சிவபெருமான் தன்மீது பக்தி கொண்ட அடியவர்கள் மற்றும் சிற்றுயிர்கள் மீது திருவிளையாடல்கள் நிகழ்த்தி தனது அன்பையும் கருணையும் அவர்களுக்கு அருளும் வரலாறே திருவிளையாடல் புராணம் ஆகும்.
திருவிளையாடல் புராணமானது தமிழ் கடவுளான முருகப்பெருமானால் அகத்தியருக்கு அருளப்பட்டு பின் அகத்தியரின் மூலம் மற்ற முனிவர்கள் அறிந்து கொண்டனர். நந்தி தேவர் சனத்குமார முனிவருக்கு இந்த லீலைகள் பற்றி கூறினார். அதை சனத்குமாரர் வியாசருக்கு கூறினார். அதனை வியாசர் கந்த புராணத்தின் ஒரு பகுதியான ஆலாசிய மான்மியம் நூலில் வியாசர் இயற்றினார். பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் புராணத்தை தமிழில் பாடியுள்ளார். திருவிளையாடல் புராணமானது திருஆலவாய் மான்மியம் மதுரைப் புராணம் என்ற வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. ஹோலாஷ்ய மகாத்மியம் எனும் வடமொழி நூலிலும் சொல்லப்பட்டுள்ளது. தமிழ் மொழியில் மூன்று புராண நூல்கள் சிவபெருமானின் மூன்று கண்களாகப் போற்றப்படுகின்றன. சேக்கிழார் இயற்றிய பெரிய புராணம் இறைவனாரின் வலது கண்ணாகவும் பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடல் புராணம் இடது கண்ணாகவும் கச்சியப்ப சிவாச்சாரியாரின் கந்தபுராணம் நெற்றிக் கண்ணாகவும் போற்றி சிறப்பிக்கப் படுகின்றன.
மொத்தம் நான்கு திருவிளையாடல் புராணங்கள் உள்ளது.
- திருவாலவாயுடையார் திருவிளையாடல் புராணம் இதனை பெரும்பற்றப்புலியூர் நம்பி இயற்றினார்.
- கடம்பவன புராணம் இதனை தொண்டை நாட்டு இலம்பூர் வீத நாத பண்டிதர் இயற்றினார்.
- சுந்தரபாண்டியம் இதனை தொண்டை நாட்டு வாயர்பதி அனதரியப்பன் இயற்றினார்.
- திருவிளையாடல் புராணம் இதனை பரஞ்சோதி முனிவர் இயற்றினார். இதில் பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையால் புராணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அறியப்படுகிறது
பரஞ்சோதி முனிவர் வேதாரண்யம் என்றழைக்கப்படும் திருமறைக்காட்டில் தோன்றியவர். இவருடைய தந்தையார் மீனாட்சி சுந்தரதேசிகர் ஆவார். பரஞ்சோதி முனிவர் தமிழ் மொழி வட மொழி திருமுறைகள் சித்தாந்த சாஸ்திரங்கள் ஆகியவற்றை நன்கு கற்றுணர்ந்தவர். தம் தந்தையிடம் சிவதீட்சை பெற்றவர். சிவபெருமானிடம் மிகுந்த பக்தி கொண்டு பல திருத்தலங்களுக்குச் சென்று தரிசனம் செய்து கொண்டிருந்தார். அவ்வாறு மதுரையில் மீனாட்சி சோமசுந்தரரை தரிசித்து மதுரையில் தங்கியிருந்தார். அப்போது மீனாட்சியம்மன் அவருடைய கனவில் தோன்றி இறைவனின் திருவிளையாடல்களை தமிழில் பாட கட்டளையிட்டார். மீனாட்சி அம்மனின் ஆணைக்கு இணங்க ஹோலாஷ்ய மகாத்மியம் எனும் நூலை அப்படியே மொழி பெயர்க்காமல் தமிழுக்கே உரிய தான செய்யுள் நடையில் சத்தியாய் எனத்தொடங்கும் திருவிளையாடல் புராணத்தை பரஞ்சோதி முனிவர் இயற்றினார். இதில் 3363 செய்யுள்கள் உள்ளன. இந்நூல் மதுரையின் தலபுராணமாகவும் போற்றப்படுகிறது
- காப்பு
- வாழ்த்து
- நூற்பயன்
- கடவுள் வாழ்த்து
- பாயிரம்
- அவையடக்கம்
- திருநாட்டுச்சிறப்பு
- திருநகரச்சிறப்பு
- திருக்கையிலாயச்சிறப்பு
- புராணவரலாறு
- தலச் சிறப்பு
- தீர்த்தச் சிறப்பு
- மூர்த்திச் சிறப்பு
- பதிகம் ஆகிய இவை 343 பாடல்களால் பாடப்பட்டுள்ளன. 344 வது செய்யுள் முதல் சிவபெருமானின் திருவிளையாடல் ஆரம்பம் ஆகிறது.
திருவிளையாடல் புராணமானது மதுரைக்காண்டம் கூடற்காண்டம் திருஆலவாய்காண்டம் என மூன்று காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மதுரைக்காண்டத்தில் 18 படலங்களும் கூடற்காண்டத்தில் 30 படலங்களும் திருஆலவாய்காண்டத்தில் 16 படலங்களும் உள்ளன.
திருவிளையாடல் புராணத்தில் கூறப்பட்டுள்ள சிவபெருமானின் 64 திருவிளையாடல்கள்
- இந்திரன் பழி தீர்த்த படலம்
- வெள்ளையானை சாபம் தீர்த்த படலம்
- திருநகரங்கண்ட படலம்
- தடாதகை பிராட்டியார் திருஅவதாரப் படலம்
- தடாதகை பிராட்டியாரின் திருமணப் படலம்
- வெள்ளியம்பலத் திருக்கூத்தாடிய படலம்
- குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலம்
- அன்னக் குழியும் வைகையையும் அழைத்த படலம்
- ஏழுகடல் அழைத்த படலம்
- மலையத்துவசன் அழைத்த படலம்
- உக்கிரபாண்டியன் திருவவதாரப் படலம்
- உக்கிர குமாரனுக்கு வேல்வலை செண்டு கொடுத்த படலம்
- கடல் சுவற வேல் விட்ட படலம்
- இந்திரன் முடிமேல் வளை எறிந்த படலம்
- மேருவை செண்டால் அடித்த படலம்
- வேதத்திற்கு பொருள் அருளிச்செய்த படலம்
- மாணிக்கம் விற்ற படலம்
- வருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம்
- நான்மாடக்கூடல் ஆன படலம்
- எல்லாம்வல்ல சித்தரான படலம்
- கல் யானைக்கு கரும்பு தந்த படலம்
- யானை எய்த படலம்
- விருத்த குமார பாலாரன படலம்
- கால் மாறி ஆடிய படலம்
- பழி அஞ்சின படலம்
- மாபாதகம் தீர்த்த படலம்
- அங்கம் வெட்டின படலம்
- நாகம் எய்த படலம்
- மாயப் பசுவை வைத்த படலம்
- மெய் காட்டிட்ட படலம்
- உலவாக்கிழி அருளிய படலம்
- வளையல் விற்ற படலம்
- அட்டமாசித்தி உபதேசித்த படலம்
- விடை இலச்சினை விட்ட படலம்
- தண்ணீர்ப் பந்தல் வைத்த படலம்
- இரசவாதம் செய்த படலம்
- சோழனை மடுவில் வீட்டிய படலம்
- உலவாக் கோட்டை அருளிய படலம்
- மாமனாக வந்து வழக்குரைத்த படலம்
- வரகுணனுக்கு சிவலோகம் காட்டிய படலம்
- விறகு விற்ற படலம்
- திருமுகம் கொடுத்த படலம்
- பலகை இட்ட படலம்
- இசை வாது வென்ற படலம்
- பன்றி குட்டிக்கு முலை கொடுத்த படலம்
- பன்றிக்குட்டிகளை மந்திரிகள் ஆகிய படலம்
- கரிக்குருவிக்கு உபதேசம் செய்த படலம்
- நாரைக்கு முத்தி கொடுத்த படலம்
- திருவால வாயான் படலம்
- சுந்தரப் பேரன் செய்த படலம்
- சங்கப்பலகை கொடுத்த படலம்
- தருமிக்கு பொற்கிழி அளித்த படலம்
- கீரனைக் கரையேற்றிய படலம்
- கீரனுக்கு இலக்கணம் உபதேசித்த படலம்
- சங்கத்தார் கலகம் தீர்த்த படலம்
- இடைக்காடன் பிணக்குத் தீர்த்த படலம்
- வலை வீசின படலம்
- வாதவூர் அடிகளுக்கு உபதேசித்த படலம்
- நரி பரியாக்கிய படலம்
- பரி நரியாக்கிய படலம்
- மண் சுமந்த படலம்
- பாண்டியன் சுரம் தீர்த்த படலம்
- சமணரைக் கழுவேற்றிய படலம்
- வன்னியும் கிணறும் இலிங்கமும் அழைத்த படலம்.