வராமல் முடிந்தவரை பார்த்துக்கொள்கிறேன் என்றான். லட்சுமணா இக்காட்டின் அருகில் பரத்துவாஜர் முனிவரின் ஆசிரமம் உள்ளது. அவரிடம் சென்று அவரின் ஆசிர்வாதத்தையும் பெற்றுக்கொண்டு பதினான்கு வருட வனவாசத்தை எங்கு கழிப்பது என்று அவருடைய யோசனையை கேட்டு அதன் படி நடந்து கொள்ளலாம் என்றார். லட்சுமணனும் ஆமோதிக்க அங்கிருந்து மூவரும் கிளம்பி பரத்துவாஜர் முனிவரின் ஆசிரமத்துக்கு சென்று சேர்ந்தார்கள்.

ராமாயணம் அயோத்தியா காண்டம் பகுதி -17

ரதத்தில் அன்று முழுவதும் பயணப்பட்டு கங்கா நதிக்கரையை அடைந்தார்கள். அயோத்திக்கு திரும்பி போகும்படி தேரோட்டி சுமந்திரனுக்கு ராமர் கட்டளையிட்டார். சுமந்திரன் ராமரை விட்டு பிரிய மனமில்லாமல் அங்கேயே நின்று கொண்டிருந்தார். சுமந்திரனுக்கு ஆறுதல் சொன்ன ராமர் நாங்கள் மூவரும் மகிழ்ச்சியுடனேயே வனம் செல்கின்றோம் என்பதை அரண்மனையில் இருக்கும் அனைவரிடமும் தெரிவித்துவிடு என்றும் கைகேயியினால் நடைபெற்ற அந்த சம்பவங்களால் மனவருத்தம் ஏதும் அடையவில்லை என்று கைகேயியிடம் சொல்லிவிடு என்றும் சொல்லி ராமர் சுமந்திரனுக்கு விடை கொடுத்தார். மிகுந்த துயரத்துடன் காலி ரதத்தை ஒட்டிக்கொண்டு சுமந்திரன் திரும்பிச்சென்றான்

கங்கா நதிக்கரையின் அழகை அனுபவித்துக்கொண்டே மூவரும் நடந்தார்கள். கங்கை நதியில் ஓரிடத்தை கண்ட ராமர் இங்கு மிகவும் அழகாக இருக்கிறது இன்று இரவு நாம் இங்கை தங்கலாம் என்று சொன்னார். மூவரும் ஓர் மரத்தடியில் அமர்ந்தார்கள். அப்போது அந்த பிரதேசத்தின் தலைவனாக இருந்த குகன் ராமரின் மேல் அபார அன்பு கொண்டவன். ராமர் லட்சுமணன் வந்திருப்பதை அறிந்ததும் தன் பரிவாரங்களுடன் அவர்களை தரிசிக்க வந்தான். தூரத்தில் குகன் வருவதை அறிந்த ராமர் தானே குகனிடம் சென்று குகனை கட்டி அனைத்தார். குகனுடைய உபசாரங்கள் அபாரமாக இருந்தது. பலவிதமான உணவு பண்டங்களை குகனின் ஆட்கள் கொண்டு வந்து கொடுத்தார்கள். ராமரின் தவகோலத்தை கண்ட குகன் அயோத்தி உங்களுக்கு எப்படியோ அதேபோல் இந்த நகரமும் உங்களுடையது ஆகும். நீங்கள் இங்கு வசதியாக இருந்து கொள்ளலாம். பதினான்கு வருடங்களையும் தாங்கள் இங்கே இருந்து எங்களுடனேயே கழித்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கின்றேன் என்றான் குகன்.

ராமர் குகனிடம் பதினான்கு வருடங்கள் தவவாழ்க்கை முறையை வாழுவதாக எண்ணி இருக்கின்றேன். தவவாழ்க்கை விரதத்தில் கனிகளை தவிர்த்து வேறு எதையும் உண்ணக்கூடாது. உன் அன்புக்கு கட்டுப்பட்டு கனிகளை மட்டும் எடுத்துக்கொள்கிறேன். இங்கே இருந்து உங்கள் உபசாரங்களை பதினான்கு வருடங்களும் ஏற்றுக்கொண்டு வாழ்ந்தால் அது நான் கொண்ட சத்தியத்தில் இருந்து விலகுவது போலாகும். ஆகவே தன்னால் இங்கு இருக்க முடியாது நாளை இங்கிருந்து கிளம்பிவிடுவோம் என்றார்.

ராமருக்கும் சீதைக்கும் மரத்தடியில் புல்களை பரப்பி அன்று இரவில் தூங்க ஏற்பாடு செய்தான் லட்சுமணன். குகன் லட்சுமணிடம் நீங்கள் தூங்க தனியாக இடம் ஏற்பாடு செய்திருக்கின்றேன். இந்த இடத்தில் என்னை மீறி யாரும் வரமாட்டார்கள். எந்த பயமும் இல்லை. நீங்கள் நிம்மதியாக தூங்குங்கள் நான் காவலுக்கு இருக்கின்றேன் என்றான்.

ராமாயணம் அயோத்தியா காண்டம் பகுதி -16

ராமர் சென்ற ரதம் தசரதரின் கண்ணை விட்டு மறைந்ததும் கதறிக்கொண்டே கீழே விழுந்தார். ஒரு பக்கம் கௌசலையும் மறுபக்கம் கைகேயியும் தசரதரை பிடித்தார்கள். தசரதர் கைகேயியை பார்த்து பாவியே என்னை தொடாதே. என் முகத்தை பார்க்க நான் விரும்பவில்லை. உனக்கும் எனக்கும் இனி எந்த சம்பந்தமும் இல்லை. உன்னை விட்டேன் உன்னை விட்டேன் என்று சொல்லிக்கொண்டே கைகேயியின் கையை உதறினார். உன்னுடைய வரத்தின் படி பரதன் இந்த ராஜ்ஜியத்தை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டானேயானால் என் இறுதிக்காலத்தில் அவன் எனக்கு செய்யும் பிதுர்கடன் என்னை வந்து சேராது. உன் காரியத்தை நீ நடத்தி முடித்துக்கொண்டாய். கணவன் இல்லாத விதவைக்கோலத்தில் நீ மகிழ்ச்சியுடன் இரு. உன்னை நான் இனி பார்க்கமாட்டேன் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி கௌசலையின் மாளிகைக்கு திரும்பினார்.

தரசதர் கௌசலையிடம் புலம்ப ஆரம்பித்தார். ராமர் எவ்வாறு காட்டில் வசிப்பான். மெத்தையில் படுத்து சுகமாக உறங்கியவன் காட்டில் தரையில் படுத்து தலைக்கு கல்லை வைத்து தூங்குவான். உணவிற்கு காட்டில் அவனுக்கு என்ன கிடைக்குமோ சாப்பிட்டானோ இல்லையோ என்று கதறிக்கொண்டே இருந்தார். கௌசலை ராமர் சென்ற மிகப்பெரிய துக்கத்தில் இருந்த படியால் தசரதருக்கு ஆறுதல் ஒன்றும் கூற முடியாமல் அமைதியாகவே அழுதுகொண்டிருந்தாள்.

சுமத்ரை கௌசலைக்கு ஆறுதல் சொன்னாள். அக்கா சாஸ்திரமும் தருமமும் தெரிந்த தாங்கள் ஏன் துக்கப்படுகின்றீர்கள். தசரதருக்கு தைரியம் சொல்ல வேண்டிய தாங்கள் தைரியம் இழக்காதீர்கள். தந்தையின் சத்தியத்தை காப்பாற்ற ராமர் ராஜ்ஜியத்தை துறத்து வனம் சென்றிருக்கின்றான். சத்தியத்திற்கு மறுபெயரான ராமரை பெற்ற தாங்கள் பெருமைப்படவேண்டும். ராமர் சென்றதை நினைத்து துக்கப்பட வேண்டாம். ராமருடன் சீதையும் லட்சுமணனும் சென்றிருக்கிறார்கள். அவர்களை ராமரை நன்றாக பார்த்துக்கொள்வார்கள். நிச்சயமாக மூவரும் திரும்பி வருவார்கள். ராமர் அயோத்தியை அரசாள்வான் என்று சமாதானம் செய்தாள். சுமத்ரையின் வார்த்தைகளால் கௌசலை சிறிது ஆறுதல் அடைந்தாள்.

ராமர் சென்ற ரதத்துடனே மக்கள் பெருங்கூட்டமாக வனம் போக வேண்டாம் நாட்டிற்கு திரும்புங்கள் என்று கூக்குரலிட்டவாரே பின் தொடர்ந்து சென்றார்கள். ரதத்தை நிறுத்திய ராமர் மக்களிடம் பேச ஆரம்பித்தார். அயோத்தி நகரத்து மக்களே என் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பும் பிரியமும் நான் அறிவேன். அதே அன்பையும் பிரியத்தையும் இனி நீங்கள் பரதன் மீது செலுத்தி பரதனை திருப்தி அடைய செய்யுங்கள். அதுவே எனக்கு திருப்திதரும். என்னைவிட வயதில் சிறியவனாக இருந்தாலும் ஞானத்தில் சிறந்தவன் பரதன். என் தந்தையின் சத்தியத்தை காப்பாற்ற தருமத்தின் படி வனம் செல்கின்றேன். விரைவில் திரும்பி வந்துவிடுவேன். அரசரின் ஆணைப்படி நீங்கள் நடந்து கொள்ளவேண்டும். அனைவரும் திரும்பிசெல்லுங்கள் என்று தன் அன்பு நிறைந்த பார்வையால் மக்களை பார்த்து உத்தரவிட்டார். மக்கள் அனைவரும் நகரத்திற்கு திரும்பி நடக்க ஆரம்பித்தார்கள். ரதத்தை காட்டை நோக்கி செலுத்தினான் சுமந்திரன்.

ராமாயணம் அயோத்தியா காண்டம் பகுதி -15

ராமர் தசரதரிடம் தந்தையே வணக்கத்துடன் கேட்டுக்கொள்கிறேன். நான் ராஜ சுகங்கள் அனைத்தையும் விட்டுவிட்டு வனம் செல்ல வேண்டும் என்று தீர்மானித்திருக்கின்றேன். தவசிகள் வாழும் தவ வாழ்க்கையை வாழ விரும்புகின்றேன். தாங்கள் சொல்லும் செல்வமும் சேனை பரிவாரங்களும் தவ வாழ்க்கைக்கு உபயோகப்படாது. நீங்கள் சொல்லும் அனைத்தையும் நான் காட்டிற்கு கொண்டு சென்றால் யானையை தானாம் செய்த பிறகு அதனை கட்டும் கயிற்றின் மீது ஆசைப்படுவது போலாகும். ஆகையால் மண்வெட்டியும் ஒரு கூடை மட்டும் போதும் அதை மட்டும் கொடுங்கள் எனக்கு போதும் என்றார். கைகேயி சிறிதும் கவலைப்படாமல் ஓடிப்போய் தயாராக இருந்த மண்வெட்டியையும் கூடையையும் கொண்டு வந்து கொடுத்தாள். அதனை பெற்றுக்கொண்ட ராமர் தந்தையே நாங்கள் செல்கிறோம். நான் திரும்பி வரும்வரையில் தாய் கௌசலையை இங்கே விட்டு செல்கிறேன் அவர் மிகவும் துக்கத்தில் இருக்கிறாள். எனக்காகவே அவள் உயிரை வைத்துக்கொண்டிருக்கிறாள். நான் திரும்பி வரும் வரை பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு மூவரும் கிளம்பினார்கள். தசரதர் தேர் ஒட்டி சுமந்தனை அரைத்து மூவரையும் காட்டின் எல்லைவரை விட்டுவிட்டுவா என்று கண்ணீருடன் சொல்லி ராமர் செல்வதை காண முடியாமல் தனது கண்களை மூடிக்கொண்டார். அரண்மனை பெண்கள் அனைவரும் கண்ணீருடன் விடை கொடுத்தார்கள். தன் திட்டம் முழுமையடைந்து விட்டதாக கைகேயி மகிழ்ச்சி அடைந்தாள்.

ராமர் சென்றதும் தசரதர் நான் எத்தனையோ கன்றுகளை கொன்று தாய் பசுவை இம்சித்திருக்க வேண்டும். அதனாலேயே நானும் கைகேயியின் இம்சையினால் என் மகனை பிரிந்து வாடுகின்றேன் என்று சொல்லி கதறி அழுதார். சுமத்திரையிடம் விடைகொடுக்குமாறு வணங்கினார்கள். சுமத்திரை லட்சுமணனை கட்டி அணைத்து உன் அண்ணனிடம் நீ வைத்துள்ள அன்பை பார்த்து உன்னை பெற்றதன் பாக்கியத்தை அடைந்துவிட்டேன். ராமரை காப்பது உன் கடமை. உன் அண்ணன் அருகில் இருந்து பத்திரமாக பார்த்துக்கொள். தம்பிக்கு அண்ணன் குருவும் அரசனும் ஆவான். இது நம் குலத்தின் தருமம். இதனை காப்பாற்றுவாயாக போய் வா லட்சுமணா என்று சுமத்திரை மூவருக்கும் விடைகொடுத்தாள்.

மூவரும் ரதத்தில் ஏறினார்கள். சீதை ராமருடன் காட்டில் இருக்கப்போகின்றோம் என்று சிரிப்பும் சந்தோசமுமாக ஏறினாள். தேரோட்டி சுமந்திரன் ராமரை பார்த்து இப்போது முதல் பதினான்கு வருடம் ஆரம்பம் ஆகின்றது என்று சொல்லி தேரில் ஏறினான். வீதியில் காலை முதல் குதூகலத்துடன் கொண்டாட்டத்தில் இருந்த மக்கள் இப்போது துக்கத்துடன் இருந்தார்கள். புறப்பட்ட ரதத்தை தடுத்த மக்கள் ராமரை கண்குளிர பார்த்துக்கொள்கின்றோம் சிறிது நேரம் நிறுத்திவைக்கும் படி மக்கள் கூப்பாடு போட ஆரம்பித்தார்கள். இங்கிருந்தால் மக்களிடம் இன்னும் துக்கம் அதிகமாகும் என்று எண்ணிய ராமர் ரதத்தை வேகமாக செலுத்த உத்தரவிட்டார். மிகவும் கஷ்டப்பட்டு ரதத்தை சுமந்திரன் அரண்மணை வாயியில் இருந்து ரதத்தை வெளியே கொண்டு வந்து வேகமாக செலுத்தினான். தசரதர் வெளியே வந்து ரதம் புறப்பட்டதில் இருந்து கண்ணை விட்டு மறையும் வரை ரதத்தை பார்த்துக்கொண்டே வெகு நேரம் நின்றார்.

ராமாயணம் அயோத்தியா காண்டம் பகுதி -14

ராமரும் சீதையும் லட்சுமணனும் தசரதரிடம் வீழ்ந்து வணங்கினர். ராமர் தசரதரிடம் பேச ஆரம்பித்தார். தந்தையே சீதையும் லட்சுமணனும் என்னுடன் வருகின்றார்கள். அவர்கள் என்னோடு வரும் முடிவிலிருந்து பின் வாங்க மறுக்கின்றார்கள். நாங்கள் மூவரும் வனவாசம் செல்கிறோம் எங்களை ஆசிர்வதித்து அனுப்புங்கள் என்றார். அதற்கு தசரதர் ராமா கைகேயிக்கு கொடுத்த வரங்களால் நான் கட்டுப்பட்டவனாக இருக்கின்றேன். கைகேயியினால் நாம் வஞ்சிக்கப்பட்டிருக்கிறோம். அவளால் இந்த பாவ காரியத்திற்கு நான் துணை போவது போல் ஆகிவிட்டது. நாட்டிலிருந்து உன்னை வெளியேற்ற வேண்டிய இந்த அடாத செயலை கனவிலும் நான் நினைத்துபார்க்கவில்லை. கைகேயியிடம் நான் கொடுத்த வரத்திற்கு நான் கட்டுப்பட்டாலும் நீ கட்டுப்பட வேண்டிய அவசியம் இல்லை. தந்தையின் வாக்கை சத்தியமாக்க வேண்டும் என்று வனம் போக தீர்மானித்துவிட்டாய். நீ உன் பலத்தை பயன்படுத்தி இந்நாட்டின் அரசனாக ஆகியிருக்கலாம். ஏன் அப்படி செய்யவில்லை என்று கேட்டார்.

அதற்கு ராமர் இந்த நாட்டை நீங்கள் அரசராக இருந்து இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆட்சி செய்யவேண்டிய இந்த அரச பதவிக்கு நான் ஆசைப்படவில்லை. என் பலத்தை பயன் படுத்தி அரசபதவியை பெற்றால் நீங்கள் கொடுத்த வாக்கை காப்பாற்றாமல் சத்தியத்தை இழந்து பொய்யனாகி விடுவீர்கள். உங்கள் சத்தியத்தை காப்பாற்றுவது என் கடமை அதனை மகிழ்ச்சியுடன் செய்துமுடிப்பேன். பதினான்கு வருடம் வனவாசத்தில் இருந்து விரைவில் திரும்பிவருவேன். பரதனை விரைவில் வரவழைத்து அவனுக்கு பட்டாபிஷேகம் செய்து அவனை ஆசிர்வதித்து உங்களது இரண்டாவது வரத்தையும் நிறைவேற்றுங்கள் என்றார்.

ராமா உன்னிடம் ஒரு சிறு கோரிக்கை வைக்கின்றேன். இன்று இரவு தங்கிவிட்டு நாளை அதிகாலை இங்கிருந்து செல்வாய். உன்னை மனதார பார்த்து திருப்தி அடைய விரும்புகின்றேன் என்றார். அதற்கு ராமர் என் தாய்க்கு கொடுத்த வாக்கின்படி நான் மனதால் அரசபதவியை துறந்துவிட்டேன். என் மனம் வனத்தை பற்றி இருக்கிறது. உங்களுடைய மனதில் வருத்தமும் குறையும் வேண்டாம். ஒரு நாள் செல்வதை ஒத்திப்போட்டால் தாய்க்கு நான் கொடுத்த வாக்கை மீறுவது போலாகும். மேலும் நாளை செல்வதனால் அதிகப்படியான பயன்கள் ஏதும் ஏற்படாது. என்னை ஆசிர்வதியுங்கள் நாங்கள் செல்கின்றோம் எங்களுக்கு உத்தரவு கொடுங்கள் என்றார். தருமத்தில் இருந்து பிறழாத உத்தமனே குலத்தின் பெருமையை பெருக்குவாய். பயம் உன்னை விட்டு விலகி நிற்கட்டும். நீ சென்றுவா என்று அனுமதி கொடுத்தார்.

தசரதன் தேரோட்டியான சுமந்தனிடம் நம்முடைய சேனேத்தலைவர்களிடம் சொல்லி சதுரங்க சேனே ஒன்றை உருவாக்கி ராமர் பாதுகாப்பாக செல்ல ஏற்பாடு செய்துவிடு. மேலும் ராமன் காட்டில் சுகமாக வாழ்வதற்கு தேவையான தனம் தானியம் பணியாட்களுடன் சகல பொருட்களையும் ஏற்பாடு செய்து அனுப்பி வைத்துவிடு என்று உத்தரவிட்டார். அருகிலிருந்த கைகேயி சிரித்தாள். ராஜ்யத்தில் உள்ள செல்வத்தை எல்லாம் வாரி ராமருடன் கொடுத்தனுப்பி விட்டு மீதி இருப்பதை பரதனுக்கு தருவீர்களா. வரத்தை மிக அழகாக பூர்த்தி செய்கின்றீர்கள் என்றாள்.

ராமாயணம் அயோத்தியா காண்டம் பகுதி -13

ராமனும் சீதையும் வனம் செல்வது உறுதியாகி விட்டது. தனக்கு உரிய செல்வங்கள் அனைத்தையும் சீதை தானம் செய்துவிட்டாள். அரச உடைகளை களைந்து தபஸ்விகளுகான உடைகளை அணிந்து கொண்டு கிளம்ப ஆயத்தமானார்கள். லட்சுமணன் ராமரின் முன்னிலையில் வந்தான். தங்களுடன் நானும் வருகிறேன். தங்களை விட்டு பிரிந்நிருப்பது என்னால் இயலாத காரியம். தங்களையும் அண்ணியாரையும் காவல் காத்துக்கொண்டு தங்களுக்கு காட்டில் கனிவகைகளை தேடிக்கொடுத்து பணிவிடைகளை செய்கிறேன். என்னையும் அழைத்து செல்லுங்கள் என்றான் லட்சுமணன்.

தந்தை கைகேயியிடம் வரங்களை கொடுத்து சிக்கிக் கொண்டிருக்கின்றார். பரதன் ஆட்சி செய்துகொண்டிருப்பான். மாயையில் சிக்கிக்கொண்டிருக்கும் கைகேயியின் பிடியில் கௌசலையும் சுமித்ரையும் இருப்பார்கள். கைகேயி இவர்களுக்கு நல்லது செய்ய வாய்ப்பில்லை. நீயும் என்னுடன் வந்துவிட்டால் கௌசலைக்கும் சுமித்ரைக்கும் பணிவிடைகள் செய்ய யாரும் இருக்கமாட்டார்கள் இங்கிருந்து அவர்களை பார்த்துக்கொள் என்றார். தாய் தந்தைக்கு செய்யும் சேவை மிகப்பெரிய தர்மமாகும் இந்த தர்மத்தை செய்து கொண்டு இங்கேயே இரு என்றார்.

அண்ணா கைகேயி மாயையால் மயங்கி இருக்கிறாள். ஆனால் தங்களின் தம்பி பரதன் தங்களுடைய மகிமையால் சிறப்பான ஆட்சியை மக்களுக்கு கொடுப்பதோடு கௌசலையையும் சுமித்ரையையும் கௌரவமாக பார்த்துக்கொள்வார். இதில் எள் அளவும் சந்தேகம் வேண்டாம். மேலும் கௌசலையை சார்ந்து இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை பார்த்துக்கொள்ளும் வல்லமை அன்னை கௌசலையிடம் இருக்கிறது. இதற்காகவே ஆயிரக்கணக்கான கிராமங்கள் அவரிடம் இருக்கிறது. உங்களை விட்டு என்னால் எப்படி பிரிந்து இருக்க முடியாதோ அது போலவே என்னைவிட்டும் தங்களால் பிரிந்து இருக்கமுடியாது. உங்களுடைய வெளியில் இருக்கும் உயிர் நான் என்று ஏற்கனவே சொல்லியிருக்கின்றீர்கள். அப்போதே என்னை தங்கள் செல்லும் இடத்திற்கெல்லாம் என்னையும் அழைத்துச்செல்வதற்கு தாங்கள் அனுமதி அளித்துவிட்டீர்கள். இப்போது என்னை தடுக்காதீர்கள் என்னையும் தங்களோடு வர அனுமதியுங்கள். தங்களுக்கு பின்னே கையில் வில் ஏந்தியவனாக நான் உங்களுடன் காட்டிற்கு வருவேன் என்றான் லட்சுமணன்.

ராமர் லட்சுமணனையும் காட்டிற்கு அழைத்து செல்ல சம்மதித்தார். லட்சுமணனிடம் அரச உடைகளை களைத்து தவஸ்விகளுகான உடைகளை அணிந்து கொள். ஜனகரின் வேள்விச்சாலையில் வருணபகவான் நமக்கு அளித்த இரண்டு விற்கள் எவ்வளவு அம்புகளை எடுத்தாலும் குறையாத அம்பாறத்தூணிகள் சூரியனைப்போல ஒளி வீசும் வாள் ஆகியவற்றை வசிஷ்டரிடம் கொடுத்து வைத்திருக்கின்றோம். வசிஷ்டர் இருப்பிடம் சென்று அவரிடம் கொடுத்து வைத்திருந்த அரிய அஸ்திரங்களை எடுத்துக்கொண்டு தன்னோடு வருமாறு கட்டளையிட்டார் ராமர். மூவரும் தசரதரிடம் விடை பெற்றுக்கொள்வதற்காக அவர் இருப்பிடம் சென்றார்கள்.

ராமாயணம் அயோத்தியா காண்டம் பகுதி -12

ராமரின் பேச்சைக்கேட்ட சீதை பெரும் கோபத்துடன் தர்மம் அனைத்தும் அறிந்த தாங்கள் இவ்வாறு கூறுவது எனக்கு வியப்பை தருகிறது. கணவன் வேறு மனைவி வேறு என்று தங்கள் பிரித்து கூறிகின்றீர்கள். ராமர் வனவாசம் செல்ல வேண்டும் என்றால் அப்போது ராமரின் பாதியாக இருக்கும் சீதைக்கும் இந்த உத்தரவு பொருந்தும். அதுவே தர்மம் காட்டிற்கு வந்தால் துக்கப்படுவேன் என்று தாங்கள் எண்ண வேண்டாம் வனவாசத்தை மகிழ்ச்சியுடனேயே அனுபவிப்பேன். உங்களுடன் இருக்கும் போது வனவாசம் என்பது எனக்கு விளையாட்டாகவே இருக்கும். உங்களுடன் இருந்தால் சொர்க்கமும் எனக்கு வேண்டாம். என்னை விட்டு பிரிந்து செல்லாதீர்கள். நீங்கள் என்னை விட்டு பிரிந்தால் மரணித்துவிடுவேன். நீங்கள் செல்லும் காட்டுப்பகுதிக்கு நான் உங்களுக்கு முன்னே சென்று கல் முள் என்று அனைத்தையும் விலக்கி நல்ல பாதையை தங்களுக்கு அமைத்து தருவேன் என்னையும் தாங்கள் அழைத்துச்செல்லுங்கள் என்றாள்.

ராமர் சீதையிடம் காட்டிற்கு நீ என்னுடன் வந்தால் கொடூரமான விலங்குகள் இருக்கும். அரண்மனையில் சுகமாக வாழ்ந்துவிட்டு காட்டில் மண் தரையில் படுக்கவேண்டி இருக்கும். என்று காட்டில் வாழ்ந்தால் வரும் பிரச்சனைகளை சொல்லி வரவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

சீதையின் கண்களில் நீர் பெருகியது. புலி சிங்கம் போன்ற விலங்குகள் கூட தங்களை கண்டால் தூரமாக விலகிச்செல்லும். தாங்கள் என் அருகில் இருந்தால் நீங்கள் சொல்லும் மழை புயல் காற்று வெயில் என்று அனைத்தையும் என்னால் பொருத்துக்கொள்ள முடியும். நீங்கள் இல்லாமல் இந்த அரண்மணையில் உள்ள சுகங்கள் கூட எனக்கு துக்கமாக இருக்கும். நான் ஜனகரின் மகள். என் தாயும் தந்தையும் எனக்கு கணவன் மனைவிக்கான தர்மத்தை பற்றி சொல்லியிருக்கிறார்கள். கணவன் இருக்கும் இடத்திலேயே மனைவி இருக்க வேண்டும் இதுவே தர்மம். கணவன் செல்லும் பாதையை பின்பற்றி செல்ல வேண்டும் இதுவே என் தந்தை எனக்கு சொன்னது. நீங்கள் உங்கள் தந்தையின் வாக்கை நீங்கள் மீற மாட்டீர்கள். அது போல் என் தந்தை எனக்கு சொல்லிக்கொடுத்த தர்மத்தை நான் மீற மாட்டேன். மேலும் ஒரு செய்தியை சொல்கிறேன். நான் குழந்தையாக இருக்கும் காலத்தில் ஜோதிடர்களை வைத்து என் ஜாதகத்தை என் தந்தை கணித்தார். அப்போது அவர்கள் சில வருடங்கள் வனவாசத்தில் இப்பெண் இருப்பாள் என்று சொல்லியிருக்கின்றார்கள். நான் தனியாக வனவாசம் செய்ய முடியாது. அதற்கான சூழ்நிலையும் ஏற்படவில்லை. இப்போது சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. அதனை நான் பயன் படுத்திக்கொள்கிறேன். என்னை தடுக்காதீர்கள். நானும் உங்களுடன் வருவேன் என்று தீர்க்கமாக சொன்னாள் சீதை.

சீதையின் வேண்டுதலை ராமரால் மறுக்க முடியவில்லை. உன்னை அழைத்துச்செல்கிறேன் இருவரும் செல்வோம். உன்னுடைய நகை மற்றும் உனக்கு உரிய பொருள்கள் அனைத்தையும் இல்லாதோர்க்கும் உனது பணியாட்களுக்கும் தானம் அளித்துவிட்டு சாதாராண உடைகளை அணிந்துகொள் இவை அனைத்தையும் விரைவாக செய்துவிடு நாம் விரைவில் அயோத்தியை விட்டு கானகம் செல்லவேண்டும் என்று சீதையிடம் கூறினார். சீதை மகிழ்ச்சியில் திளைத்து தனது உடைமைகளை தானம் கொடுக்க ஆரம்பித்தாள்.

தொடரும்……..

ராமாயணம் அயோத்தியா காண்டம் பகுதி -11

லட்சுமணன் பேசியது கௌசலைக்கு ஆறுதலாக இருந்தது. ராமர் கௌசலையிடம் பேசினார். தாயே காட்டிற்கு தாங்கள் என்னுடன் வருவது சரியாக இருக்காது. கணவனுடன் மனைவி இருப்பதே தர்மம். நான் சென்றதும் தந்தைக்கு உதவியாக தாங்கள் இருந்து தந்தையை பார்த்துக்கொள்ளுங்கள். தாங்களும் என்னுடன் வந்துவிட்டால் தந்தை மேலும் வருத்தப்படுவார். அது அவரின் உடல் நிலையை பாதிக்கும். நான் தனியாகவே செல்கிறேன். பதினான்கு வருடங்களில் திரும்பி வந்துவிடுவேன். நாம் அனைவரும் மகிழ்ச்சியுடன் பல்லாண்டுகள் வாழ்ந்திருப்போம். அதுவரை பொருத்திருங்கள் என்றார்.

லட்சுமணனைப் பார்த்து பேச ஆரம்பித்தார் ராமர். என் மீது நீ வைத்திருக்கும் அன்பை நான் அறிவேன். நீ சொல்லும் யோசனை முற்றிலும் தவறு. கோவம் மனிதனின் முதல் எதிரி. அதனை இப்பொழுதே நீ விட்டுவிடு. உன்சக்தியை நான் அறிவேன். அனைவரையும் தோற்கடித்து இந்த ராஜ்யத்தை நீ எனக்காக சம்பாதித்து கொடுப்பாய். எனக்கு உன் மீது நம்பிக்கை உள்ளது. ஆனால் தந்தையின் உத்தரவு தர்மமாக இருந்தாலும் அதர்மமாக இருந்தாலும் அவராக கூறியிருந்தாலும் வேறு யாருடைய தூண்டுதலினால் கூறியிருந்தாலும் அதனை நிறைவேற்றுவது என் கடமை. தந்தை கைகேயிக்கு கொடுத்த வாக்கை மீறினால் இத்தனை ஆண்டு காலம் அவர் செய்த பூஜைகள் யாகங்கள் தானதர்மங்கள் அனைத்தும் பயனில்லாமல் போகும். தந்தையுன் வாக்கை காப்பாற்றுவது மிகப்பெரிய தர்மம். இந்த தர்மத்தை செய்யாமல் வேறு எதனை செய்தாலும் இதற்கு ஈடு ஆகாது என்று கௌசலையையும் லட்சுமணனையும் சமாதானப்படுத்தினார் ராமர். கௌசலையிடம் விடைபெற வணங்கினார் ராமர். மங்கள மந்திரங்களை சொல்லி தந்தையின் ஆணையை செய்து முடித்துவிட்டு வெற்றிகரமாக திரும்பி வரவேண்டும் என்று திலகமிட்டு வாழ்த்தி விடைகொடுத்தாள் கௌசலை. ராமர் சிரித்துக்கொண்டே பதினான்கு வருடங்களையும் சுலபமாக கழித்துவிட்டு வந்துவிடுவேன் என்று சொல்லிவிட்டு சீதையை பார்க்க தான் இருந்த மாளிகைக்கு கிளம்பினார்.

சீதையிடம் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டு காட்டிற்கு செல்லும் நெருக்கடியில் இப்போது ராமர் இருந்தார். ராமருடைய வருகையை பார்த்து ஆவலோடு காத்திருந்தாள் சீதை. ராமர் அரசனாக பட்டாபிஷேகம் செய்யும் எந்த அறிகுறியும் இல்லாமல் வருவதை கண்டு சிறிது குழப்பமடைந்தாள் சீதை. பட்டாபிஷேகம் செய்யும் இன்று தங்களுடன் இருக்கும் வெண்குடை சமாரம் எங்கே? பாடகர்கள் ஓதுவார்கள் எங்கே? தாங்களுடன் வரும் தங்களது சேவகர்கள் எங்கே? என்று கேள்விகளாக கேட்டுக்கொண்டே இருந்தாள் சீதை. ராமர் சீதையிடம் பொருமையாக சொல்ல ஆரம்பித்தார். எனது தந்தை கைகேயிக்கு கொடுத்த வரத்தை காப்பாற்ற பதினான்கு வருடங்கள் காட்டிற்கு சென்று தவம் செய்யப்போகிறேன். பரதன் அரசனாகப்போகின்றான். நீ அமைதியாக அரண்மணையில் வாழ்ந்திருந்து உனது மாமியார் மாமனாருக்கு பணிவிடைகள் செய்து பரதனை அரசனாக அங்கிகரித்து வந்தனை செய்வாயாக என்று சீதையிடம் சொல்லி முடித்தார் ராமர்.